சென்னையில் துரத்தித் துரத்தி கடித்த 4 தெருநாய்கள்.. மூதாட்டி படுகாயம்.. அச்சத்தில் பொதுமக்கள்
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் 4 தெரு நாய்கள் சேர்ந்து விரட்டி விரட்டி கடித்து கீழே தள்ளியதில் இடுப்பு எலும்பு முறிந்து மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெருநாய்க்கடி சம்பவங்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. தெருநாய் கடியால் ரேபிஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்தியாவில் நாய்க்கடி சம்பவங்களில் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 13 லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சமீப காலமாக தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல தெருக்களில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் தெரு நாய்கள் கடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக நாய்கள் தெருக்களில் வலம் வருவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சம் அடைகின்றனர்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீ நகர் காலனியில் 4 தெரு நாய்கள் சேர்ந்து விரட்டி விரட்டி கடித்து கீழே தள்ளியதில் இடுப்பு எலும்பு முறிந்து மூதாட்டி பால சௌந்தர்யா (70) என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல, கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில், தெருநாய் கடித்து குதறியதில் போலீஸ்காரர் மனைவி காயமடைந்தார். கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சங்கர், பெரியமேடு காவல் நிலைய தலைமை காவலர். இவரது மனைவி ரம்யா (40). நேற்று முன்தினம், ரம்யா அவரது குடியிருப்பின் அருகில் நடந்து சென்றார். அப்போது அங்கு சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று, ரம்யாவை துரத்திச் சென்று, அவரை இடது காலில் கடித்து குதறியது.
தொடை பகுதியில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே, இதே போலீஸ் குடியிருப்பில் நாய்களை அடித்து கொல்லும் சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண்ணை நாய் கடித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
