உங்கள் வங்கி கணக்கில் இப்படியும் பணம் திருடப்படலாம்.. நூதன முறையில் நடக்கும் புதிய மெகா மோசடிகள்!
சென்னை: எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உங்கள் பான்கார்டை அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று பரவும் மெசேஜ்களில் ஒரு லிங்க் வரும். அதை தெரியாமல் கிளிக் செய்து உள்ளே சென்றால் உண்மையிலேயே உங்கள் வங்கி கணக்கை முடக்கி பணத்தை திருடி, உங்களுக்கு விபூதி அடித்துவிடுவார்கள் ஜாக்கிரதை மக்களே.
வங்கி வாடிக்கையாளர்களை குறிவைத்து பல்வேறு மோசடிகள் நூதன முறையில் அரங்கேறி வருகிறது. எனவே வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை அல்லது வங்கி சம்பந்தமான தகவல்களை அந்தந்த வங்கிகளின் அதிகாரப்பூர்வ மெசேஜ்களில் இருந்து வரும் தகவலை மட்டும் நம்புவது நல்லது.
அல்லது குறிப்பிட்ட வங்கிகளின் இணையதளத்தில் தகவல்களை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் உங்களை ஏமாற்றி பணம் பறிக்க ரூம் போட்டு யோசித்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். எப்படி ஏமாற்றி பணத்தை பறித்து சொகுசாக வாழலாம் என்பதே அவர்களின் திட்டம்.

நூதன திருட்டு
பணத்தை ரோட்டில் செல்லும் போது ஒருவர் திருடினால் அது வழிபறி. அதே பணத்தை ஒரு லிங்கை நாம் தவறுதலாக கிளிக் செய்வதன் மூலம் திருடுகிறார்கள். அதுவும் தொழில்நுட்ப ரீதியான வழிபறி. இந்த நூதன முறையிலான பண மோசடிகள் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. எப்படி இவர்களிடம் இருந்து தப்பிப்பது என்பது நாம் யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், அவர்களோ எப்படி வேறு முறையில் நம்மை ஏமாற்றி பணத்தை கறப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே மக்களே மிகவும் விழிப்புடன் இருப்பது நல்லது.

நம்பாதீர்கள்
சரி எப்படி விழிப்புடன் இருப்பது? எப்படி ஏமாற்றுகிறார்கள்? நாம் என்ன செய்தால் ஏமாறாமல் இருக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம். முதலில் உங்களுக்கு வரும் எஸ்எம்எஸ்களை அப்படியே நம்பக்கூடாது. உதாரணமாக : எஸ்பிஐ வாடிக்கையாளர்களே உங்கள் பான்கார்டை அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று ஒரு மெசேஜ் வருகிறது. அந்த மெசேஜ்ஜில் வரும் லிங்கை கிளிக் செய்ய சொல்வார்கள். தெரியாமல் கிளிக் செய்தால் உங்கள் தகவல்களை திருடி பணத்தை திருடுவார்கள். அல்லது உங்கள் மொபைல் போனை ஹேக் செய்து உங்கள் தகவலை திருடி பணத்தை பறித்துவிடுவார்கள்.

லிங்கை தொடாதீங்க
எஸ்பிஐ வாடிக்கையாளர்களே (எந்த வங்கி பெயரிலும் வரலாம்) உங்கள் kyc முழுமையாக இல்லை, உடனே உங்கள் சுயவிவரங்களை முழுமையாக நிரப்புங்கள். இல்லாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்று மெசேஜ் வரும். அதில் உள்ள லிங்கை கிளிக் செய்தால், அவ்வளவு தான்.. நீங்கள் காலி,. உங்களுக்கு விபூதி அடித்து உங்களை வங்கி கணக்கில் நுழைந்து பணத்தை திருடிவிடுவார்கள். எனவே நாம் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது,.

பொய் கதைகள்
எப்படி ஏமாறாமல் தப்பிப்பது? உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சமானியார்கள், கொஞ்சம் ஓரளவே படித்தவர்கள், அல்லது படிக்காதவர்கள் என்றால் எளிதாக ஏமாற்றும் அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக கொள்ளையர்கள் வலுவாக உள்ளார்கள். பொய் கதைகளை எளிதாக உருவாக்ககூடியவர்கள். எனவே மக்களாகிய நாம், வங்கி தொடர்பான மெசேஜ்கள் வந்தால், அது வங்கியின் பெயரில் வருகிறதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி வங்கி பெயர் இல்லை. ஒரு மொபைல் எண் என்றால் நிச்சயம் கண்டுகொள்ளக்கூடாது. அதை ஸ்பேம் என ரிப்போர்ட் செய்வது நல்லது.

எப்படி விசாரிப்பது
நண்பர்கள் அனுப்பும் பார்வேர்டு வாட்ஸ் அப்மெசேஜ்கள் எதையும் நம்பி கிளிக் செய்ய வேண்டாம். மேலும் உங்களுக்கு வங்கி தொடர்பான எந்த தகவலாக இருந்தாலும் அதன் அதிகாரப்பூர்வ இணைதளத்தில் போய் பார்ப்பது நல்லது. உங்களுக்கு இணையதளத்திற்கு சென்று பார்க்க தெரியாது என்றால், உடனே சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கோ அல்லது வங்கிக்கோ நேரில் சென்று விசாரிப்பது நல்லது. இதன் மூலம் மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்கலாம். அதேபோல் வங்கி ஊழியர்கள் என்று சொல்லியோ அல்லது யார் கேட்டாலும் ஒடிபிகளை சொல்லக்கூடாது. அப்படி செய்தால் உங்கள் பணம் உங்கள் கணக்கில் இருக்காது. ஒருவேளை உங்கள் கணக்கில் பணம் திருடப்பட்டால் தாமதிக்காமல் சைபர் கிரைம் போலீசை நாடுங்கள். எவ்வளவு விரைவாக நாடுகிறீர்களோ அவ்வளவு வேகமாக உங்கள் பணத்தை காப்பாற்ற முடியும். அதாவது அவர்கள் பணத்தை எடுப்பதற்குள் அவர்களது வங்கி கணக்கை முடக்க முடியும்.












Click it and Unblock the Notifications