வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால் ஆட்சி மாற்றம் நடக்குமா..? தமிழக தேர்தல் டேட்டா சொல்வது என்ன?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 85% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 73% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இந்த முறை வாக்குப்பதிவு வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வாக்குப்பதிவு உயர்வு எதை உணர்த்துகிறது? வாக்குப்பதிவு அதிகரிப்புக்கும், ஆட்சி மாற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறதா?
தமிழ்நாட்டில் இன்று ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மொத்தமாக 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.88 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர். வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

இந்த தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி தமிழ்நாட்டில் 85.13% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 92.64 சதவிகித வாக்குகளும், சேலத்தில் 90.70% வாக்குகளும், தருமபுரியில் 90.14 சதவிகித வாக்குகளும், ஈரோட்டில் 90.10 சதவிகித வாக்குகளும், நாமக்கல்லில் 90 % வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரையிலான தேர்தல்களில் வாக்குப்பதிவு
1951 சட்டசபை தேர்தல் - 54.75% - ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி
1957 சட்டசபை தேர்தல் - 46.56% காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது
1962 சட்டசபை தேர்தல் - 70.65% காமராஜர் ஆட்சி அமைந்தது
1967 சட்டசபை தேர்தல் - 76.57% ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதன்முறையாக திமுக வென்றது
1971 சட்டசபை தேர்தல் - 72.10% திமுக ஆட்சி தொடர்ந்தது
1977 சட்டசபை தேர்தல் - 61.58% ஆட்சி மாற்றம் நடைபெற்று முதன்முறையாக அதிமுக வெற்றி பெற்றது
1980 சட்டசபை தேர்தல் - 65.42% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1984 சட்டசபை தேர்தல் - 73.47% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
1989 சட்டசபை தேர்தல் - 69.69% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
1991 சட்டசபை தேர்தல்- 63.84% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது முதன்முறையாக ஜெயலலிதா முதலமைச்சர் ஆனார்
1996 சட்டசபை தேர்தல் - 66.95% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2001 சட்டசபை தேர்தல் - 59.07% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2006 சட்டசபை தேர்தல் - 70.82% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2011 சட்டசபை தேர்தல் - 78.01% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதிமுக வெற்றி பெற்றது
2016 சட்டசபை தேர்தல் - 74.24% அதிமுக ஆட்சி தொடர்ந்தது
2021 சட்டசபை தேர்தல் - 72.73% ஆட்சி மாற்றம் நிகழ்ந்து திமுக வெற்றி பெற்றது
2026 சட்டசபை தேர்தல் - 85% ?
வாக்குப்பதிவும் ஆட்சி மாற்றமும்
பொதுவாக, வாக்குப்பதிவு அதிகரிக்கும்போது ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற கருத்து உண்டு. ஆட்சி மீதான அதிருப்தி அலையால் அதிகமானோர் வாக்களிக்க உந்தப்படுவார்கள் என்பது கடந்த காலம் தேர்தல் முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது. எனினும், வாக்குப்பதிவு குறைந்தபோது ஆட்சி மாற்றமும், வாக்குப்பதிவு உயர்ந்தபோது ஆட்சி தொடர்ந்ததும் கூட நடந்துள்ளது. கடந்த 2021 தேர்தலிலேயே வாக்குப்பதிவு குறைந்தபோதும், அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது.
எஸ்.ஐ.ஆர் முக்கிய காரணம்
கடந்த முறையை விட இந்த முறை வாக்குப்பதிவு அதிகரிப்புக்கு எஸ்.ஐ.ஆர் ஒரு முக்கியமான காரணம். இந்த முறை எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளுக்குப் பிறகு சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்தது.
கடந்த தேர்தலில் 4.63 கோடி வாக்காளர்கள் மொத்தமாக வாக்களித்திருந்தனர். இந்த தேர்தலில் அது 4.87 கோடியாக அதிகரித்துள்ளது. சுமார் 25 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் அதிகரிப்புக்கு எஸ்.ஐ.ஆர் பணிகளும் முக்கியமான காரணம் என்பதால், வாக்கு எண்ணிக்கை அதிகரிப்பால் ஆட்சி மாற்றம் நடக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications