நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்றும் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 3 நாள்களுக்கு கனமழை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருவதோடு, ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. தற்போது கடந்த சில நாட்களாகவே மழை நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி,திருப்பத்தூர் மற்றும் வேலூராகிய பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக்காற்று வீசக்கூடும். கேரள கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு -மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications