‘நம்ம என்ன சொல்றது? அவருக்கே புரியணும்’ - மாஜி நடவடிக்கையால் அப்செட்டான ஈபிஎஸ்.. ‘சிக்கல் சண்முகம்!’
சென்னை : சி.வி.சண்முகத்தின் சமீபத்திய நடவடிக்கைகளால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஈபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் சி.வி.சண்முகம் தொடர்ந்து அனைவரையும் எடுத்தெறிந்து பேசி வருவது ஈபிஎஸ் அணிக்குள்ளேயே புகைச்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது.
சீனியர்கள் பலரும் சிவி சண்முகம் பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் புகார் பட்டியலை வாசித்து வருகிறார்களாம். ஆனால், அவரிடம் இதுகுறித்து ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார் ஈபிஎஸ் என்கிறார்கள் ஈபிஎஸ் தரப்பினர்.
சி.வி.சண்முகம் தொடர்ந்து மேடைகளில் ஒருமையில் பேசி வருவதையும், போலீசாரை கடுமையாக விமர்சித்து வருவதையும் ஈபிஎஸ் கவனித்துக் கொண்டிருந்தாலும் சில காரணங்களால் அமைதியாக இருக்கிறார் என்கிறார்கள்.

அடாவடி
அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், ராஜ்யசபா எம்.பியுமான சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசக்கூடியவர். பட் பட்டென அவர் எடுத்தெறிந்து மரியாதைக்குறைவாகப் பேசுவது அவரது சகாக்களுக்கே சற்று எரிச்சல் தரக்கூடிய விஷயம் தான். சி.வி.சண்முகத்தின் இயல்பே, கோபமாக இருந்தால் யார் என்னவென்று பார்க்காமல் கடுமையாகப் பேசி விடுவார் என்பதுதான். அது கட்சியில் அனைவருக்குமே தெரியும். எனினும், அதிமுக மோதல் விவகாரத்தில் அவர் நடந்துகொள்ளும் விதம் எடப்பாடி பழனிசாமிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈபிஎஸ் உடன் எப்போதும்
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதல் உக்கிரமாகத் தொடங்கியது முதல், எடப்பாடி பழனிசாமியுடனான ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ச்சியாக பங்கெடுத்து வருகிறார் சிவி சண்முகம். முக்கியமான ஆலோசனைகளையும் அவர் ஈபிஎஸ்ஸுக்கு வழங்கியுள்ளார். அதில், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆனதாக அவர் சொன்ன பாயிண்ட் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான். அது மட்டுமல்லாமல், தேர்தல் ஆணைய விவகாரம், அதிமுக தலைமைக் கழக மோதல் வழக்குகளிலும் சண்முகமே முன்னின்று செயல்பட்டு வருகிறார்.

சிக்கல்களும் வருதே
அதேநேரம், எடப்பாடி பழனிசாமிக்கு சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறார் சி.வி.சண்முகம். பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுமே, உடனடியாக சட்டப்பூர்வமாக பதிவு செய்தால் தான் நீதிமன்றங்களில் நமக்கு பலம் கூடும் என முன்னாள் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் வலியுறுத்தியதன் பேரிலேயே எடப்பாடி பழனிசாமியும் உடனடியாக தேர்தல் ஆணையத்திற்கு இணை ஒருங்கிணைப்பாளர், தலைமை நிலைய செயலாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக ஆவணங்களை அனுப்பினார் எடப்பாடி பழனிசாமி. அதனால் சிக்கல் ஏற்பட்டதால், சண்முகம் மீது கொஞ்சம் அப்செட் ஆனார் ஈபிஎஸ்.

திமுக + போலீஸ்
எடப்பாடி பழனிசாமியே திமுகவை கடுமையாக விமர்சிக்கக்கூடியவர் தான் என்றாலும், சி.வி.சண்முகம் அவரை விட ஒரு படி மேலே போய் அட்டாக் செய்யக்கூடியவர். ஸ்டாலின் குடும்பத்தினர் பற்றியும் விமர்சனங்களை சிவி சண்முகம் ஒருமையில் முன்வைத்து வருவதை கட்சியில் பலரும் ரசிக்கவில்லை. அதேபோல, தமிழக காவல்துறையையும் சி.வி.சண்முகம் தரக்குறைவாக விமர்சித்து வருவது அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி நிர்வாகிகளிடமே அவர் அப்படித்தான் பேசுவார் என்பதால் அவர்களும் நமக்கெதுக்கு வம்பு என ஒதுங்கிக் கொள்கிறார்களாம்.

மாவாட்ட போனீங்களா
சில நாட்களுக்கு முன்னர், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை விமர்சித்துப் பேசும்போது போலீசார் கோபாலபுரத்தில் மாவாட்டுகிறார்களா என்கிற ரீதியில் பேசியிருந்தார். இது எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக் கொடுத்தது. போலீசாரை இப்படி கடுமையாக தாக்கிப் பேசினால், நமக்கு சிக்கல் தான் என சீனியர்கள் எடுத்துச் சொல்லியும் சிவி சண்முகம் தனது வீராப்பை குறைத்துக் கொள்வதாக இல்லை. மேடைகளில் திமுக அரசை விமர்சிக்கும் வேகத்திலேயே காவல்துறையினரையும் கடுமையாகப் பேசி வருகிறார்.

காவல்துறையினருடன் மோதல் போக்கு
சமீபத்தில், விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தபோது, அங்கு சென்ற சண்முகம், வீட்டுக்குள் போயே தீருவேன் என காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோவைக்கும் சென்று வேலுமணி ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கும் சென்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இப்படியாக காவல்துறையுடன் தொடர்ச்சியாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

நேருக்கு நேர் வாடா பார்க்கலாம்
சமீபத்தில் விழுப்புரத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது ஆ.ராசா இந்துக்கள் பற்றி பேசியதை விமர்சிக்கத் தொடங்கிய சிவி சண்முகம், இந்துகள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்கிற ரீதியில் சூடாகப் பேச, மேடைக்கு பின்புறம் இருந்து சில திமுகவினர் பதிலுக்கு ஆவேச குரல் எழுப்ப, சி.வி. சண்முகம் டென்ஷனாகி விட்டார். ஆவேசமடைந்த சிவி சண்முகம், மிரட்டல் விடுக்கும் திமுகவுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று ஒருமையில் பேசி சவால் விட்டார். தொடர்ந்து பேசிய அவர் என்னை மிரட்டலாம், உருட்டலாம்... ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம். காவல் துறையினரும் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். ஆட்சி மாறும்போது தெரியும் என மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார்.

ஈபிஎஸ் அதிருப்தி
தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்களால் எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மீது அப்செட்டில் இருக்கிறாராம். சீனியர்களிடம், 'நம்ம என்ன சொல்றது? அவருக்கே தெரிய வேண்டாமா.. தேவையில்லாத வேலையைத்தான் செய்றாரு' என புலம்பியதாகக் கூறப்படுகிறது. ஈபிஎஸ் எதுவும் சொல்லாமல் சைலண்டாக இருப்பதன் பின்னணியில் வடக்கில் இருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் 19 பேர் சிவி சண்முகம் கட்டுப்பாட்டில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் சொன்னது கூட உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications