பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது.. மாதம் மாதம் பொருட்கள் வாங்காமல் விட்டால் என்ன ஆகும் என்ற கேள்வி பல குடும்பங்களில் எழுகிறது.. அதே நேரத்தில் பச்சை, வெள்ளை, சர்க்கரை கார்டு என்றால் என்ன என்பதையும் பலர் சரியாக அறியாமல் இருக்கிறார்கள்.. இதை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடும்ப அட்டைகள் வெறும் அடையாள ஆவணமாக மட்டும் இல்லை.. அவை குடும்பத்தின் பொருளாதார நிலையை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் உரிமை அட்டைகளாகவும் கருதப்படுகின்றன..

இந்த அட்டைகள் மூலம் அரசு மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்குகிறது..
பச்சை ரேஷன் அட்டைகள்
தமிழகத்தில் பொதுவாக 3 முக்கிய வகையான குடும்ப அட்டைகள் உள்ளன.. முதலில் பச்சை நிற குடும்ப அட்டை அல்லது ரைஸ் கார்டு.. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் இலவச அரிசி மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்களை பெற முடியும்.. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பல குடும்பங்கள் இந்த வகை அட்டைகளை வைத்திருக்கின்றனர்..
அடுத்ததாக வெள்ளை நிற குடும்ப அட்டை உள்ளது.. இது பொதுவாக சர்க்கரை கார்டு என்று அழைக்கப்படுகிறது.. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் அரிசி பெற முடியாது.. ஆனால் கூடுதல் அளவில் சர்க்கரை வாங்கும் வசதி இருக்கும்.. பல நடுத்தர குடும்பங்கள் இந்த அட்டையை பயன்படுத்துகின்றனர்..
வெள்ளை நிற சர்க்கரை அட்டை
இதற்கு கூடுதலாக பொருட்கள் இல்லா குடும்ப அட்டை என்ற வகையும் உள்ளது.. இந்த அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் கடையில் எந்த பொருளையும் வாங்க முடியாது.. ஆனால் முகவரி சான்று அல்லது அடையாள ஆவணமாக இந்த அட்டையை பயன்படுத்தலாம்.. பொதுவாக அரசு ஊழியர்கள் அல்லது அதிக வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த வகை அட்டைகள் வழங்கப்படுகின்றன..
இந்நிலையில் பல குடும்பங்கள் ரேஷன் கார்டை முகவரி சான்றாக மட்டும் பயன்படுத்தி, மாதந்தோறும் வழங்கப்படும் பொருட்களை வாங்காமல் விட்டுவிடுகின்றனர்.. ஆனால் ரேஷன் கடைகளில் தற்போது பயன்படுத்தப்படும் e-POS இயந்திரங்கள் மூலம் யார் பொருட்கள் வாங்குகிறார்கள், யார் வாங்கவில்லை என்ற தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு சென்றுவிடுகின்றன..
குடும்ப அட்டைக்கு அரசு சலுகைகள்
ஒரு குடும்ப அட்டை நீண்ட நாட்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் என்னாகும் தெரியுமா? அந்த அட்டை அதிகாரிகளின் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.. ஏனெனில் பல மாதங்கள் பொருட்கள் வாங்காத அட்டைகள் போலி அட்டைகளாக இருக்கலாம் அல்லது அந்த முகவரியில் அந்த குடும்பம் வசிக்காமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழலாம்.. இதனால் அதிகாரிகள் ஆய்வு நடத்தவும், தேவையானால் அந்த அட்டையை தற்காலிகமாக முடக்கவும் அதிகாரம் பெற்றுள்ளனர்..
ரேஷன் பொருட்கள்
மேலும் நீண்ட நாட்கள் ரேஷன் பொருட்கள் வாங்காத குடும்பங்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பு அல்லது அவசர கால நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.. அதனால் குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை சர்க்கரை அல்லது மண்ணெண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு பொருளையாவது வாங்குவது நல்லது..
அரசு வழங்கும் மானிய விலை பொருட்கள் உண்மையில் ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்பட்டவை என்பதால், அவற்றை உரிய முறையில் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும்.. பொருட்கள் தேவையில்லையெனில் அந்த அட்டையை பொருட்கள் இல்லா அட்டையாக மாற்றிக் கொள்வது சரியான நடைமுறையாக இருக்கும்.. இப்படி செய்தால் உண்மையில் தேவையுள்ளவர்களுக்கு அரசு உதவி சரியாக சென்றடையும்..!!!












Click it and Unblock the Notifications