எனது எடையை நடிகரிடம் ஏன் கேட்டீர்கள்? செய்தியாளரிடம் '96' பட நடிகை கவுரி கிஷன் வாக்குவாதம்
சென்னை: அதர்ஸ் படத்தில் எனது கேரக்டரை கேட்காமல் எனது உடல் எடையை அறிந்து கொள்வதுதான் முக்கியமா என நடிகை கவுரி கிஷன் செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனது எடையை கேட்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்றும் கிஷன் கேள்வி எழுப்பினார்.
96 படத்தில் ஜானுவாக நடித்தவர் கவுரி கிஷன். இவர் மலையாளத்தில் "மார்க்கமாளி" எனும் படத்தில் நடித்திருந்தார். பின்னர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது அபின் ஹரிஹரன் இயக்கத்தில் "அதர்ஸ் (Others)" எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் நடக்கும் மோசடிகள் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஆதித்யா மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் அறிமுக விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. அப்போது ஆதித்யா மாதவனிடம் ஒரு செய்தியாளர், " பாடல் காட்சியில் கதாநாயகி கெளரி கிஷனைத் தூக்கிச் சுற்றி வருகிறீர்களே? அவர் ரொம்ப 'வெயிட்'டா (உடல் எடையுடன்) இருந்தாரா?, அவரது உடல் எடை என்ன" என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆதித்யா, "ரொம்ப வெயிட்டா இல்லை." என தெரிவித்திருந்தார். இந்த கேள்வி கவுரி கிஷனுக்கு மனதளவில் பாதித்துவிட்டது. மேலும் இது உடலை கிண்டல் (body shaming) போல் அவர் உணர்ந்தார்.
இந்த நிலையில் ஒரு யூடியூப் சேனலில் கவுரி கிஷனிடம், அந்த செய்தியாளர் கேட்ட கேள்வி குறித்து கேட்ட போது அவர், "அந்த பத்திரிகையாளர் கேட்டது ரொம்ப தவறு. அவர் மூளை இல்லாதவர் மாதிரி பேசியிருந்தார். நான் அவர் நம்பரை வாங்கி பேசலாம்னு நினைத்தேன். ஆனால் அது வெறும் வாதமாக மாறுமே தவிர, அவர் மாற போவது இல்லை.
அவர் என் எடை குறித்த கேள்வியை ஏன் கேட்டார் என தெரியவில்லை. நடிகைகளின் திறமையைவிட்டுவிட்டு உடல் எடை, அழகு குறித்தெல்லாம் பேசுறது சரியில்லை. அவர் கேட்டது Stupid question என தெரிவித்திருந்தார்.
வரும் 7ஆம் தேதி அதர்ஸ் படம் ரிலீஸாகும் நிலையில் இன்று ஒரு பிரஸ் மீட் நடந்தது. அதில் கிஷன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் அந்த பத்திரிகையாளர், "Stupid question என நீங்கள் எப்படி சொல்வீர்கள், உடல் எடை குறித்து கேட்டது ஒன்றும் தவறில்லையே" என்றார்.
அதற்கு கிஷன், "ஓ எனது எடையை கேட்டது நீங்கள்தானா, என் எடையை ஏன் கேட்டீர்கள், நான் அந்த படத்தில் நடித்த கேரக்டர் குறித்து எதையும் கேட்காமல் எடை குறித்து ஏன் கேட்டீர்கள். இது என்னை பாடி ஷேமிங் செய்வது போல் இருந்தது.
எனது உடல் எடையை நடிகரிடம் கேட்பதா? என் எடையை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என பதிலளித்தார். அப்போது அந்த செய்தியாளர், தொடர்ந்து என்ன தவறு என்ன தவறு என அவர் தரப்பு விளக்கத்தை அளித்தார்.
மேலும் மரியாதையாக பேசுங்கள் என கிஷனுக்கு அறிவுரை வழங்கினார். அதற்கு கிஷன், நான் மிகவும் பொறுமையாக பேசுகிறேன், நீங்கள்தான் கத்துகிறீர்கள். இங்கு இருக்கும் ஒரே பெண் நான் என்ற போது இப்படி கத்தி பேசுவது சரியா? நான் 80 கிலோ இருப்பேன், 60 கிலோ இருப்பேன், அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கிஷன் கேட்க, இப்படியே மற்ற நிருபர்களும் கிஷனிடம் வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் கிஷனின் கண்கள் கலங்கின. சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.












Click it and Unblock the Notifications