ட்விஸ்ட் கொடுத்த தேர்தல் கமிஷன்.. ஓபிஎஸ் பக்கம் திரும்பிய காற்று? ‘அத்தனை ஆதாரங்கள்’ ஆனா ஒரே முடிவு!
சென்னை : தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் தரப்புக்கும் அழைப்பு வந்திருப்பதன் மூலம், காற்று ஓபிஎஸ் பக்கம் வீசத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினர் மத்தியில் கடும் மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் நாளை ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் எடப்பாடி பழனிசாமியின் சட்ட விதிகள் மீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வேகம் காட்டும் ஓபிஎஸ்.. 'விதிப்படி பொதுக்குழு’- எடப்பாடிக்கு எதிராக பாயிண்டை பிடித்த பன்னீர் தரப்பு!

தேர்தல் ஆணைய கூட்டம்
தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி தொடர்பாக ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அ.தி.மு.க சார்பில் பங்கேற்க யாருக்கு அழைப்பு அனுப்பப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கும் அணிதான் அங்கீகரிக்கப்பட்ட அ.தி.மு.கவாக கருதப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

யாருக்கு அழைப்பு?
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு கடிதம் அனுப்பியது. ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமைக் கழக முகவரிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அ.தி.மு.க.இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ்ஸுக்கும் அழைப்பு
இதையடுத்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாங்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கைச் சுட்டிக்காட்டி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது. இதை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டு, நாளை நடக்கும் கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பங்கேற்க கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க சார்பில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று ஓபிஎஸ் அறிவித்தார்.

ஓபிஎஸ் தரப்பு குஷி
இரு தரப்பும் கூட்டத்தில் கலந்துகொள்ள தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பியது எதிர்பார்த்ததுதான், ஆனால், ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவருக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருப்பதற்கு காரணம், கட்சியில் அவருக்கு உரிமை இருக்கிறது என தேர்தல் ஆணையம் கருதுவதால் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக ஈபிஎஸ் தரப்பு ஆதாரங்கள் தெரிவித்தும், ஓபிஎஸ் தரப்பினரின் கோரிக்கை ஏற்கப்படுவதே ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமான நிலையாகத்தான் பார்க்கப்படுகிறது.

இருவருமே முறையீடு
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தியது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக எம்.பி.யும் அமைப்புச் செயலாளருமான சி.வி. சண்முகம் டெல்லிக்கு நேரில் சென்று தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியே தொடர்வதாக கூறி ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

உரிமை யாருக்கு?
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்புக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதன் மூலம் கட்சி பிளவு பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டிய தருணத்திற்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் இருவரையும் கட்சியின் உரிமை யாருக்கு என்பது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எப்போது?
அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸின் தொடர்ச்சியான முறையீடுகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், மூன்று வாரங்களில் முடிவெடுக்குமாறு உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றியுள்ளதால், உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தீவிரமடையும் என்றும் கூறப்படுகிறது.

என்ன நடக்கும்?
இதற்கிடையே, ஈபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார் ஓபிஎஸ். மாறி மாறி இருவரும் பல ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால், தேர்தல் ஆணையம் திணறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்பினரிடமும் மீண்டும் முறையான விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது.