தீராத சாபம்! வெள்ளத்தில் தத்தளிக்கும் வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை.. தொகுதியை கண்டுக்காத விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழைக்குப் பிறகு, தென்சென்னை மற்றும் நகரின் மையப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மழைநீர் வடிந்துவிட்டது. ஆனால், வடசென்னையின் முக்கியப் பகுதியான வியாசர்பாடியில் நிலைமை தலைகீழாக உள்ளது. குறிப்பாக, ஸ்டீபன்சன் சாலை மற்றும் கணேசபுரம் சுரங்கப்பாதை பகுதி மீண்டும் ஒருமுறை முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.

இப்பகுதி மக்கள் படும் துயரங்களை நேரடியாக அறிந்துகொள்ள *ஒன்இந்தியா தமிழ் குழுவினர் களத்தில் இறங்கி நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

vijay perampur

30 ஆண்டுகளாகத் தொடரும் கண்ணீர்க் கதை

ஒன்இந்தியா தமிழ் குழுவினர் வியாசர்பாடிக்குச் சென்றபோது, ஸ்டீபன்சன் சாலையில் முழங்கால் அளவுக்கு மேல் கழிவுநீரும் மழைநீரும் தேங்கி நின்று துர்நாற்றம் வீசியது. வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. அப்பகுதியில் வசிக்கும் வியாசர் நகர் காலனி மக்கள், தண்ணீரில் வேதனையோடு நடந்து செல்வதைக் காண முடிந்தது.

அங்குள்ள பொதுமக்களிடம் ஒன்இந்தியா குழுவினர் பேசியபோது, வியாசர் நகர் காலனியைச் சேர்ந்த ஆர். சேகர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்:

vijay perampur

"இந்த ஸ்டீபன்சன் சாலையில் தண்ணீர் தேங்குவது நேற்றோ இன்றோ நடக்கும் விஷயம் அல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் இதே நரக வேதனையைத்தான் அனுபவித்து வருகிறோம். ஒவ்வொரு மழைக்காலத்திலும் கணேசபுரம் சுரங்கப்பாதை முழுமையாக மூழ்கிவிடும். சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் அமைக்கிறது, ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சப் போகிறது என்று சொன்னார்கள். இவ்வளவு நடந்தும், இப்போதும் மோட்டாரை வைத்து வெறும் கைகளால் தண்ணீரை வெளியேற்றும் பழைய நிலைமைதானே நீடிக்கிறது? எப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்?"

என்று அவர் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

vijay perampur

களத்திற்கு வந்த தவெக மாவட்டச் செயலாளர்: மக்கள் முன் வைத்த உறுதி

ஸ்டீபன்சன் சாலையில் மக்கள் தவித்துக் கொண்டிருந்த சூழலில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவரும், தவெக வடசென்னை மாவட்டச் செயலாளரும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசிய அவர், பிபி சாலை (BB Road) முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தேங்கும் தண்ணீரை நிரந்தரமாக வெளியேற்றப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். ஆனால் அவர் சென்ற பின்பும் அங்கே நிலைமை அவ்வளவு வேகமாக மாறவில்லை.

vijay perampur

மாநகராட்சி அதிகாரிகளின் விளக்கம்: 15 மீட்டர் பாக்கி மட்டுமே!

மழைநீர் ஏன் இன்னும் வடியவில்லை என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் பணிகளின் விரிவான நிலவரத்தை விளக்கினர்:

"முன்பெல்லாம் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாகத்தான் ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு மழைநீர் திருப்பி விடப்பட்டது. ஆனால் பழைய வடிகால் மிகக் குறுகியதாக இருந்ததால் தண்ணீர் தேங்கியது. அதற்கு மாற்றாக, தற்போது ஸ்டீபன்சன் சாலையிலிருந்து ஜிஎன்டி சாலைக்கு அடியில் உள்ள குட்ஸ் ஷெட் குளம் (Goods Shed Pond) வரை 8 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான 'பாக்ஸ் ட்ரெய்ன்' மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெறும் 15 மீட்டர் அளவிலான இணைப்புப் பணி மட்டுமே இன்னும் மீதமுள்ளது. அதுவும் முடிந்துவிட்டால் தண்ணீர் தேங்காது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்.

vijay perampur

மேலும், ரயில்வே நிலத்தில் அமைந்துள்ள இந்தக் குட்ஸ் ஷெட் குளத்தின் பரப்பளவை 3 ஏக்கரில் இருந்து 10 ஏக்கராக சென்னை மாநகராட்சி விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் மழைநீர் நேரடியாக இந்தக் குளத்திற்குள் பாய்ந்துவிடும் என்பதால், வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று மாநகராட்சி நம்புகிறது.

"ஓட்டுப் போட்டதுக்கு ஒண்ணுமே மாறலையே!" - கதறி அழுத பொதுமக்கள்

களத்தில் மக்களைச் சந்தித்துப் பேசியபோது, பல குடும்பங்கள் தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தன. பல தாய்மார்கள் கண்ணீர் மல்க பேசுகையில்:

"விஜய் சார் நம்ம தொகுதிக்கு வந்தா நல்லது நடக்கும், புதுசா ஏதாச்சும் செய்வாங்கன்னு நம்பி ஓட்டு போட்டோம். ஆனா ஓட்டுப் போட்டதுக்கு அப்புறம் இங்க எதுவுமே மாறல. பழையபடி அதே வெள்ளம், அதே இருட்டு, அதே கஷ்டம்தான். ஒரு முதலமைச்சரோட தொகுதியே இவ்வளவு மோசமா இருந்தா மத்த ஊர்லாம் எப்படி இருக்கும்? எங்களை வந்து பார்க்கக் கூட அவருக்கு நேரம் இல்லையா?"

என்று கதறி அழுதனர். பொதுமக்களின் இந்தக் குமுறல், புதிய அரசு மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை எந்த அளவுக்குத் தகர்ந்து போயிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

vijay perampur

உயர் அதிகாரிகள் நேரடி ஆய்வு: மக்களின் எதிர்பார்ப்பு என்ன?

நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேரில் வந்து ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் தண்ணீர் வெளியேற்றும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஒன்இந்தியா தமிழ் குழுவினர் களத்தில் கண்ட உண்மை என்னவென்றால், திட்டங்களும் ஆய்வுகளும் அறிக்கைகளும் ஒருபுறம் இருந்தாலும், எஞ்சியுள்ள 15 மீட்டர் பணிகளை உடனடியாக முடிக்காமல் விடுவது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாழாக்கி விடுகிறது. அதிகாரிகள் சொல்வதுபோல அடுத்த மழைக்கு முன்னதாக அந்த வேலைகள் முடிந்து, வியாசர்பாடி மக்களின் 30 ஆண்டுகால வெள்ளக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்பதை அரசுதான் தனது செயலில் காட்ட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+