”ஏலியனின் ஜெராக்ஸ்” தென் ஆப்பிரிக்காவை தனி ஒருவனாக அசால்ட் செய்த சூர்யகுமார் யாதவ்!
சென்னை: அனைத்து பேட்ஸ்மேன்களும் ரன்கள் சேர்க்க திணறிய ஆடுகளத்தில் சூர்யகுமார் யாதவ் மட்டும் அசால்ட்டாக சிக்சர்கள் விளாசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி யாரும் எதிர்பார்க்காதவாறு லோக் ஸ்கோரிங் ஆட்டமாக மாறியது. திருவனந்தபுரம் மைதானத்தின் பிட்ச்-சை காட்டியதுபோதே, ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியம் கொடுத்தது.
ஏனென்றால், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே டி20 கிரிக்கெட் ஆடப்பட்டு வந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பின் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அதிக புற்கள் கொண்டு பிட்ச் போடப்பட்டிருந்தது. இதனால் பவுலர்களுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறு சிறு குறைகளோடு, சிறப்பாகவே பந்துவீசினர்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா தொடர்.. ஒன்றாக களமிறங்கும் அர்ஷ்தீப் சிங் - பும்ரா.. என்ன திட்டம்!

சிறு குறைகள்
சிறுசிறு குறைகள் என்றால், தொடர்ச்சியாக சிறந்த பந்துகளை வீசாமல், இடைஇடையே சில மோசமான பந்துகளையே வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்கா பவுண்டரிகள் விளாச காரணமாக அமைந்தது. அதேபோல் 140 ரன்களுக்கான ஆடுகளம் என்பதால், தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சில பவுண்டரிகளுக்கே கைகளை தட்டி வரவேற்றனர். இதன்மூலம் இந்திய அணிக்கு 107 ரன்களை தென் ஆப்பிரிக்கா இலக்காக நிர்ணயித்தது.

சூர்யகுமார் யாதவ்
இருந்தும் ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, லோ ஸ்கோரிங் த்ரில்லராக மாறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சூர்யகுமார் யாதவ் களமிறங்கி வந்த வேகத்தில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை விளாசியது ஆட்டத்தின் முடிவை அறிவித்தது போல் தான் இருந்தது. கேஎல் ராகுல் நிதானமாக அரைசதம் அடித்ததற்கும், சூர்யகுமார் யாதவின் ஆட்டமே முக்கியக் காரணம் என்று அடித்து சொல்லலாம்.

ஹர்ஷா போக்ளே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்த்து, Frame those shots and watch it in a Loop என்று கவிதையாக வர்ணனை செய்திருப்பார். அதுபோல் நேற்றைய போட்டியிலும் சூர்யகுமாரின் ஷாட்கள் அமைந்தது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பந்துக்கும் பல வித ஷாட்களை வைத்திருக்க கூடிய பேட்ஸ்மேன்.

ஸ்கை பாணி ஆட்டம்
இந்திய அணிக்கு டாப் 3 வரிசையில் ஆடும் வீரர்கள் அதிரடியாக ஆடுவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்வர். அதனால் எப்போதும் சூர்யகுமார் யாதவ், களமிறங்கிய உடனே ரன் ரேட்டை உயர்த்த அதிரடியாக ஆட வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் சூர்யகுமார் யாதவின் களமும் அதுதான். களமிறங்கிய உடனே ஆயிரம் வாலா பட்டாசு போல் சரசரவென வெடிக்க தொடங்குவது தான் அவரது பாணி.

சூர்யகுமார் ஷாட்ஸ்
ஒரே இன்னிங்ஸில் அனைத்துவிதமான ஷாட்களையும் விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். டி வில்லியர்ஸ்-க்கு எப்படி ஆடுகளம், பந்துவீச்சு என எந்த கட்டுப்பாடுகளும் இருக்காதோ, அதுபோல் சூர்யகுமார் யாதவிற்கும் ஆடுகளமும், பந்துவீச்சு, சூழல் என்று எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. டாப் ஸ்பின் போட்டால் ஸ்விப் ஷாட், பாஸ்ட் பவுலிங்கில் ஸ்பான்ஜி பவுன்ஸ் போட்டால் இறங்கி வந்து ஆப் சைடில் லாப்ட் சிக்ஸ், ஷார்ட் பால் போட்டால் மிட் விக்கெட்டில் சிக்ஸ் என்று கிரிக்கெட் வீரர்கள் சிந்திக்காத ஷாட்களை ஆடி பிரம்மிப்பூட்டுவார்.

தனி ஒருவராக அசத்தல்
நேற்று எல்லா பேட்ஸ்மேன்களும் திணறிய ஒரு ஆடுகளத்தில் சூர்யகுமார் ஆடிய விதம், பந்தை கனெக்ட் செய்த தோரணை அவரின் தரத்தை அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம்போட்டு காட்டியது. தற்போதைய காலத்தில், இவருக்கு நிகரான சிறந்த டி20 பேட்ஸ்மேன் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
2016ம் ஆண்டு விராட் கோலிக்கு இருந்த வேகம், இப்போது சூர்யகுமார் யாதவிடம் இருப்பதாகவே விமர்சகர்கள் கருதுகின்றனர். அதனால் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், சூர்யகுமார் யாதவ் அதிக நேரம் பேட்டிங் ஆடுவதுதான் முக்கியமான திட்டமாக இருக்க வேண்டும்.