நீட் தேர்வு விலக்கு.. ஸ்டாலினின் முயற்சிக்கு தோள் கொடுக்கும் அதிமுக.. பெருகும் கட்சிகளின் ஆதரவு!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவு தேர்வை ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லி சென்ற தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார்.

மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை
இதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். மேலும், தமிழ்நாட்டில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தங்களது ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. இதில் தமிழக மாணவர்கள் நீட் தேர்வை விரும்பவில்லை என்பது தெரியவந்தது.

அமித்ஷாவின் பொறுப்பேற்ற செயல்
மேலும், தமிழக சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்ட்டது. இந்த மசோதா தமிழாக ஆளுநரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் நீட் மசோதாவை இதுவரை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நேரில் வலியுறுத்துவதற்காக தமிழகத்தின் திமுக, திமுக மற்றும் அனைத்து கட்சி எம்,பி.க்கள் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லியில் முகாமிட்டுள்ளனர். ஆனால் இதுவரையிலும் அமித் ஷா தமிழக எம்.பி.க்களை சந்திக்கவில்லை.

அனைத்துக்கட்சி கூட்டம்
இதற்கிடையே நீட் நுழைவுத்தேர்வு விலக்கு மசோதா விவகாரம் தொடர்பாக 8-ம் தேதி சனிக்கிழமையன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அறிவிப்புக்கு முதல் ஆளாக பாராட்டு தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

ராமதாஸ் பாராட்டு
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' "12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான நீட் விலக்கு சட்டம் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. நீட் விலக்கு குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கடந்த 25-ஆம் தேதியே வலியுறுத்தியிருந்தேன். அந்த வகையில் தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பா.ம.க. பங்கேற்று ஆக்கபூர்வமாக பங்களிக்கும்.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து எப்பாடு பட்டாவது விலக்கு பெற வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. அதற்காக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளிக்கும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார். இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வரேவேற்பு தெரிவித்தன.

தோள்கொடுக்கும் அதிமுக; எதிர்க்கும் பாஜக
இதில் முக்கிய விஷயமாக தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுக இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு கொடுப்போம் என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று சட்டசபையில் அறிவித்து விட்டது. நீட் விவகாரத்தில் தமிழகத்தில் பாஜகவை தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளன. இதன் மூலம் தமிழக அரசு முயற்சிக்கு கட்சிகளின் ஆதரவு பெருகி வருகிறது என்பது தெளிவாகிறது.












Click it and Unblock the Notifications