"நூடுல்ஸ் சாப்பிடுவதால் ஆபத்தில்லை! ஆனால் அடிக்கடி சாப்பிட்டால்.." புதிய ஆய்வில் தெரிய வந்த பகீர் தகவல்
சென்னை: இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் மிகவும் மலிவான, அதேநேரம் ஈஸியாக சமைக்கக்கூடிய உணவாக உள்ளது. இருப்பினும், இது உடலுக்கு நல்லதா என்று கேட்டால் அந்த விவாதம் வேறு மாதிரி போய்விடும். இதற்கிடையே நூடுல்ஸை தினசரி சாப்பிட்டால் என்னவாகும்.. அது நமது உடல்நிலையில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு முடிவுகளை நாம் பார்க்கலாம்.
மாணவர்களுக்கு, ஆபீஸ் வேலை செல்வோருக்கும் பட்ஜெட்டில் உணவு ரெடி செய்ய நூடுல்ஸ் தான் முக்கியமான உணவாக இருக்கிறது. மேலும், பொருளாதார ரீதியாக இக்கட்டான சூழல் ஏற்படும்போதும் கூட பலரும் பட்ஜெட் விலையில் சாப்பிட நூடுல்ஸ் பக்கமே போவார்கள். ஆனால், நூடுல்ஸ் தினசரி உணவாக மாறினால் என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

நூடுல்ஸ்
விலை மட்டுமின்றி நூடுல்ஸ் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய ஒரு உணவுப் பொருள். அதைச் சில நிமிடங்களில் செய்துவிடலாம்.. சேமிக்க எளிதானவை, நீண்ட காலம் கெட்டுப்போகாமலும் இருக்கும். மேலும் சிறு கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட் வரை அனைத்திலும் கிடைக்கும். மேலும், நாம் புதிதாக ஒரு இடத்திற்குச் செல்லும்போது, அங்கு உணவு செட் ஆகவில்லை என்றால் நூடுல்ஸை வைத்தே ஓரிரு நாட்கள் ஓட்டிவிடலாம். இப்படி நூடுல்ஸுக்கு சாதகமாகப் பல பாயிண்டுகள் உள்ளன.
இருப்பினும், அது உடலுக்கு நல்லதா என்றால் அது பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. நூடுல்ஸ்களில் ஊட்டச்சத்து போதுமானதாக இல்லை. அதில் பெரும்பாலும் கோதுமை அல்லது மைதா மாவு நூடுல்ஸ் மற்றும் மசலா பொடி மட்டுமே இருக்கிறது. ஓரிரு பிராண்டுகளில் மட்டும் கொஞ்சம் காய்ந்த காய்கறிகள் அல்லது வறுத்த பூண்டு இருக்கிறது. மேலும், நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் உப்பு மிக அதிகமாக இருக்கும். நூடுல்ஸில் 600-1,500 மி.கி சோடியம் இருக்கலாம். இது ஒட்டுமொத்தமாக நாம் ஒரு நாளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சோடியத்திற்கு கிட்டத்தட்ட இணையானது.
உடல்நிலை பாதிப்புகள்
தொடர்ச்சியாக அதிக சோடியம் எடுத்துக் கொள்ளும்போது இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு அழுத்தத்தை ஏற்படும். மேலும், நூடுல்ஸ்களில் நார்ச்சத்து மிகக் குறைவாக இருக்கும். சீரான செரிமானத்திற்கும், ஆரோக்கியமான குடலையும் பராமரிக்க நார்ச்சத்து முக்கியம்.
இது மட்டுமில்லை.. இன்ஸ்டன்ட் நூடுல்ஸில் புரதமும் குறைவாக உள்ளது. கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் நூடுல்ஸ் சாப்பிட்ட உடனேயே வயிறு புல் ஆனது போல உணரலாம். ஆனால் முட்டை, பன்னீர் அல்லது இறைச்சி உள்ளிட்ட புரதங்கள் இல்லாததால் மீண்டும் கொஞ்ச நேரத்திலேயே பசிக்க ஆரம்பிக்கும்.. மேலும், நூடுலிஸில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் குறைவாக உள்ளன.
தீங்கு ஏற்படுமா
எப்போதாவது நூடுல்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு மிக பெரிய தீங்கு ஏற்படாது. இருப்பினும், அதைத் தினசரி சாப்பிடத் தொடங்கினால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இது தொடர்பாக தென்கொரியாவில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது (வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல்) வளர்சிதை மாற்ற நோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. இதய நோய், நீரிழிவு மற்றும் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறார்கள்.
எப்படி ரிஸ்க்கை குறைக்கலாம்
நூடுல்ஸ்ஸை அடிக்கடி சாப்பிடும்போது உடனடியாக அது பாதிப்பு ஏற்படுத்தாது என்ற போதிலும், சில காலத்திலேயே அது நமது ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக சோடியம் காரணமாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் கூட ஏற்படலாம். மேலும், நார்ச்சத்து குறைவாக இருப்பதால் மலச்சிக்கல், மற்றும் டைப் 2 நீரிழிவு மற்றும் குடல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரிக்கிறது.
அதேநேரம் நீங்கள் எப்போதாவது ஒரு நாள் நூடுல்ஸ் சாப்பிடுவதில் தவறில்லை. இருப்பினும், அதில் காய்கறிகளைச் சேர்க்கலாம். மேலும், புரதத்திற்கு (வேகவைத்த அல்லது வறுத்த முட்டை, பன்னீர், சிக்கன் ஆகியவற்றை சேர்க்கலாம். மேலும், மசாலா பாக்கெட்டில் தான் உப்பு அதிகம் இருக்கும் நிலையில், அதை முழுமையாகப் போடாமல் குறைவாகப் போட்டும் பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications