வேலை செய்யுங்க..இனி டிரைவர், கண்டக்டர் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு - வெடியை போட்ட அமைச்சர்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலமாகத்தான் நிரப்பப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
சென்னை: அரசு போக்குவரத்துக்கழகங்களில் பஸ் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் இனி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நிரப்பப்படும் என்று தமிழக சிவசங்கர் கூறியுள்ளார். எல்லோரும் பொறுப்பை உணர்ந்து வேலை செய்யுங்கள் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று,அடையாறு, திருவான்மியூர் பணிமனைகளில் ஆய்வு செய்த பின் மூன்று மாதங்களாக பணிக்கு வராத ஊழியர்களிடம் பேசினார். இனி அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கான பணியிடங்கள், அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்பப்படும். அதனால் தனிப்பட்ட நபருக்கு வேலை அளிப்பது சாத்தியமில்லை.

பொதுமக்களிடமிருந்து எனக்கு வருகின்ற பல்வேறு மனுக்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் வேலைவாய்ப்பு கோரியே வருகின்றன. அப்படி இருக்கையில், நமது போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள் கையில் வேலையை வைத்துக் கொண்டு. பணிக்கு வராமல் இருப்பது, நிர்வாகத்திற்கும், தங்கள் குடும்பத்திற்கும் எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணர வேண்டும்.
இந்நிலையில் ஏற்கனவே பணியில் இருப்போர் வேலையை சிறப்பாக செய்து அவர்களின் குடும்பத்துக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் சிறப்பு சேர்க்க வேண்டும். நீண்ட நாட்கள் பணிக்கு வராதோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதே வழக்கம். ஆனால் நான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் அதை உணர்ந்து பணியாற்றுங்கள் என்றார்.
போக்குவரத்துக் கழகங்கள் 48 500 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கினாலும் அனைத்து பஸ்களையும் இயக்கி பொது மக்களுக்கு உதவ வேண்டும். சாதாரண கட்டண பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏழை பெண்கள் வேலைக்கு செல்லவும் வியாபாரம் செய்யவும் உதவியாக உள்ளது. அவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துகிறது. எனவே, அவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டியது டிரைவர் கண்டக்டர்களின் கடமை.
மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளுக்கும் நான் நேரில் சென்று, நீண்ட நாட்கள் பணிக்கு வராமல் இருக்கும் பணியாளர்களை சந்தித்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி பேருந்துகளை முழுமையாக இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். மேலும் போக்குவரத்து பணியாளர்கள் அடிக்கடி விடுமுறை எடுப்பது ஓய்வு பெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பேருந்துகளில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
நமது முதல்வர் எங்கு சென்றாலும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்து வருகிறார்கள். அதை போலவே, அவரது பிரதிநிதிகளான எங்களிடம், பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவித்தால், அதற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, தீர்த்து வைக்கிறோம். முழுமையாக அனைத்துப் பேருந்துகளையும் இயக்கி, நமது போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்படுவதற்கு உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்கள்.














Click it and Unblock the Notifications