ஃபீனிக்ஸ் மாலில் மேடையேற முடியாமல் தவித்த ஹிப்ஹாப் ஆதி.. 4 கிலோ மீட்டர் டிராபிக், ஸ்தம்பித்த சென்னை
சென்னை: சினிமா மோகத்தால் பிரபலங்களால் கூட, பொது இடங்களுக்கு சுதந்திரமாக வர முடிவதில்லை. பொதுமக்கள் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்... அந்தப் புரிதல் வரும்போதுதான் பலவிதமான அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்" என்று பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நேற்று முன்தினம் இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "மீசைய முறுக்கு -2" படத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி சென்றிருந்த நிலையில், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் வெள்ளம் போல் கட்டுக்கடங்காமல் திரண்டுவிட்டது.
இதனால் அவரால் மேடை ஏற முடியவில்லை.. மேலும், இந்த நிலை நீடித்தால் அசம்பாவிதங்கள் நிகழக் கூடும் எனப் போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து, பாதுகாப்பைக் கருதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
ஹிப்ஹாப் ஆதி
பிறகு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டு, "உங்கள் அனைவரையும் சந்திக்க மிகுந்த ஆவலோடு வந்திருந்தேன். ஆனால் உங்களுடைய பாதுகாப்பு கருதியும், காவல் துறையின் அறிவுறுத்தலின் படியும் என்னால் மேடை ஏற முடியவில்லை. உங்கள் கட்டுக்கடங்காத அன்பு ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும், உங்களோடு #meesayamurukku2 வை கொண்டாட முடியவில்லை என்பதில் மிகுந்த வருத்தம்" என தெரிவித்திருந்தார்.
மாலில் சினிமா நிகழ்ச்சிகள்
இந்த நிகழ்வு சோஷியல் மீடியாவிலும் நேற்று முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு media circle சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில் இதுகுறித்து சில பொதுநலன் கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.
"மீசை முறுக்கு 2 படத்தின் ப்ரமோஷனுக்காக, பீனிக்ஸ் மாலில் 5 பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு இலவச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பிற்பகல் 3 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான மக்கள் வரத்தொடங்கினர்.
பீனிக்ஸ் மாலின் கட்டமைப்பு மிகக் குறுகிய இடத்தை கொண்டது. அங்கு அதிக அளவில் மக்கள் கூடும் போது கட்டுப்பாட்டை இழந்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். வார இறுதி நாட்களில் மால்கள் மற்றும் தியேட்டர்களிலிருந்து வெளியேறும் கூட்டத்தினாலேயே பொதுவாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உருவாகும். ஆனால், அன்றைய தினம் எதிர்பார்ப்பதை விட 4 முதல் 5 மடங்கு அதிகமான கூட்டம் கூடிவிட்டது.
ஃபீனிக்ஸ் மாலில் கூட்டம்
மாலில் குண்டூசி போட்டால் கூடக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அனைத்துத் தளங்களிலும் மக்கள் அலைமோதினார்கள்.. இதனால் மாலுக்குள் வாகனங்களுடன் வர முடியாமலும், நடந்து கடைகளுக்குச் செல்ல முடியாமலும் பொதுமக்கள் குடும்பத்துடன் லாக் ஆகித் திணறிவிட்டனர்..
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த போலீசார், சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்தது.
வேளச்சேரியை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 மணி நேரத்திற்கும் மேலாக டிராபிக் பாதிக்கப்பட்டது.. அந்த நேரத்தில் மழையும் பெய்ததால் வேளச்சேரி பகுதியே ஸ்தம்பித்து, ஆம்புலன்ஸ் கூடச் செல்ல முடியாத நிலைமை உருவாகிவிட்டது.
திறந்தவெளியில இசை நிகழ்ச்சிகள்
மால் நிர்வாகங்கள் கமர்ஷியலாக மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், இதுபோன்ற பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு அனுமதி அளிக்கும் முன் உரிய பாதுகாப்பு மற்றும் திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல, ஹிப்ஹாப் தமிழா போன்ற பிரபலங்களுக்கும் சமூகப் பொறுப்பு மிக அவசியம். இலவச நிகழ்ச்சி என்பதால் பெருந்திரளான கூட்டம் வரும் என்பதை உணர்ந்து, மால் போன்ற அடைபட்ட இடங்களை தவிர்த்து, YMCA போன்ற பெரிய திறந்தவெளி மைதானங்களில் இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும்.

அசம்பாவிதங்களை தவிர்க்க புரிதல் தேவை
சென்னையில் மக்களுக்குப் பொழுதுபோக்கிற்கான இடங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. வார இறுதி நாட்களில் மெரினா பீச் அல்லது குளிரூட்டப்பட்ட மால்கள் மட்டுமே மக்களின் சாய்ஸாக இருக்கின்றன. தியேட்டர்களில் நல்ல வரவேற்பு இல்லாத சூழலில், மக்கள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள்.
சினிமா என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே. ஆனால், தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் மக்கள் பிரபலங்கள் மீது காட்டும் எல்லைமீறிய ஈர்ப்பு ஒரு அடிமைத்தனம் போல மாறுகிறது. இந்த சினிமா மோகத்தால் பிரபலங்களால் கூட, பொது இடங்களுக்குச் சுதந்திரமாக வர முடிவதில்லை. பொதுமக்கள் சினிமாவைக் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப் பழக வேண்டும்... அந்தப் புரிதல் வரும்போதுதான் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
