சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி!

Google Oneindia Tamil News

சென்னை: ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் ஒரு சாத்தான் மீண்டும் வேதம் ஓதியிருப்பதாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்.. திப்பு சுல்தான் யார்? காங். கட்சியின் டிகே சிவக்குமார் கேள்வி! சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்.. திப்பு சுல்தான் யார்? காங். கட்சியின் டிகே சிவக்குமார் கேள்வி!

சாத்தான் வேதம்

சாத்தான் வேதம்

தமிழ்நாட்டைப் பீடித்திருக்கும் ஒரு சாத்தான் மீண்டும் வேதம் ஓதியிருக்கிறது. அது வேதமும் இல்லை. வேதாந்தமும் இல்லை. வெற்றுப் புலம்பல் என்பது அதன் அவியல் அறிக்கையிலேயே அம்பலமாகியிருக்கிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கை எடுக்கப்படும்போது எதிர்க்கட்சித் தலைவரான பழனிசாமி அவர்கள் ஏன் இப்படி பதறுகிறார் என்று தெரியவில்லை.

போதைப் பொருட்கள்

போதைப் பொருட்கள்

அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவது குறித்து மாநில முதலமைச்சர் உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரச்சனைகளில் உடனடியாக ஆலோசனை மேற்கொண்டு, அதற்கான தீர்வு குறித்து ஆய்வு செய்து, அப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் தலையாய கடமைகளில் ஒன்று. அதன் அடிப்படையில் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, 10.08.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

திசை திருப்புவதற்காக

திசை திருப்புவதற்காக

இக்கூட்டத்தில், போதைப் பொருட்களை ஒழிப்பது குறித்து அதிகாரிகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. வழக்கமான இந்நடைமுறையை பழனிசாமி அவர்கள் தேவையின்றி விமர்சித்துள்ளார். நிர்வாக ரீதியான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதில் அவருக்கு என்ன வருத்தம் என்றும் தெரியவில்லை. எதற்காக வானுக்கும், பூமிக்கும் துள்ளிக் குதிக்கிறார் என்றும் தெரியவில்லை. தன்னுடைய நிலையே திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும்போது, ஒரு ஆலோசனைக் கூட்டத்தைப் பற்றி பிதற்றுவது அழகல்ல. அல்லது தன் நிலையை திசை திருப்புவதற்காக, நல்லாட்சி நடத்தி வரும் கழக அரசின் மீது களங்கம் சுமத்த முனைந்து, விளம்பரம் தேடிக் கொள்கிறாரா என்றும் புரியவில்லை.

நான்கு ஆண்டுகளில்

நான்கு ஆண்டுகளில்

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், குறிப்பாக கடைசி நான்கு ஆண்டுகளில், அதன் நிர்வாகத் திறனற்ற தன்மை ஊரறிந்த ஒன்று. ஆட்சியைக் காப்பாற்றவா? கட்சியைக் காப்பாற்றவா? பதவியைக் காப்பாற்றவா? என்று ஓடித் திரியவே காலங்கள் ஓடியதால், கால்கள் தவழ்ந்ததால், முதுகு வளைந்ததால் இவ்வாறான ஆலோசனைகளை மேற்கொள்ள கால நேரம் கிடைக்கவில்லையோ, என்னவோ? மனக்குழப்பம் நீங்கினால்தானே தெளிவான முடிவு எடுக்க முடியும். நீங்கள் குட்டையை குழப்பி அல்லவா மீன் பிடித்தீர்கள். பிறகு எங்கே தீர்க்கமான முடிவு எடுக்க நேரம்? அ.தி.மு.க.வின் அலங்கோலமான ஆட்சிக் காலத்தின் சாட்சிகளில் ஒன்றாக நிலைத்து இருப்பதுதான் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் அபரிமிதமான வளர்ச்சி. அதனை உணர மறுத்து தினசரி "நானும் இருக்கிறேன், நானும் இருக்கிறேன்" என்று காட்டிக்கொள்ள ஏற்கனவே தெளிவாக எடுத்துரைத்த விளக்கத்திற்கு மீண்டும், மீண்டும் வினா தொடுத்து, எனக்கு புரியவில்லை, புரியவில்லை என்று கூறுகிறாரோ?

கரகாட்ட கோஷ்டி

கரகாட்ட கோஷ்டி

தன்னை கட்சியில் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு பதவி அவதாரங்கள் எடுத்து வரும் பழனிசாமி அவர்கள், இடைக்கால, தற்கால, முற்கால இதில் எந்தக் கால பொதுச் செயலாளர் என்று தெரியாமல் குழம்பி போயுள்ள அவரது தொண்டர்களுக்கு தன்னை யார் என்று காட்டிக்கொள்ள ஒரு Road Show சேலத்திலிருந்து நடத்தினார். "ஒலகத்திலேயே காரு வச்சிருக்கிற கரகாட்ட கோஷ்டி நம்மதான்" என்பதை போல ஒரு தற்காலிக கட்சிப் பதவி கிடைத்ததை கொண்டாடும் விதமாக ஆட்களை ஏற்பாடு செய்து வரவேற்பு நிகழ்ச்சிகளை இடையே நடத்தினார்.

