சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேலம் இரும்பாலை வட இந்திய கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கப்படுவதா? டிச.30-ல் தி.க. போராட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: சேலம் இரும்பாலையை வட இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து வரும் 30-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கி.வீரமணி கூறியுள்ளதாவது: தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோதிலிருந்து சேலம் இரும்பாலை தேவை; சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இரும்பு தாதுக்கள் கிடைக்கும் என்று நிலவியல் ஆய்வாளர்கள், நிபுணர்கள் (Geological Experts and Research Scholars) கூறிய சான்றாவணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கோரிக்கையை ஒரு மக்கள் இயக்கமாகவே நடத்தினார்கள்.

Dravidar Kazhagam to hold protest on Dec.30 against Salem Steel Plant privatisation move

திராவிடர் கழகம் தொடக்கத்திலிருந்து தமிழ்நாடு தொழில் மயமானால்தான் வளம்பெறும்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருகும்; தமிழ்நாடு பொருளாதாரத்திலும் முன்னோடி மாநிலமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று தொடர்ந்து பிரச்சாரம், போராட்டங்கள் வாயிலாக வற்புறுத்தி வந்ததன் விளைவாகவே நெய் வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் பொது நிறுவனமாக ஆகியது; ஆனால், தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பை தலைகீழாக்கி- வேலை வாய்ப்புகள் அத்தனையும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. பிரதமர் மோடி ஆட்சியில் வடவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டு வருவதோடு, அதற்கென நிலம் கொடுத்தவர்களின் குடும்பத்தவர்களுக்குக் கூட (இத்தனை ஆண்டுகள் உருண்டோடியும்கூட) - பல கட்சிகளின், இயக்கங்களின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகும்கூட அசையாத 'நந்தி' போல் நெய்வேலி நிறுவனம் மவுன சாமியாராக, செயலற்ற ஸ்தம்பிதமாக உள்ளது! மறுபுறம் வடக்கே ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு நெய்வேலி நிறுவனத்தின் தொழில் பகுதிகளைத் (யூனிட்ஸ்) தூக்கிக் கொண்டு போகும் அவல நிலை!

இன்றைய ஆர்.எஸ்.எஸ்., ஒன்றிய ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுவதில் எல்லா பொதுத்துறை அமைப்புகள், நிறுவனங்கள் வேக வேகமாக தனியாருக்கே ஏலம் என்ற நாடகம் மூலம் படிப்படியாக - ஆக்டோபஸ் என்ற எட்டுக்கால் பிராணியின் கொடுங்கரங்கள் நீண்டு ஆக்கிரமிப்பதுபோல, அதானிகள், அம்பானிகள், டாடாக்கள், பிர்லாக்களுக்கே குத்தகை அல்லது விற்பனை மூலம் ஆகிறது!
இதன்மூலம், மக்களாட்சிக்கு விடை கொடுத்து, கார்ப்பரேட் ஆட்சியை ஒருபுறம் ஏற்படுத்துகிறது.
மறுபுறத்தில் சமூகநீதியையும் தனியார்த் துறைக்குப் பொதுத் துறை மாறும்போது - அங்கே இட ஒதுக்கீடு இல்லாத ''அவாளுக்கு வசதியான'' நிலை இருப்பதால், அதனை மெல்ல மெல்லக் கொன்றுக் குழிதோண்டிப் புதைக்கும் 'ஒரு கல்லில்' இரண்டு மாங்காய் அடிக்கும் சூழ்ச்சிகளை வியூகமாக்கி வேக நடைபோடுகிறது! அந்தத் திட்டத்தின்கீழ், சேலம் உருக்காலையை - தனியார் மயமாக்கி, அங்கு வேலை பார்க்கும் உள்ளூர் மற்றும் தமிழ்நாட்டுப் பணியாளர்களை ''வீட்டுக்கனுப்பி'' வடவர் மயமாக்கிடும் ஒரு திட்டத்தை அமைக்க, செயல்படுத்த திட்டமிட்டு வருகின்றனர்!
இதுபற்றி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான தோழர் வில்சன் எம்.பி., அவர்கள் நேற்று (20.12.2022) கேள்வி கேட்டு, ஒன்றிய அமைச்சரின் பதிலையும் பெற்றிருக்கிறார்!

முன்பு சேலத்தில் இரும்பாலையை - வெறும் உருக்காலையாக மாற்றியபோதே, திராவிடர் கழகம் போராடியது. அதன் பிறகு தனியார் மயப் பாம்பு புற்றிலிருந்து தலைகாட்டியவுடன் அதனை திராவிடர் கழகம் போராட்டத் தடிமூலம் புற்றுக்குள் தள்ளியது.இப்போது மீண்டும் துணிந்து அது ''அதானி, அம்பானிகளுக்கு'' - கார்ப்பரேட்டு கன முதலாளிகளுக்கு மடை மாற்றம் செய்ய ஆயத்தமாக்கப்படும் அநியாயம் அரங்கேறவிருக்கிறது! இதனைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசும், நமது முதலமைச்சரும், அத்துணைக் கட்சி அமைப்பினரும் ஓரணியில் நின்று, ஒன்றுபட்டுக் குரல் எழுப்பித் தடுப்பணை எழுப்பியாகவேண்டும். அதற்கு முன்னோட்டமாக 30.12.2022 அன்று சேலம் மாநகரில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழகம், அதன் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில், அமைப்பாளர் இரா.குணசேகரன் முன்னிலையில், ஒன்றிய அரசின் பணிமனை முன்பு நடத்தும். பக்கத்து மாவட்டக் கழகத் தோழர்கள், அறப்போரான இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கி.வீரமணி அறிவித்துள்ளார்.

4,000 ஏக்கரை தனியாருக்கு தாரை வார்க்க மும்முரம்! தமிழகம் ஓரணியில் திரளும்! காங்கிரஸ் எச்சரிக்கை!4,000 ஏக்கரை தனியாருக்கு தாரை வார்க்க மும்முரம்! தமிழகம் ஓரணியில் திரளும்! காங்கிரஸ் எச்சரிக்கை!

English summary
Dravidar Kazhagam will hold protest on Dec.30 against Salem Steel Plant privatisation move.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X