‘டாப்’ தலைவர் மூலம் ஓபிஎஸ்ஸுக்கு ‘கேட்’ போட முயன்ற எடப்பாடி.. கூடவே இருந்தாராம்! அப்படி போகுதா கதை?
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், குஜராத் சென்றிருந்தபோது, எடப்பாடி பழனிசாமி செல்லாத நிலையிலும், தனக்கு ஆதரவான ஒரு தலைவர் மூலம், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க ஈபிஎஸ் முயற்சித்ததாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், அவர் செல்லவில்லை. இதுதொடர்பாக பூபேந்திர படேலுக்கு கடிதம் எழுதிவிட்டார்.
குஜராத் சென்ற ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
ஓபிஎஸ், மோடி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகச் சந்தித்துப் பேசுவதை விரும்பாத எடப்பாடி பழனிசாமி, ஒரு முக்கிய தலைவர் மூலம் மூவ் செய்துள்ளார்.

குஜராத் சென்ற ஓபிஎஸ்
குஜராத் முதலமைச்சராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக பதவியேற்றார். குஜராத் தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

எடப்பாடிக்கு அங்கீகாரம்?
அதிமுக இரு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது. டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். எடப்பாடி பழனிசாமியை முதல்முறையாக பாஜக அரசு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு, அழைப்புக் கடிதம் அனுப்பியது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ் கடிதம்
இதையடுத்து, மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவுக்கு நான் தான் ஒருங்கிணைப்பாளர், எனது தலைமையிலேயே கட்சி செயல்படுகிறது, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்ததை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை, அதுதொடர்பான வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன, இனிமேல், அவரை இடைக்கால பொதுச் செயலாளர் என்று அழைக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, பாஜக மேலிடத்தோடு நெருக்கமான சில தலைவர்களும் டெல்லிக்கு தூது சொன்னதாகக் கூறப்படுகிறது.

பாஜக மேலிடம் அழைப்பு
இதற்கிடையே தான் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். குஜராத், காந்திநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாஜவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவருக்கும் பாஜக மேலிடம் சார்பில் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

ஓபிஎஸ் - ரவீந்திரநாத்
அதன்படி, தமிழகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருந்தது. அழைப்பை ஏற்று, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் அதற்கு முன்தினம் மாலையே சென்னையில் இருந்து விமானத்தில் அகமதாபாத் சென்றார். பின்னர், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அவருடன் அதிமுக எம்பி ரவீந்திரநாத் கலந்து கொண்டார். அதேபோன்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈபிஎஸ் எழுதிய கடிதம்
அதேநேரம், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குஜராத் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்தார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி குஜராத் பூபேந்திர படேலுக்கு அனுப்பிய கடிதத்தில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளபோதிலும், ஏற்கனவே திட்டமிட்ட முக்கிய நிகழ்வுகள் இருக்கும் காரணத்தால் விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உங்கள் தலைமையின் கீழ் குஜராத் தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

பதிலடி?
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் சென்னை வந்தபோதும் தனியாக சந்திக்க எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தொடர்ந்து பாஜக தலைமை எடப்பாடியை சந்திப்பதை புறக்கணித்து வந்ததற்கு பதிலடியாகத்தான், குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜக மேலிடம் அழைப்பு விடுத்தும் எடப்பாடி பழனிசாமி குஜராத் செல்லாமல் புறக்கணித்து விட்டார் என்று கூறப்படுகிறது. எடப்பாடி கடிதத்தில் குறிப்பிட்டது போல, அன்று சென்னையிலோ அல்லது வெளியூரிலோ பெரிய அளவில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் மூவ்
குஜராத்தில் நடைபெற்ற முதல்வர் பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்காத நிலையிலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக ஒரு மாஸ்டர் மூவை அரங்கேற்ற முயற்சித்ததாக கிசுகிசுக்கிறது அதிமுக வட்டாரம். இந்த பதவியேற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான ஒரு கட்சித் தலைவரும் பங்கேற்றார். அவர் மூலம், ஓபிஎஸ் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருடன் நெருக்கமாகச் சந்தித்துப் பேச முடியாதவாறு செய்யும்படி ஈபிஎஸ் தெரிவித்து இருந்தாராம்.

முக்கிய தலைவர்
தேசிய கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி நடத்தி வரும் அந்த தலைவர், தற்போது பாஜக மேலிடத்தோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அதேபோல, எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவானவராக இருந்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்ஸை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்காத திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்தியபோது, அந்த தலைவரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்கச் சென்றது குறிப்பிடத்தக்கது.

அசைன்மெண்ட்
அவர் மூலமாகத்தான், ஓபிஎஸ் - பாஜக தலைமை நெருக்கத்தை தடுக்க முயற்சித்துள்ளார் ஈபிஎஸ். பாஜக மேலிட தலைவர்களோடு, ஓபிஎஸ் சந்திக்க முயன்றால், ஓபிஎஸ் உடன் இருந்து, அதை முடிந்தவரை தவிர்க்கச் செய்ய வேண்டும் என்பதே ஈபிஎஸ் அந்த தலைவருக்கு கொடுத்த அசைன்மென்ட்டாம். அந்த தலைவரும் அதுபோலவே, குஜராத்தில் ஓபிஎஸ் உடனே எப்போதும் இருந்துள்ளார். எனினும், பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா ஆகியோர் ஓபிஎஸ்ஸுடன் சிரித்த முகத்தோடு, உற்சாகமாகமாகப் பேசியதை தடுக்க முடியவில்லையாம்.

ஈபிஎஸ் அணியில் சலசலப்பு
குஜராத் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உற்சாகமாக இருந்துள்ளனர். அந்த நேரத்தில் ஓபிஎஸ் சந்தித்ததால், அவர்கள் ஓபிஎஸ்ஸுடன் மகிழ்ச்சியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலும், அந்த முக்கிய தலைவர் மூலமே எடப்பாடிக்குச் சென்றுள்ளது. ஓ.பன்னீர்செல்வம், பாஜக முக்கிய தலைவர்களுடன் ஓபிஎஸ் தனியாகச் சந்தித்துப் பேசவில்லை என்றாலும், அவர்களுடன் நெருக்கமாகக் காட்டிக்கொண்டது எடப்பாடி பழனிசாமி தரப்பில் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications