சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

#Exclusive ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ : இடைத்தேர்தலே நடக்காதா? எப்படி? அரசியல் விமர்சகர் ‘பளிச்’ பேட்டி!

Google Oneindia Tamil News

சென்னை : அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை ஆதரித்து கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுபற்றி ஒன் இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ள அரசியல் விமர்சகர் கலை, ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதகமான அம்சங்கள், சாத்தியங்கள் பற்றிப் பேசியுள்ளார்.

மத்திய சட்ட ஆணையம் ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறைக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து அரசியல் விமர்சகர் கலை நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி வருமாறு:

ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா? ஒரே நாடு ஒரே தேர்தல்.. அடம்பிடிக்கும் பாஜக! முதல் ஆளாய் ஆதரவு கொடுத்த ’அண்ணா’ திமுக! சாத்தியமா?

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரே நாடு ஒரே தேர்தல்

கேள்வி : ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறைக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதியிருப்பது பற்றி..?

பதில் : தேர்தல் ஆணையமும், சட்ட ஆணையமும் ஏற்கனவே 14வது சட்டக் குழு மூலம் ஏராளமானோரிடம் இருந்து கருத்துகளைக் கேட்டு ஒரு வரைவு அறிக்கையையும் வெளியிட்டனர். அந்த வரைவு அறிக்கையைத்தான் 15வது சட்டக் குழு, அரசியல் கட்சிகளுக்கு அனுப்பி கருத்துகளைச் சொல்லச் சொல்லி இருக்கிறது. ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை உச்ச நீதிமன்றமும் ஆதரித்திருக்கிறது. தேர்தல் ஆணையம் கருத்துகளைக் கேட்டிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக ஆதரிப்பதாக கூறி இருக்கிறார். இது சரியா தவறா என்பது பற்றி இரு பக்கமும் கருத்துகள் இருக்கிறது.

2 விஷயங்கள்

2 விஷயங்கள்

2 விஷயங்கள் இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் செலவைக் குறைக்க முடியும். எப்போதுமே நாட்டில் ஏதாவது ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டே இருக்கும் நிலையை தவிர்க்க முடியும். 6 மாதங்களுக்கு ஒரு முறை பொதுத் தேர்தல், இடைத்தேர்தல் நடத்தப்படும் சூழல் இருக்கிறது. இதனால் செலவினங்கள் அதிகமாகின்றன. 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வந்தால், தமிழ்நாடு சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, இதோடு தேர்தல் நடத்துவார்கள் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகவே இந்த ஒத்திசைவு கொண்டு வரப்படும். உதாரணமாக, விரைவில் 5 மாநில தேர்தல்கள் வரப்போகின்றன. அதை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து நடத்த முயற்சி செய்வார்கள்.

ஒருமித்த ஆட்சி

ஒருமித்த ஆட்சி

இப்படி ஒவ்வொரு தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் நீக்கப்பட்டு ஒரே நேரத்தில் தேர்தல் வராது. ஒரே நாளில் செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஆட்சி கவிழ்ந்தால் என்ன நடக்கும் என்று அந்த வரைவு அறிக்கை சொல்வது என்னவென்றால், அந்த மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து, ஒரு ஒருமித்த ஆட்சியை உருவாக்க முடியுமா என்பதை ஆய்வு செய்யப்படும். அதற்கு சாத்தியமிருந்தால் அப்படிச் செய்யப்படும். அது அமையாத பட்சத்தில் அங்கு தேர்தல் நடத்தித்தான் ஆகவேண்டும்.

 ஆட்சி கலைக்கப்பட்டால்

ஆட்சி கலைக்கப்பட்டால்

அந்த தேர்தலை அடுத்து வரக்கூடிய ஏதாவது தேர்தலோடு சேர்த்து நடத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். வாய்ப்பு இல்லையென்றால் தனியாகத்தான் நடத்தி ஆகவேண்டும். ஆனால், 3 ஆண்டுகள் முடிந்து ஒரு சட்டமன்றம் கலைக்கப்படுகிறது என்றால், அடுத்து தேர்தலைத் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதனை மீறி தேர்தல் நடந்தால், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு ஆட்சி காலம் 2 ஆண்டுகள் தான். ஏனெனில் அடுத்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிடும். அதோடு சேர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

