மக்கள் உயிரோடு விளையாடும் பொய்க்கால் குதிரை அரசு! முதல்வர் விஜய்யை சரமாரியாக சாடிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: "நோய் தீர்க்கும் மருந்துகளின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காமல் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிரோடு விளையாடி வரும் திரு. ஜோசப் விஜய்யின் பொய்க்கால் குதிரை அரசுக்கு கண்டனம்!" எனக் கூறியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து, தமிழக மக்களின் உயிர் காக்க முன்வருமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," மக்கள் உயிர் காக்கும் மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், மருந்துகளின் உற்பத்தி விலையை பலமடங்கு உயர்த்தி விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகச் செய்திகள் வந்தவுடன், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு மலிவு விலையில் உயிர் காக்கும் மருந்துகள் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில், மாண்புமிகு அம்மா அவர்கள் 2014-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறை மூலம் 'அம்மா மருந்தகங்களை' துவக்கினார்.

தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசு, தமிழகம் முழுவதும் அம்மா மருந்தகங்களை விரிவாக்கம் செய்து, நோய்வாய்ப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உயிர்களைக் காத்தது.
2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 'முதல்வர் மருந்தகம்' என்று பெயரை மாற்றி தனியாருக்கு வழங்கி, அம்மா மருந்தகங்களின் செயல்பாட்டை முடக்கியது. தற்போது ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசும் இம்மருந்தகங்களை கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், தற்போதும் சில மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மக்களின் உயிர் காக்கும் மருந்துகளின் விலையில், நிர்ணயிக்கப்பட்ட 30 சதவீத லாப வரம்பையும் தாண்டி விலை நிர்ணயம் செய்து விற்பதாக All India Drug Action Netowrk என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் மருத்துவமனைக் கட்டணங்கள், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வது மற்றும் இதர மருந்துகளின் விலை நிர்ணயம் குறித்த வழக்கு 27.10.2026 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதியரசர் அவர்கள், மருத்துவமனைகளில் மருந்துகளின் விற்பனை விலை நிர்ணயம் செய்வது குறித்த மத்திய, மாநில அரசுகளின் நிலையை தெளிவுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையில் ரூ. 10-ஐ அரசே உயர்த்தி வசூலிப்பதால், அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 1,200 கோடி முதல் ரூ. 1,600 கோடி வருமானம் ஈட்டும் என்று பெருமை பேசும் திரு. ஜோசப் விஜய்யின் அரசு, ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நோய்ப் பிணியைத் தீர்க்க, அம்மாவின் அரசால் கொண்டுவரப்பட்ட, குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்த, அம்மா மருந்தகங்களை மீண்டும் முழுமையாகத் திறந்து, மலிவு விலையில் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்து, தமிழக மக்களின் உயிர் காக்க முன்வருமா?" எனக் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