மில்லியன் டாலர் கேள்வி

மில்லியன் டாலர் கேள்வி

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒலி, ஒளி தொகுப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நிழற்படம் இடம்பெற்றது குறித்து மகிழ்ச்சியடைவதா? அல்லது தனது படம் ஏன் இடம்பெறவில்லை என்பது குறித்து வருத்தப்படுவதா? என்ற குழப்பம் வேறு பழனிசாமிக்கு!ஆனால், தான் கடந்து வந்த பாதையை சாலை பயணத்தில் விளக்கியபோது, தான் தவழ்ந்து வந்து முதல்வரான கதையை கூற மறந்துவிட்டார். ஆனால், கேட்டவர்கள் அதனை மறந்திருப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

வாரி இறைக்கிறார்

வாரி இறைக்கிறார்

உலகளவிலான ஒலிம்பிக் போட்டிக்கு இணையான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தாங்கிக் கொள்ள இயலாமல், அரசு மீது ஏதாவது ஒரு வகையில் புழுதிவாரி தூற்ற வேண்டுமென்ற தீய எண்ணத்தில் போதைப் பொருட்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றியதால் தாங்கொண்ணா துயரத்தில் இருந்து வரும் பழனிசாமி, அரசின் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்பதில் ஆச்சர்யமில்லை!

மாவா, குட்கா, ஹன்ஸ்

மாவா, குட்கா, ஹன்ஸ்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான மாவா, குட்கா, ஹன்ஸ் போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விநியோகம் செய்பவர்கள், கடைகளில் விற்பனை செய்பவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோரைக் கண்காணித்து திடீர் சோதனைகள் நடத்தி, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெரும்பொருட்டு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புள்ளி விவரம்

புள்ளி விவரம்

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் பொருட்டு 01.01.2021 முதல் 31.07.2021 வரையிலான காலகட்டத்தில் 3,555 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவற்றில் 164 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 01.01.2022 முதல் 31.07.2022 வரையிலான காலகட்டத்தில் 5,028 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 339 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கைகள் 106.71 விழுக்காடு இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளன.

16158.055 கிலோ

16158.055 கிலோ

மேலும், இதே காலகட்டத்திற்கான கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டு 2021-ஆம் ஆண்டு 406 ஆக இருந்த எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு 76 விழுக்காடு அதிகரித்து 715 பேர் தண்டனை பெற்றனர். மேலும், 11894.99 கிலோ கஞ்சா 2021-ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதே காலகட்டத்தில் 2022-ஆம் ஆண்டு 16158.055 கிலோ என அதிகரித்தது.

சொத்துக்கள் முடக்கம்

சொத்துக்கள் முடக்கம்

மேலும், கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கம் 2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 102ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 2,922 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், 2021-ஆம் ஆண்டு 77 வழக்குகளில் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ஆனால், 2022ம் ஆண்டு 118 வழக்குகளில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

பழனிசாமிக்கு தகுதியில்லை

பழனிசாமிக்கு தகுதியில்லை

எனவே, கடந்த 2011 முதல் 2021 வரை (மே மாதம் வரை) சமூகமெங்கும் நீக்கமற வியாபித்து கொடிகட்டி பறந்த கஞ்சா விற்பனையை தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது அளிக்கப்பட்ட புள்ளி விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். இதில் எதையும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், மேலெழுந்த வாரியாக குற்றச்சாட்டுக்களை பழனிசாமி அவர்கள் அள்ளி வீசுவதால், தங்களது அடிமை அரசின் 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் செழித்து வளர்ந்தோங்கிய கஞ்சா விற்பனையை கடுமையான நடவடிக்கைகளின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியை விமர்சிக்க பழனிசாமிக்குத் தகுதியில்லை.

உண்மையில்லை

உண்மையில்லை

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021 (ஏப்ரல் வரை) கையாளாகாத அ.தி.மு.க. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 14 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகளையும் ஒப்பிட்டு பார்த்தாலே மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு புரியும்.

கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை (மே மாதம் வரை) 4 ஆண்டுகளில் 917 பேர் மீது மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14 மாதங்களில் மட்டும் 891 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே காவல்துறையினர் சிறப்பாகவும், சுதந்திரமாகவும் செயல்பட்டுள்ளனர் என்பதில் ஐயமில்லை. அரசியல் கட்சியினர் தலையீடு இருப்பதாக பழனிசாமி அவர்கள் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை என்பதும் விளங்கும்.

10 ஆண்டுகளில்

10 ஆண்டுகளில்

இதேபோன்று கஞ்சா வழக்குகளில் தண்டனை பெற்றுத்தருவதில் 2022-ஆம் ஆண்டு 76.11 விழுக்காடு அதிகரித்துள்ளது. கஞ்சா பறிமுதல் செய்ததில் 35.84 விழுக்காடு 2022-ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளது. இது பெருமைப்படக்கூடிய செய்தி அல்ல என்ற போதிலும், கடந்த 10 ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற விற்பனையின் தொடர்ச்சி தற்போதும் காணப்படுவதாகவும், அதனை களையெடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நடவடிக்கையின் காரணமாகவே பறிமுதல் செய்யப்படும் கஞ்சாவின் அளவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகால

10 ஆண்டுகால

அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக சரிவர நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தங்களது கடமைகளிலிருந்து தவறியதின் காரணமாக போதைப் பொருட்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துவிட்டது. தற்போது இவ்வரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது. இப்போதைப் பொருட்களின் புழக்கம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது கட்டவிழ்த்து விடப்பட்டதால் அதனுடைய பாதிப்பு தற்போதும் தொடர்கிறது. இதற்கு முந்தைய அரசின் சரியான திட்டமிடாத தன்மையும், அவற்றை முறையாக அமல்படுத்தாததுமே காரணங்களாகும். சமூகத்தில் புரையோடிப் போய்விட்ட இப்போதை பழக்கத்தினை அடியோடு ஒழிக்க இவ்வரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப் பெறும் தரவுகள் உண்மை நிலையை பிரதிபலிக்கின்றன.

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனை

கஞ்சா விற்பனையை பொறுத்தவரை, போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் 1985-இன் படி கஞ்சா விற்பனையை ஒழிக்கும் நோக்கில் அதில் ஈடுபடுபவரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதிலும், அவர்களது வங்கிக் கணக்கை முடக்குவதிலும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த அடிமை அரசின் ஆட்சிக்காலத்தில் "எரிகிற கொள்ளியில் எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்" என்ற பழமொழி தெரிந்திருந்தும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் ஆணிவேரை பிடுங்கி எறியாமல், தண்ணீர் விட்டு வளர்த்தது போன்று சட்டத்தில் இடமிருந்தும் பறிமுதல் செய்வதில் ஆர்வம் காட்டாமல் இருந்ததன் விளைவே கஞ்சா விற்பனை பல்கி பெருகியதற்கு காரணம் என்றால் அது மிகையாகாது.

புரிந்தும் புரியாத

புரிந்தும் புரியாத

இப்புள்ளி விவரங்களை பழனிசாமி அவர்களிடம் யாராவது எடுத்துக் கூறினால் நலமாக இருக்கும். ஏனெனில், கட்சி தன்னிடம் இருக்குமோ, இருக்காதோ, பன்னீர்செல்வம் போன்று வேறு யாரேனும் தந்திரம் ஏதேனும் செய்கின்றனரா, பல்வேறு அமைச்சர்கள் மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் வழக்குகளில் பதிவு செய்துள்ள நிலையில், தனக்கு மேலே தொங்கும் கத்தி எப்போது விழுமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும் அவருக்கு இப்புள்ளி விவரங்களை எடுத்துக் கூறினால் புரிந்து கொள்வார். அல்லது புரிந்தும் புரியாதது போல நடிப்பார்.

குட்கா பாஸ்கர்

குட்கா பாஸ்கர்

அ.தி.மு.க. அரசின் அமைச்சரவையில் போதைப் பொருளின் பெயரை பட்டமாக கொண்ட குட்கா பாஸ்கர் மீது ஒன்றிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்ட போதிலும், தொடர்ந்து அமைச்சரவையில் "பங்கு" பெற வைத்தும், "பங்கு" பெற்றும் பங்களிப்புச் சாதனை புரிந்தவர் பழனிசாமி என்பதையும் அவருக்கு யாராவது நினைவூட்டலாம்.

மாதாந்திர ஊழல்

மாதாந்திர ஊழல்

அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குட்கா ஊழலில் தனது அமைச்சரவையில் இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், தனது துறையிலிருந்த போலீஸ் டிஜிபிக்கள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மீது சிபிஐ அமைப்பே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவிருக்கின்ற நிலையில் கூட- தன் ஆட்சியில் நடைபெற்ற குட்கா மாமூல், மாதாந்திர ஊழல் வசூல் எல்லாவற்றையும் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் பழனிச்சாமி அவர்களுக்கு "போதைப் பொருட்களை தடுக்க" தீவிர நடவடிக்கை எடுக்கும் எங்கள் கழகத் தலைவரை, மாண்புமிகு முதலமைச்சரை குறை சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

அரசியல் நரித்தனம்

அரசியல் நரித்தனம்

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான நன்மை என்பதுடன், ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் உடல்நிலை சார்ந்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அந்த வகையில், மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல துறைகளும் இதில் மாண்புமிகு முதலமைச்சரின் சீரிய பணியில் ஒருங்கிணைந்து நிற்கின்றன. வெற்று ஊளையிடும் பழனிசாமி அவர்களின் அரசியல் நரித்தனம் ஒருபோதும் எடுபடாது.

English summary
Health Minister Subramanian Criticize Opposition leader Edappadi palanisamy: ஊளையிடுவதால் உண்மையை மறைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X