சென்னையில் சதமடித்த பெட்ரோல் விலை...கள்ளக்குறிச்சியில் ரூ. 102 - தமிழகம் முழுவதும் விலை நிலவரம்
தமிழகத்தில் பெட்ரோல், டீசலின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில் சென்னையில் முதன்முதலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் 12 முறை விலை அதிகரித்துள்ள நிலையில், ஜூலை மாதத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

100 ரூபாய் 13 காசுகள்
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 100 ரூபாய் 13 காசுகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி நேற்றைய விலையான 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய்
தமிழ்நாட்டில் பெட்ரோலின் விலை 35 மாவட்டங்களில் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. அரியலூர், கோவை, கடலூர்,தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு,கள்ளக்குறிச்சி,காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,ராணிப்பேட்டை,சேலம்,சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 1 லிட்டர் சாதாரண பெட்ரோல் 102 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. ஸ்பீடு பெட்ரோல் 1 லிட்டர் 107 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது.

அண்டை மாநிலங்கள்
மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும் பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது. ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஏற்கெனவே பெட்ரோலின் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது.

டெல்லியில் எவ்வளவு
மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 105.24 ஆகவும், டீசல் விலை ரூ 96.72 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில், ஒரு லிட்டர் பெட்ரோல் சில்லறை விற்பனைக்கு ரூ 99.16 ஆகவும், டீசல் ரூ 89.18ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வாகன ஓட்டிகள் அவதி
கொல்கத்தாவில், தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 99.4ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ 92.03 ஆகவும் விற்கப்படுகிறது. டீசல் விலையில் இன்றைய தினம் மாற்றம் எதுவுமின்றி விற்பனையாகிறது. சென்னையில் முதன்முதலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு சாமானிய மக்களை கவலையடையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications