செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது.. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு.. காரசார வாதம்!
சென்னை : போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத் துறை கடுமையாக எதிர்த்து வாதிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

மோசடி
அந்த புகார்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கு
இந்நிலையில், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
இதற்கு அமலாக்கத்துறை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், வேலைக்காக இரண்டரை லட்சம் ரூபாயை கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கை திரும்பப் பெற லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியம் அளிப்பதாகத் தெரிவித்தார்.

விசாரணை தள்ளிவைப்பு
மேலும், தற்போதைய தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணையை அக்டோபர் 28ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications