இன்னொரு விக்கெட்டா ஞானேஷ் குமார்? போராட்டம் அத்தோடு ஒய்ந்து விடுமா? டாக்டர்.கிருஷ்ணசாமிக்கு டவுட்!
சென்னை: தலைமை தேர்தல் ஆணையரை பதவி விலக கோரி டெல்லியில் போராட்டத்தால் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், வீழப்போகும் இன்னொரு விக்கெட்டா ஞானேஷ் குமார்? என கேள்வி எழுப்பியுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி, இந்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமாரே பதவி விலகினாலும், போராட்டம் அத்தோடு ஓய்ந்துவிடுமா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு தேசத்திலும் வாழக்கூடிய ஒரு மனிதனுக்கு இரண்டு முக்கியமான குடியுரிமை அம்சங்கள் உறுதி செய்யப்பட வேண்டும். ஒன்று, அவனுடைய சம்பந்தப்பட்டது. இரண்டாவது, ஜனநாயக நாடாக இருந்தால் வாக்குரிமை உறுதி செய்யப்படுவது.

இவை இரண்டும் கேள்விக்குறியாக்கப்படுகின்றபொழுது அல்லது சட்டரீதியாக அன்றி நிராகரிக்கப்படுகின்றபொழுது, அவனுடைய அடிப்படை உரிமையே பறிக்கப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.
ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான முகவரி, அந்த நாட்டினுடைய சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்துவது. அந்தத் தேர்தல் முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு இருப்பது. அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சுதந்திரம் பெற்ற பல வருடங்களுக்குப் பிறகுதான் ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. ஆனால், இந்திய தேசத்தில் இந்திய அரசியலமைப்புச் சாசனம் 1950 ஜனவரி 26-இல் அமலுக்கு வந்தபோதே, அன்றைய காலகட்டத்தில் 21 வயது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுடைய வாக்குரிமை உறுதி செய்யப்பட்டது.
இதுவரையிலும் 18 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுவிட்டன. இந்தியா முழுமைக்கும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கும், வாக்காளர் சேர்க்கையை ஒழுங்குபடுத்துவதற்கும் முழு சுதந்திரம் பெற்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் விமர்சனத்துக்கு உள்ளானாலும், எஸ்.ஐ.ஆர் (SIR) என்று அழைக்கப்படக்கூடிய தீவிர வாக்காளர் சேர்க்கை/திருத்தப் பட்டியல் திட்டத்துக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.
குறிப்பாக, அண்மையில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மாநிலங்களில் திட்டமிட்டே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; அதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் காரணம் என்றும், மேலும் இது ஓர் அரசியல் கட்சிக்குச் சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என்ற குற்றச்சாட்டு எழுந்து, இப்பொழுது தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அவர்களை நீக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இதே போன்ற எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் அமலுக்கு வந்தது; கடும் விமர்சனத்துக்கும் ஆளானது. இருந்தாலும் கூட, தமிழகத்திலே அனைத்து அரசியல் கட்சிகள், மக்களிடத்தில் இருந்த விழிப்புணர்வின் காரணமாகப் பெரிய அளவிற்கு திட்டமிட்டு வாக்காளர் நீக்கம் எதுவும் நடைபெற்றதாகப் புகார் எதுவும் எழவில்லை. ஆனால், டெல்லி தலைநகரிலேயே லட்சக்கணக்கான வாக்காளர்கள், அதுவும் இந்தியா முழுமைக்கும் வடக்கு மாநிலங்களில் 13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகப் புகார் எழுந்து, இப்பொழுது நாடெங்கும் கரப்பான் பூச்சி அமைப்பினரும், காங்கிரஸ் தலைமையிலும் டெல்லியே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
டெல்லி, பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் திட்டமிட்டுக் கொத்துக் கொத்தாகத் தகுதியான வாக்காளர்கள் அரசியல் காரணங்களுக்காக நீக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் பல ஊடகங்களில் ஆதாரமாக வெளிவந்திருக்கின்றன. இப்பொழுது இதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நிகழ்கின்றன. கடந்த மாதத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்காகக் கல்வி அமைச்சரை நீக்க வலியுறுத்திய போராட்டத்தைக் காட்டிலும், இது தீவிரமடைந்திருப்பது தெரிகிறது. உச்ச நீதிமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
எந்தவிதமான அரசியல் பாகுபாடும் இன்றி நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இப்பொழுது குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பது வலுவான கட்டமைப்பு கொண்ட இந்திய நாட்டிற்கு உகந்தது அல்ல. இது ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டமாக வெளியே தெரிந்தாலும் கூட, இந்தக் குறி இரண்டு முக்கியமான தலைகள் மீது வைக்கப்படுகிறது. இது பாஜக ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டமாகவே கருதப்பட வேண்டும். இந்தப் போராட்டங்களை அந்நிய சக்திகள் தூண்டுகின்றன என்று அரசு நிச்சயமாக விமர்சிக்கும். ஆனால், அது பிரச்சினைக்குத் தீர்வு தருமா என்று தெரியவில்லை.
13 கோடி பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது? தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் என்று சொன்னால், அவர் தானாக முன்வந்து பதவி விலகிவிட வேண்டும். அல்லது அரசின் உயர்மட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் என்று சொன்னால், அவ்வளவு எளிதாக எதுவும் நடந்துவிடாது. பிரதமரோ, மத்திய அரசின் உள்துறை அமைச்சரோ இதற்குப் பொறுப்பேற்றுக்கொள்ளப் போவதில்லை. இதைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையும் பாஜக அரசுக்கு எதிராகக் கிடைக்காது என்ற அடிப்படையில், பாஜக-வுக்கு எதிரான அனைத்துச் சக்திகளும் ஒருங்கிணைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமாரே பதவி விலகினாலும், போராட்டம் அத்தோடு ஓய்ந்துவிடுமா என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. அவர்களுடைய அடுத்த குறி வேறு முக்கியமான இரண்டு அதிகார மையங்களை நோக்கித்தான் இருக்கும்.
பிற தேசங்களில் நடந்த சூழலைப் போலத் தற்போது இந்தியாவில் உருவாகி வருகிறது. நாடாளுமன்றங்களுக்கு வெளியே மக்கள் மன்றங்களின் சக்தி அதிகரித்து வருகிறது. மாற்றங்கள் என்ற பெயரில் வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மேலைநாடுகளில் நடந்த மாற்றங்கள் எதிர்பார்த்த அடிப்படை மாற்றங்களைக் கொடுத்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. ஏனெனில், இப்பொழுது போராட்டக் களத்திலே அதிகமாகப் பங்கெடுக்கக்கூடிய ஜென்-ஸி (Gen Z) இளைஞர்கள், 'மாற்று, எல்லாவற்றையும் மாற்று' என்ற முழக்கத்தை மட்டுமே முன்னெடுக்கிறார்கள். ஆனால், மாற்றம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், தொலைநோக்குப் பார்வை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பெரிய கருத்துகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஏறக்குறைய 10, 15 வருடங்களுக்கு முன்பு 'துனிசியா' என்ற ஒரு மிகச் சிறிய நாட்டில்தான் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக அரசியல் மாற்றம் உருவாக்கப்பட்டது. அவர்களுக்கெல்லாம் பெரிய சித்தாந்தம் ஒன்றும் இருப்பதில்லை. தமிழகத்தில் 2026-லும் அதேபோன்று 'மாற்று மாற்று' என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே.
இந்திய தேசம் மிகப்பெரியது. பல குறைகள் இருந்தாலும், கடந்த 10 15 வருடங்களாக ஒரு நிலையான ஆட்சி இந்தியாவில் நீடித்து வருகிறது. அதுவே அண்டை நாடுகளுக்கும், பல மேலை நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகவும், கண்ணை உறுத்திக்கொண்டும் இருக்கும். எனவே, உள்ளும் புறமும் எழுந்துள்ள அழுத்தங்களையும், பெரும் குற்றச்சாட்டுகளையும் மத்திய அரசு எப்படிச் சமாளிக்கப் போகிறது? மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவோடு அல்லது அவர்களின் பின்னால் அணிவகுத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் துணையோடு நடக்கக்கூடிய இந்தப் போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் செல்லுமா? அதனால் மத்திய அரசின் வீழப்போகும் இன்னொரு விக்கெட்டாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இருக்க போகிறாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனினும், டெல்லியில் போராட்டம் விஸ்வரூபம் எடுக்காமல் தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளிவருகின்றன. போராடுவது மக்களின் உரிமை; சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க நாங்கள் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறோம் என்று அரசு சொல்லக்கூடும். ஆனால், அரசின் நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் எல்லை மீறிப் போய்விடக்கூடாது என்பதே நம்முடைய ஆதங்கம்.
தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போல, இப்பொழுது இந்தியா எங்கும் மீண்டும் வாக்காளர் சேர்க்கைப் படிவங்கள் கொடுக்கப்பட்டு, புதிய வாக்காளர் சேர்க்கை தீவிரமாக நடைபெறுவதாகச் செய்திகள் வருகின்றன. இதன் மூலம் இதை எவ்வாறு போராட்டக்காரர்கள் அணுகப் போகிறார்கள் என்று இப்போது சொல்ல முடியாது. இது காலங்கடந்த செயல், அல்லது கண்துடைப்பு, அல்லது ஏமாற்று வேலை என்று விமர்சிக்கக்கூடும்.
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் பரபரப்பாக காட்சிகள் மாறி வருகின்றன. போராட்டக்காரர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவது என்பது அரசின் தற்காப்பு நடவடிக்கை; ஆனால், எக்காரணம் கொண்டும் அவர்கள் மீது எவ்விதமான வன்முறையும் ஏவப்படக் கூடாது; அவர்களின் போராடும் உரிமையும் பறிக்கப்படக் கூடாது என்பதே நமது வேண்டுகோள் ஆகும்." என கூறியுள்ளார்.





Click it and Unblock the Notifications
