தொண்டர்களுக்கு ‘பொங்கல் கிஃப்ட்’! லிஸ்ட் ரெடி பண்ணுங்க.. காதுக்கு போன தகவலால் எடப்பாடி போட்ட ஆர்டர்!
சென்னை : அதிமுக தொண்டர்களை தன் பிடியில் வைத்திருக்கும் முயற்சியாக, பொங்கல் பண்டிகையையொட்டி, அடிமட்ட நிர்வாகிகளுக்கும், மூத்த தொண்டர்களுக்கும் 'கிஃப்ட்' கொடுக்க தயாராகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் ஒருபக்கம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அடுத்தகட்ட திட்டங்கள் பற்றி ஆலோசித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அந்தவகையில், மாவட்ட செயலாளர்கள் மூலம், அதிமுகவின் ஒவ்வொரு கிளைக்கும் ஒரு தொகையை பொங்கல் பரிசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாம் ஈபிஎஸ் அணி.
திமுக அரசு சார்பில், பொதுமக்கள் அனைவருக்கும், பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கும் சூழலில், அதிமுகவினருக்கு கூடுதல் பரிசு கொடுக்க தயாராகி வருகிறது எடப்பாடி டீம்.

ரொக்கப் பணம்
ஜெயலலிதா காலத்தில், அதிமுக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு, பொங்கல், தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது ரொக்கத் தொகை வழங்கப்படும். பின்னர் அந்த வழக்கம் நின்று போனது. அதிமுக ஆட்சியில் இருக்கும்போது, சில அமைச்சர்கள், பொங்கல் பண்டிகையின்போது, கட்சியின் கிளை செயலாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி வந்தனர். கடந்த ஆண்டு முதல் அதுவும் தவிர்க்கப்பட்டு விட்டது. இதனால், நிர்வாகிகள், ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த வருடமாவது நல்ல சேதி உண்டா எனக் கேட்டு வருகின்றனராம்.

ஈபிஎஸ் ஆலோசனை
இது சில மாவட்ட செயலாளர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமியின் காதுக்குச் சென்றுள்ளது. இதையடுத்து, தற்போதைய குழப்பமான அரசியல் சூழலில் இது தனக்கு மைலேஜ் கொடுக்கும் எனக் கணித்திருக்கிறாராம் ஈபிஎஸ். இதையடுத்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக, கழகத்தின் அடிமட்ட நிர்வாகிகளுக்கு ரொக்கப் பணம் கொடுக்கும் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தியுள்ளாராம்.

மா.செ + எம்.எல்.ஏ
ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் தொகுதிகளையும், அந்தந்த மாவட்டங்களின் செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் பிரித்துக்கொண்டு, கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு பொங்கல் கிஃப்ட் கொடுக்க வேண்டும் என ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளாராம். ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 250 பேருக்காவது ரொக்கப் பணம் கொடுக்க வேண்டும் என்பது மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்களுக்கு பறந்திருக்கும் ஆர்டராம். இதற்காக தலைமையில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட தொகை, மாவட்டங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட இருக்கிறதாம்.

பட்டுவாடா
இதற்காக, தொகுதி வாரியாக, சுமார் 250 பேரை லிஸ்ட் எடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதாம். பல மாவட்டங்களில் நிர்வாகிகள், லிஸ்ட் எண்ணிக்கையை தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்களாம். ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அதிமுகவினருக்கான ரொக்கப் பணம் பட்டுவாடா தொடங்கும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

கெட்டியாக
ஓ.பன்னீர்செல்வம் ஒருபக்கம், எல்லா மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமித்து, பொதுக்குழுவைக் கூட்டத் தயாராகி வரும் சூழலில், தொண்டர்களை தன் பக்கமே தக்க வைப்பதற்கு இந்த 'பொங்கல் பரிசு' பயன்படும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்காம். இதனால், லிஸ்ட் படி கட்டாயம் எல்லோருக்கும் பரிசு சென்று சேர்வதை உறுதி செய்யுங்கள் என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டிருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications