பிஎல்எம் நிறுவனர் பிரேம்குமார் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு.. ரூ.5000 கோடி மோசடி புகாரில் சோதனை
சென்னை: சென்னையில் பிஎல்எம் (BLM) நிறுவனத்தின் நிறுவனர் ஆர். பிரேம்குமாருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட ரூ.5000 கோடி மோசடி புகார் தொடர்பாக, கோயம்பேட்டிலுள்ள பிஎல்எம் அலுவலகம் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் பிரேம்குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், இப்போது அமலாக்கத்துறை களமிறங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கம் (பிஎல்எம்) கடந்த 2006-ம் ஆண்டு ஆர். பிரேம்குமார் உள்ளிட்ட உறுப்பினர்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் 155 கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் சுமார் 4.64 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு சுமார் ரூ.162 கோடி வரவு செலவு நடைபெறுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிஎல்எம் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான நவீன், அதன் நிறுவனர் பிரேம்குமார் மீது கோழிக்கோடு குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி பிரேம்குமார் கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது, தவறான புரிதலின் அடிப்படையில் புகார் அளித்ததாகவும், புகாரைத் திரும்பப் பெறுவதாகவும் நவீன் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.
கைது - நீதிமன்ற உத்தரவு
இந்த சூழலில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி பிரேம்குமாரை கேரள குற்றப்பிரிவு போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவரை கேரளாவுக்கு அழைத்து செல்வதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டதால், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, அக்டோபர் 30-ம் தேதி கோழிக்கோடு குற்றவியல் நீதிமன்றம் 4-ல் நடைபெற்ற விசாரணையின்போது, பிரேம்குமாரின் கைது சட்டவிரோதமானது என்றும், உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் கூறி அவரை எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக பிஎல்எம் நிறுவனம் தெரிவித்தது.
நிறுவனம் விளக்கம்
இதனிடையே, பிரேம்குமார் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்றும், நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுவதாகவும் பிஎல்எம் நிறுவனத்தின் துணைத் தலைவர் எஸ். முருகன், நிர்வாக இயக்குநர் கே. மனோகரன் ஆகியோர் இணைந்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் வைப்புத்தொகைகள் முதிர்வடையும் தேதியில் உரிய லாபத்துடன் திருப்பி வழங்கப்பட்டு வருவதாகவும், நிறுவனத்தின் கணக்குகள் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு மத்திய பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதுமட்டுமல்ல, நிறுவனத்துக்கு எதிரான புகார்களை சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
ED அதிரடி சோதனை
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் பிஎல்எம் நிறுவனத்தின் நிறுவனர் பிரேம்குமாருக்குத் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கியுள்ளனர்... கோயம்பேட்டிலுள்ள பிஎல்எம் அலுவலகம் மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சுமார் ரூ.5000 கோடி மோசடி புகார் தொடர்பாக நடைபெறும் இந்தச் சோதனையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன... ஏற்கனவே கைது, நீதிமன்ற விடுதலை, நிறுவனத்தின் விளக்கம் என அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், தற்போது அமலாக்கத்முதறை சோதனையால் மேலும் கவனம் பெற்றுள்ளது...!!


Click it and Unblock the Notifications