ஒருவேளை எம்.பி தொகுதி அல்லது எம்.எல்.ஏ தொகுதியின் உறுப்பினர் இறந்துவிட்டால் அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவையில்லை. எந்தக் கட்சியின் உறுப்பினர் மறைந்தாரோ, அந்தக் கட்சியே ஒரு உறுப்பினரை தேர்வு செய்து கொள்ளலாம். உதாரணமாக, இப்போது ஈரோடு கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மறைந்ததால், தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டப்படி, அங்கு தேர்தல் நடத்த வேண்டியதில்லை. காங்கிரஸ் கட்சியே அங்கு வேறொருவரை தேர்வு செய்து கொள்ளலாம்.

 மக்களாட்சிக்கு எதிரானதா?

மக்களாட்சிக்கு எதிரானதா?

கேள்வி : கட்சிகள் ஒருமித்த கருத்தோடு அரசாங்கத்தை தேர்வு செய்வதோ, இடைத்தேர்தல் இன்றி கட்சிகளே உறுப்பினரை தேர்வு செய்வதோ மக்களாட்சி தத்துவத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் விஷயமாக பார்க்கலாமா?

பதில் : பிரதானமாக ஒரு வேட்பாளருக்கு மக்கள் வாய்ப்பளிப்பதில்லை. கட்சியை வைத்தோ, கூட்டணியை வைத்தோதான் வாக்களிக்கிறார்கள். அதனால், அந்தக் கட்சியின் வேட்பாளரை அந்த தொகுதி மக்கள் தேர்வு செய்த நிலையில், அவர் இறந்தால் மீண்டும் அதே கட்சி, உறுப்பினரை தேர்வு செய்வதில் பிரச்சனை இல்லை. அவருக்கும் பதவி காலம் என்பது அந்த அரசின் ஆட்சிக்காலம் வரை தான். ஒரு எம்.எல்.ஏ 2 ஆண்டு காலத்தில் இறந்தார் என்றால், புதிதாக வருபவருக்கு அடுத்த 3 ஆண்டுகள் தான் பதவிக்காலம். இதுபோல, தேர்தல்களை ஒருங்கிணைத்துக்கொண்டே செல்வார்கள்.

ஒரே கட்சி

ஒரே கட்சி

இந்தியாவில் 1952 முதல் 1962 வரை தேர்தல்கள் ஒரே நேரத்தில் தான் நடந்து கொண்டிருந்தன. அதன் பிறகு 356 சட்ட விதியைப் பயன்படுத்தி மாநில அரசுகளை மத்திய அரசு கலைத்துக் கொண்டே இருந்தது போன்ற காரணங்களால் தேர்தலில் ஒத்திசைவு குறைந்தது. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கும்போது மக்கள் ஒரே கட்சியை இரண்டிற்கும் தேர்வு செய்து விடுவார்கள் என்ற கருத்து இருக்கிறது. ஆனால், அப்படியான நிலை இல்லை. மக்கள் தேசிய அளவில், மாநில அளவில் என வெவ்வேறு நிலைகளில் முன்னுரிமை கொடுத்துத்தான் வாக்களிக்கிறார்கள்.

நல்ல முறை

நல்ல முறை

எனவே இது ஒரு நல்ல திட்டம் என்றுதான் நான் கருதுகிறேன். இதன் மூலம் எப்போதுமே எங்கேனும் தேர்தல் மனநிலையிலேயே இருப்பதைத் தவிர்க்கலாம். ஒரு ஆட்சி அமைந்தபிறகு 5 ஆண்டு காலத்திற்கு இடையே தேர்தல்கள் எதுவும் நடக்காத நிலையில் தான், அரசு திட்டப்படி மக்கள் பிரச்சனைகளை கவனிக்க முடியும். இடையிலேயே தேர்தல்கள் வந்தால், திரும்பத் திரும்ப வாக்குறுதிகள் அளிக்க வேண்டி இருக்கும், அவற்றை நிறைவேற்ற முடியாமல் போகும், செலவினங்கள் அதிகரிக்கும். இதையெல்லாம் பார்க்கும்போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது ஒரு நல்ல முறையாகவே தோன்றுகிறது.

