விஷயம் பெருசா வெடிக்கும் போலயே.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்.. வைக்கப்படும் செக் மேட்?
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம்.. தவெக அல்லாத சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்கும் 'குதிரை பேரத்தில்' ஈடுபட்டு வருவதாகத் எதிர்க்கட்சியான திமுக தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் வலுவான ஆதாரங்களுடன் இரண்டாவது முறையாகச் சந்தித்து அதிகாரப்பூர்வ புகாரைச் சமர்ப்பித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகையின் அதிரடி நடவடிக்கை:
திமுக முதன்முறையாக புகாரளித்த போதே, அதனை மிகவும் தீவிரமான விஷயமாகக் கருதிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். இது குறித்துத் தெளிவான விளக்கமளிக்கக் கோரி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் சட்டமன்றத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோருக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அதிகாரப்பூர்வ கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
இருப்பினும், ஆளுநர் மாளிகை அனுப்பிய அந்த கடிதங்களுக்கு அரசங்கத்தின் தரப்பிலிருந்தோ அல்லது பேரவைத் தலைவரின் அலுவலகத்திலிருந்தோ இதுவரை எந்தவித விளக்கமோ அல்லது பதில்களோ அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆளுநரின் கேள்விகளுக்கு அரசுத் தரப்பு தொடர்ந்து அமைதி காத்து வருவது, மாநில அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
மீண்டும் ஆளுநரைச் சந்தித்த திமுக குழு:
அரசிடமிருந்து எவ்வித பதிலும் வராத சூழலில், திமுகவின் முக்கியப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சமீபத்தில் ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தவெக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்து வருவதை சுட்டிக்காட்டும் கூடுதல் ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கினர்.
அத்துடன் நிறுத்திவிடாமல், 'நாங்கள் ஏற்கனவே அளித்த புகார் மீது ஆளுநர் மாளிகை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்ற நேரடி கேள்வியையும் திமுக பிரதிநிதிகள் ஆளுநரிடம் முன்வைத்தனர்.
அதற்குப் பதிலளித்த ஆளுநர் அர்லேகர், உங்கள் முதல் புகாரின் அடிப்படையில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வந்து சேரவில்லை என தற்போதைய நிலவரத்தை விளக்கினார்.
ஆளுநரின் அதிருப்தி:
திமுக அளித்த இரண்டாவது புகாரைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகர் மீண்டும் தற்போதைய தவெக அரசிடம் விளக்கம் கேட்டு மற்றொரு கடிதத்தை அனுப்பியுள்ளார். ஆனால், இந்த முறையும் அரசுத் தரப்பிலிருந்து உரிய பதில்கள் எதுவும் வரவில்லை என்பதால், ஆளுநர் தீவிர அதிருப்தியிலும் கவலையிலும் இருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முறைப்படி எழுத்துப்பூர்வமாக உத்தரவிடாமல், மூத்த அரசு அதிகாரிகளிடம் வாய்மொழி வழியாகவே ஆளுநர் இதுகுறித்த விளக்கங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவின் தொடர் புகார்கள்:
மறுபுறம், அதிமுக தரப்பிலிருந்தும் ஆளுநரிடம் தொடர் புகார்கள் அளிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. தங்களது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆசைவார்த்தைகள் காட்டி, குதிரை பேரம் மூலம் தவெக பக்கம் இழுப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தையும் கையில் எடுத்துள்ள ஆளுநர், "எதிர்க்கட்சிகள் வைக்கும் இந்த தீவிரக் குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் என்ன மாதிரியான விசாரணைகளை நடத்தியிருக்கிறீர்கள்? இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை உடனடியாக விளக்குங்கள்" என அரசு அதிகாரிகளிடம் ஆளுநர் கேள்வி எழுப்பியிருப்பதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கும் இந்த 'குதிரை பேர' விவகாரத்தில், அடுத்தகட்டமாக ஆளுநர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதும், அரசு தரப்பு இதற்கு என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
