முக்கிய விஷயங்களில்.. விஜய் மெகா சொதப்பல்! கர்நாடக விசிட் முதல் உதயநிதி கைது வரை!
சென்னை: விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், மாநிலத்தின் முக்கியமான அரசியல் மற்றும் நிர்வாகச் சிக்கல்களில் அரசு எடுக்கும் முடிவுகள் பெரும் விவாதத்தையும் விமர்சனத்தையும் கிளப்பியுள்ளன.
காவிரி மேகதாது பிரச்சனை, எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்த விவகாரம், மற்றும் முக்கிய குற்றச்சாட்டுகளில் சிக்கிய தலைவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் என அனைத்திலும் தவெக அரசு தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

1. மேகதாது பேச்சுவார்த்தை பின்னடைவு
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் சூழலில், அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமாருடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார். ஆகஸ்ட் 3 அன்று பெங்களூர் சென்று இந்த பேச்சுவார்த்தையை நடத்த 13 பேர் கொண்ட குழுவுடன் விரிவான அறிக்கையும் தயார் செய்யப்பட்டது.
ஆனால், தற்போதைய சூழல் பேச்சுவார்த்தைக்கு சாதகமாக இல்லை.. நீங்கள் அதனால் வர வேண்டாம்.. இப்போதைக்கு விஜய் கர்நாடகா வந்தால் சரியாக இருக்காது எனக் கூறி, இந்த பயணத்தை ஒத்திவைக்குமாறு கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கோரிக்கை விடுத்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாதுவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்த முயன்றது மாநிலத்தின் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் என எதிர்க்கட்சியான திமுக கடுமையாகக் குற்றம்சாட்டியது. இதை மீறி பெங்களூர் செல்ல திட்டமிட்டிருந்த விஜய்க்கு.. அந்த பயணமும் ரத்தானது. இதனால் அரசியல் ரீதியில் விஜய் அரசுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக மாறியது.
உதயநிதி ஸ்டாலின் கைது தோல்வி
தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி நீர் உரிமைப் போராட்டத்தின் போது, உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தவெக மகளிர் அணியினர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக உதயநிதி ஸ்டாலினை காவல்துறை அதிரடியாகக் கைது செய்தது.
இருப்பினும், இந்த கைதை எதிர்த்து திமுக சார்பில் தொடரப்பட்ட அவசர வழக்க விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை முடித்து உதயநிதியை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கியக் கேள்விகளை எழுப்புவதைத் தவிர்க்கவே அரசு இந்த கைதை மேற்கொண்டதாக திமுக வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
எதிர்க்கட்சித் தலைவரை சட்டப்பூர்வமாகச் சிறையில் வைக்க முடியாமல் காவல்துறை திருப்பியனுப்பியது, தவெக அரசின் அவசர கோல நிர்வாக நடவடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. முக்கியமாக உதயநிதிக்கு இது கூடுதல் மைலேஜ் கொடுத்தது. திமுகவிற்கும் கூடுதல் ஊக்கத்தை கொடுத்துள்ளது.
செந்தில் பாலாஜி வழக்கு மற்றும் ரெய்டுகள்
அதேவேளையில், டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் குதிரை பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சட்டரீதியான நடவடிக்கைகளை தவெக அரசு துரிதப்படுத்தியது. செந்தில் பாலாஜியின் வீடுகள் மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் தொடர் சோதனைகள் நடத்தப்பட்ட போதிலும், அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகும் உச்ச நீதிமன்றத்தை அணுகி அவர் சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இதில் அவருக்கு பெயில் கிடைத்துவிட்டதால்.. அவரை கைது செய்வதில் தவெக அரசு தோல்வி அடைந்தது. இந்த வழக்கிலும் தவெக கடுமையான பின்னடைவை சந்தித்தது.
நிர்வாகத் திறமை இல்லை?
சினிமா புகழையும் மக்கள் ஆதரவையும் கொண்டு ஆட்சியைப் பிடித்த தவெக, பெரிய அளவிலான மாநில பிரச்சனைகளான நதிநீர் உரிமை, சட்டரீதியான கைது நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்கு போன்றவற்றில் போதுமான அனுபவமின்மையை வெளிப்படுத்தி வருகிறது.
முக்கியமான அரசியல் நகர்வுகளில் தீர்க்கமான மற்றும் முதிர்ச்சியான முடிவுகளை எடுக்கத் தவறினால், விஜய்யின் தவெக அரசுக்கு மக்களிடையேயான செல்வாக்கு குறையும் அபாயம் உள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications
