"ஸ்டாலின் இருக்கிறார்.. பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது!" கி.வீரமணி பேச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திக தலைவர் கி வீரமணி, திமுக ஆட்சியை வெகுவாக பாராட்டிப் பேசினார்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு பெரியார் பன்னாட்டமைப்பு சார்பில் சமூக நீதிக்கான கி. வீரமணி விருது வழங்கப்பட்டது.
"திராவிட இயக்கத்தை.. எந்த கொம்பனாலும் தொட்டு கூட பார்க்க முடியாது.." முழங்கிய முதல்வர் ஸ்டாலின்

கி வீரமணி
இதில் பேசிய கி வீரமணி, "தமிழ்நாட்டில் நடக்கும் அற்புதமான திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு உலகமே வியந்து காண்கிறது. எதிரிகள் நிலைகுலைந்து போய் உள்ளார்கள். ஆட்சியில் குறை சொல்ல எதுவுமே இல்லாமல், அவர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். 45 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டிருந்தார். மிசாவில் நாங்கள் பெற்ற அனுபவம் வாழ்க்கையில் முக்கியமானது. அவ்வளவு மோசமான அனுபவத்தை மற்றொரு முறை நாங்கள் சந்திப்போமா என தெரியவில்லை.

சுத்தப் பொய்
எது வந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவத்தை இந்த சம்பவம் தான் அளித்தது. தமிழக அரசு இது தொடர்பாக அமைக்கப்பட்ட இஸ்மாயில் கமிஷனில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. எங்களை எப்படி நடத்தினார்கள், எந்தளவுக்குக் கொடூரமாகத் தாக்கினார்கள் என்பதெல்லாம் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தலைமையில் நடந்த இந்த விசாரணை கமிஷன் இருக்கும் போதே பொய் சொல்கிறார்கள்.

ஆதாரத்துடன் பதிலடி
ஸ்டாலின் மிசாவில் கைதே ஆகவில்லை என்று பாஜக மாநில தலைவர் சொல்கிறார். அந்தளவுக்குப் பொய் சொல்கிறார். அவர்களிடம் இந்த அரசு குறித்துக் குறை எனச் சொல்ல எதுவுமே இல்லை என்பதே இது காட்டுகிறது. இதுபோன்ற பொய்களுக்கு ஆதாரத்துடன் பதில் தரத் தயாராகவே உள்ளோம். அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. சமூக நீதி கொள்கை உணர்வுடன் களத்தில் போராடியவர்கள் தான் இப்போது அமைச்சர்களாக உள்ளனர்.

பெரியார் மண்
சமூக நீதி காக்க சட்டப்போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள். மக்கள் போராட்டத்தை நடத்த நாங்கள் நடத்துகிறோம். முதல்வர் ஸ்டாலின் இரும்பு கோட்டையால் ஒரு ஆட்சியை நடத்தி வருகிறார். இந்த கோட்டையில் மோதினால் உங்கள் மண்டை உடையுமே தவிரக் கோட்டைக்கு எதுவும் ஆகாது. இந்த கோட்டைக்குள் யாராலும் நுழைய முடியாது. ஆரியத்தால் வால் ஆட்ட முடியாது. ஆர்எஸ்எஸ் அதன் பணிகளைப் பெரியார் மண்ணில் நுழைக்க முடியாது.

வாய்ப்பில்லை
இதன் காரணமாகவே கட்சி பேதமன்றி கருஞ்சட்டை தோழர்கள் பின்னால் வந்து நிற்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு உலகமே வியக்கிறது. உலகத்தையே புரட்டிப் போட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின் 2024ஆம் ஆண்டுக்குப் பின், திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுக்க ஏற்படும்" என்றார்.