"25 பேர்".. திமுக மீது பாஜக வீசிய வெடி.. அறிவாலயத்துக்கு "சேலஞ்ச்" விடுத்த கமலாலயம்.. வெடித்த விவாதம்
திமுக மீது அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டை வைத்து பேட்டி தந்துள்ளார்
சென்னை: ஒரே ஒரு வார்த்தையை சொல்லி திமுகவை கடுப்பாக்கி உள்ளார் அண்ணாமலை.. ஏற்கனவே தமிழக பாஜகவால் எரிச்சலில் உள்ள திமுகவுக்கு, அக்கட்சி தலைவரின் பேச்சுக்கள் மேலும் டென்ஷனை ஏற்படுத்தி வருகிறது.
Recommended Video
அண்ணாமலை ஒரு நாளிதழுக்கு பேட்டி தந்திருக்கிறார்.. அதில், தமிழகத்தில் பாஜக வளர்ச்சி குறித்தும், நடக்க போகும் தேர்தலில் பாஜகவின் பங்களிப்பு குறித்தும் விரிவாக அண்ணாமலை விளக்கி இருந்தார்.
"வரப்போகும் எம்பி தேர்தலில் 25 பேரை தமிழகத்திலிருந்து டெல்லிக்கு அனுப்பியே தீருவோம்.. 2024 தேர்தலில் இதுவே எங்கள் லட்சியம்" என்று மீண்டும் உறுதியாக சொல்லி உள்ளது, பிற கட்சிகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்போது, திமுகவை பற்றி, கேள்வி கேட்டதும் அண்ணாமலை பொரிந்து தள்ளி விட்டார்.

திராவிட கட்சிகள்
திராவிட கட்சிகளே கூட்டணியை நம்பிதான் இருக்கின்றன அப்படி இருக்கும்போது, பாஜகவால் கூட்டணி இல்லாமல் சாதிக்க முடியுமா? என்று கேட்கப்பட்டது.. அதற்கு அண்ணாமலை, "தமிழகத்தில் கூட்டணி இல்லாமல் திமுக தேர்தலை சந்திக்குமா? 70 வருடங்களாக அரசியலில் இருக்கும் திமுகவுக்கு கூட்டணி தேவைப்படுகிறது என்றால், அது திமுகவின் பலவீனம்.. பாஜக இப்போதுதான் இங்கு வளர்ந்து வருகிறது.. முதலில் திமுக தனியாக போட்டியிடட்டும்.. அவர்களை தனியாக எதிர்கொள்ள நாங்கள் காத்திருக்கிறோம்" என்றார் அண்ணாமலை.

பாஜக மாடல்
அதுமட்டுமல்ல, பாஜக மாடல் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்டது.. அதற்கு அண்ணாமலை, "குடும்ப கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மக்கள் ஆட்சியே பாஜக ஆட்சி மாடல்.. 60 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்த திமுகவால் இன்றுவரை சமூக நீதியையும் சம உரிமையையும் வழங்க முடியவில்லை" என்று சொல்லி மீண்டும் திமுகவை சீண்டினார்.. அண்ணாமலை இன்று திமுகவுக்கு வைத்துள்ள சவால், தமிழக அரசியலில் ஒரு விவாதமாகவே வெடித்துள்ளது.. பாஜக மற்றும் திமுகவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புமான கருத்துக்களும் அதிர கிளம்பி உள்ளன.

தோழர்கள்
"70 வருட கட்சி என்று சொல்லிக் கொள்ளும் திமுக, ஏன் கூட்டணி வைக்கிறது? ஒவ்வொரு முறையும் விசிக & அல்லது பாமகவை நம்பியே களமிறங்குகிறது என்றால், "சாதி ஓட்டுக்கள்" திமுகவுக்கும் தேவை என்றுதானே அர்த்தம்? கடந்த 2013 எம்பி தேர்தலில் தனித்து போட்டி என்று ஜெயலலிதா அறிவித்தாரே, அதுபோல் திமுக இந்த முறை அறிவிக்க தயாரா? அவ்வளவு ஏன்? 100 வருட பாரம்பரிய கட்சி, அதிலும் தேசிய கட்சியான காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும் ஏன் தனித்து போட்டியிடவில்லை? என்று கேள்விகள் எழுந்துள்ளன.

நேர்க்கோடு
மற்றொரு பக்கம் திமுகவுக்கு ஆதரவான கருத்துக்களும் விழுகின்றன.. கூட்டணி வைத்து போட்டியிடுவதால், ஒரு கட்சி பலமில்லை என்று எடுத்துக் கொள்ள முடியாது.. ஒத்த கருத்துடைய அல்லது ஒத்த சித்தாந்தத்தை உடையவர்கள் ஒரே நேர்க்கோட்டில் இணைவது பலவீனமல்ல.. வேறு வேறு சித்தாந்தங்களை உடையவர்கள், கூட்டணி வைத்தால்தான், அது கடைந்தெடுத்த சுயநல அரசியலாக கருத்தில் கொள்ளப்படும்.. இந்துத்துத்துவை திணிக்கும்போது, அதற்கு எதிர்க்கருத்தை உடையவர்கள் ஒன்றிணைகிறார்கள்..

முதுகில் சவாரி
இன்னும் சொல்லப்போனால், கடந்த சட்டசபை தேர்தலிலேயே திமுக தனித்து போட்டியிடவும் தயாரானது.. இன்றுள்ள நிலைமை தொடர்ந்தால், வரப்போகும் தேர்தலிலும் தனித்தே களமிறங்கக்கூடிய அளவுக்கு பலத்தை தற்போது வரை பெற்றுள்ளது.. 70 வருட கட்சியுடன், புதிதாக வளர்ந்து வரும் ஒரு கட்சியை ஒப்பிட்டு பார்ப்பதே தவறு.. அப்படி பார்த்தால், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள பாஜக, தனித்துதான் போட்டியிடுகிறதா? எத்தனையோ மாநிலங்களில், வெற்றி பெற்ற கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, கூட்டணி ஆட்சியை பிடிக்கவில்லையா? புதுச்சேரி வரை வந்துவிட்டார்களே? எனவே, பாஜக இந்த விஷயத்திலும் திமுகவுடன் தேவையில்லாமல் ஒப்பீடு செய்து மோதுகிறது" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications