தவெக அரசால் கைது செய்யப்படும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் ஒரே நாளில் ஜாமீனில் வருவது எப்படி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: "முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் சட்டத்துறை, அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்கும் அளவுக்குத் திறமையாகச் செயல்படுகிறது. ஆனால், அவர்களை 15 நாட்கள்கூட ரிமாண்டில் வைக்க முடியாமல் தடுமாறுகிறது. அடுத்த நாளோ அல்லது அதே நாளிலோ ஜாமீனில் விடுதலையாகி விடுகிறார்கள்" என்று சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்வதைக் காண முடிந்தது. அவர்களின் கிண்டல் உண்மையா? இதுவரை நடந்தது என்ன என்பதைப் பார்ப்போம்.

மாரிதாஸ்

பிரபல யூடியூபரான மாரிதாஸ் தமிழக அரசையும், முதல்வர் விஜயையும், அமைச்சர்களையும் விமர்சித்து அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், ஜூன் 9 அன்று நீதிமன்றம் சொந்த ஜாமீனில் மாரிதாஸை விடுவித்தது. அமைச்சர் கீர்த்தனா குறித்து தவறான பதிவுகளை வெளியிட்டதாக அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

politicians

அனிதா ராதாகிருஷ்ணன்

அடுத்ததாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வர் விஜய் குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் அவதூறாகப் பேசியதாக வழக்கில் சிக்கினார். ஆனால், முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் சொந்தப் பிணையில் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டார்.

ஜி.வி. மார்க்கண்டேயன்

திமுக எம்.எல்.ஏ ஜி.வி. மார்க்கண்டேயன் முதல்வர் விஜய்யை மிரட்டும் வகையில் மோசமாகப் பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில் ஜூலை 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை ஆகஸ்ட் 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 4-ஆம் தேதி அன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். தற்போதும் அவர் வழக்கைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

முதல்வர் விஜய் தொடர்பாகவும், நடிகை திரிஷா குறித்தும் பேசிய கருத்துகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீசாரால் சென்னையில் வைத்துக் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் அரசு தரப்பு விசாரணை நடத்துவதற்காக மட்டும் அவரை விடுவிக்க விரும்புவதாகத் தெரிவித்ததை அடுத்து, உயர் நீதிமன்றம் அன்றே விடுவிக்க உத்தரவிட்டது. முன்னதாக, போலீஸ் வாகனத்தில் சென்னை முதல் தஞ்சை செங்கிப்பட்டி வரை உதயநிதி அழைத்து வரப்பட்டார். வழிநெடுகிலும் திமுகவினர் வந்துகொண்டே இருந்ததால், அது போலீசாருக்குத் தலைவலியாக மாறியது. இந்தக்கையது விவகாரம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் அரசியலுக்குச் சாதகமானதாக மாறுகிறதா என்ற விவாதமும் அப்போது எழுந்தது.

தாமோதரன் பிரகாஷ்

சவுக்கு மீடியாவில் பணியாற்றிய பெண் தொகுப்பாளரைப் பற்றி எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகத் தவறான தகவல் பரப்பியதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 'நக்கீரன்' தாமோதரன் பிரகாஷ் செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று ஆதம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆனால், மறுநாளே நிபந்தனை ஜாமீனில் நக்கீரன் தாமோதரன் பிரகாஷ் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

கார்த்திகா

அடுத்ததாக, தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் விஜய்யின் வாகனப் பேரணிக்குத் தடையாகச் சாலை மறியலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில், தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா, அவரது கணவர் மற்றும் 8 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கைதான அன்றே 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கார்த்திகா உள்ளிட்ட கைதானவர்கள் இன்று ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

ஸ்டாலின் கண்டனம்

இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்துக் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காகக் கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது" என்று எச்சரித்தார். அத்துடன், "சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் தவெக அரசு நடந்துகொள்கிறது" என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

எப்படி விடுதலை?

கைதுகள் எல்லாமே அரசை விமர்சனம் செய்ததற்காக நடந்தவை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அப்படி கைதானவர்கள் ஒரே நாளில் அல்லது சில நாட்களில் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். வெளியே வந்தவர்கள் அனைவரும் முன்பை விடவும் மோசமாக அரசை விமர்சிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் சட்டத்துறை வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தாலும், அடுத்தடுத்து ஜாமீன் பெறுவதற்குக் காரணம், ஜாமீனில் விடக்கூடிய அளவில்தான் பெரும்பாலான குற்றங்கள் இருப்பதாக விமர்சனங்கள் உள்ளன. எனினும், சில குற்றங்கள் ஜாமீனில் விட முடியாதவையாக இருந்தாலும், நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் தந்துள்ளது என்பதே உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+