ஆட்சி கலைக்கப்படாது

ஆட்சி கலைக்கப்படாது

கேள்வி : ஈபிஎஸ் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு சார்பாக நிலைப்பாடோ, வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளோ எடுக்க வாய்ப்பிருக்கிறதா?

பதில் : தேர்தல் ஆணையம் ஓபிஎஸ்ஸிடமும் கேட்டிருக்கிறது. அவர்களும் தங்கள் பதிலை அனுப்புவார்கள். திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளுமே தங்கள் பதிலை அனுப்புவார்கள். ஒரு குறிப்பிட்ட கால வரையறையை நிர்ணயித்துள்ளதால், நிச்சயமாக சீக்கிரமாகவே இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே இதில் முடிவு எட்டப்படும், சில மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் தள்ளி வைக்கப்படும். அப்படி தள்ளி வைக்கப்படும்போது, 5 ஆண்டு பதவிகாலம் முடிவடைந்த அரசாங்கம் நீட்டிக்கப்படும். ஒரு அரசின் பதவிக்காலம் முடிவதற்குள் அதைக் கலைக்கக்கூடாது, ஆனால், நீட்டிப்பு செய்து கொள்ளலாம். இதுவும் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு இந்த திட்டத்தில் ஏராளமான சந்தேகங்கள் இருந்தன. வரைவு அறிக்கையைப் படித்தபிறகு தெளிவாகிவிட்டது.

பாஜக கொள்கையை ஏற்ற அதிமுக

பாஜக கொள்கையை ஏற்ற அதிமுக

கேள்வி : ஒரே நாடு எனும் கருத்தாக்கத்தை பாஜகவே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. இப்போது எடப்பாடி பழனிசாமி இதற்கு ஆதரவளித்திருப்பதன் மூலம், பாஜகவின் கொள்கைகளை ஈபிஎஸ் தரப்பு ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?

பதில் : இந்த ஒரு விஷயத்திற்கு ஆதரவு அளித்துவிட்டதாலேயே அப்படிச் சொல்லிவிட முடியாது. மொழிக் கொள்கையில் இரட்டை மொழிக்கொள்கை தான் என அதிமுக உறுதியாக இருக்கிறது. ஆனால், பாஜக மும்மொழிக்கொள்கையை முன்வைக்கிறது. சிஏஏவை ஏற்றுக்கொண்டாலும், என்.ஆர்.சி, என்பிஆரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஆட்சியில் இருந்தபோதே அதிமுக அறிவித்தது. கொள்கை முரண்பாடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். கொள்கையில் பாஜக, அதிமுக வித்தியாசமே இல்லையென்றால் 2 கட்சிகளாக நடக்க அவசியம் இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இப்போது மட்டுமல்ல, தொடக்கத்தில் இருந்தே அதிமுக ஆதரித்தே பேசி வந்தது. அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.

மாநில சுயாட்சி - அதிமுக சமரசம்

மாநில சுயாட்சி - அதிமுக சமரசம்

கேள்வி : ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வந்தால் மாநில சுயாட்சி பெரியளவில் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஆதிக்கம் அதிகரிக்கும், மாநில தேர்தல்களின் மதிப்பு குறையும் என்று குரல்கள் ஒலித்து வருகின்றன. இதற்கு அதிமுக ஆதரவு தெரிவிக்கிறது என்றால், அக்கட்சி மாநில சுயாட்சி முழக்கத்தில் சமரசம் செய்துகொண்டதாக கருதலாமா?

பதில் : மாநில சுயாட்சிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேர்தலையே நடத்தாமல் தள்ளிப் போடுகிறார்கள் அல்லது மத்திய அரசே தேர்தலை தீர்மானிக்கிறது என்றால், அதை மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று கூறலாம். ஆனால், தேர்தல் எப்போது என்பதை முடிவு செய்வது தேர்தல் ஆணையம் தான். ஏற்கனவே இருக்கும் முறையில் சிறிய மாற்றம் தான். ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்பது மட்டும் தான் மாற்றம். இதில் மாநில சுயாட்சி பாதிக்கப்படுவதாக நான் நினைக்கவில்லை.

English summary
AIADMK Interim General Secretary Edappadi Palaniswami has sent a letter in support of One Nation, One Election'' system which has caused a stir. Political critic Kalai given an interview to One India Tamil, has talked about the positive aspects and possibilities of the One Nation, One Election''.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X