ஜெம் வீரமணி வழக்கு! தமிழக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமாரிடம் எஸ்ஐடி 9 மணி நேரம் விசாரணை
சென்னை: ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் எஸ்சி, எஸ்டி பிரிவுத் தலைவர் ரஞ்சன்குமாரிடம் சிறப்பு புலனாய்வு குழு 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. கடந்த 2024 ஆம் ஆண்டே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததாக சொன்னவர் ரஞ்சன்குமார்.
ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் 29ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சிலரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், பழைய உதவியாளர் கணேசன் என இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி கண்ணையா மகன் பிரகாஷ் என்பவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை பிடிக்க லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை முதலில் கடந்த 2024 ஆம் ஆண்டே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தான் கொண்டு சென்றதாகவும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வீரமணி வழக்கை விசாரிக்க ஐஜி தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் நேற்றைய தினம் தமிழக காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன்குமாரிடம் விசாரணை நடத்தினர்.
அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
விசாரணையின் போது அவரிடம் இருந்த வீடியோ ஆதாரங்கள், வாட்ஸ் ஆப் ஸ்கிரீன்ஷாட்கள் பெறப்பட்டன. விசாரணை முடிந்து வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், என்னிடம் இருந்த ஆதாரங்களை அவர்களிடம் கொடுத்துவிட்டேன். விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தேன். இனி அழைத்தாலும் ஒத்துழைப்பு அளிப்பேன். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் என்னென்ன கேட்டார்கள், என்பது குறித்தெல்லாம் நான் வெளியே சொல்ல முடியாது என கூறிவிட்டுச் சென்றார்.
வீரமணி வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த போது ரஞ்சன்குமார் கூறுகையில், " 2024 ஆம் ஆண்டு இந்த வீடியோ எனக்கு கிடைத்ததும் நான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். துணை கமிஷனர் கண்ணனிடம் என்னிடம் இருந்த ஆதாரங்களின் நகல்களை கொடுத்தேன்.
அவர் கமிஷனரிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார். இதையடுத்து என்னிடம் மகேஷ்குமார் என்ற விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பேசினார். அவர் பாதிக்கப்பட்ட சிறுமிகளை தெரியுமா என கேட்டார், எனக்கு தெரியாது என்றேன். பிறகு இணை ஆணையர் யாஸ்மினிடம் என்னை மகேஷ்குமார் அழைத்துச் சென்றேன்.
அவரும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பற்றி கேட்டனர். இப்படியே என்னிடம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்து கேட்டுகேட்டு அந்த வழக்கை கிடப்பில் போட்டனர்.
சாந்தியிடம் இருந்த வீடியோவை நான் செல்போனில் பதிவு செய்துக் கொண்டேன். அந்த வீடியோ ஒரு 2 நிமிடம் இருந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அது கூட என் புகாரின் பேரில் போடப்படவில்லை என ரஞ்சன் குமார் கடந்த இரு நாட்களுக்கு முன்பு, அதாவது எஸ்ஐடி விசாரணைக்கு செல்வதற்கு முன்பு தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications
