ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பாஜக கூட்டணி வைக்குமா? என்ன திட்டம்.. பொன்.ராதாகிருஷ்ணன் சொன்ன பதில்!
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
திருச்சி: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவருடன் பாஜக கூட்டணி வைக்குமா என்ற கேள்விக்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
Recommended Video
தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. நேற்று நடிகர் ரஜினிகாந்த் தான் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது.
கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். 2021 தேர்தலுக்கான அரசியல் கூட்டணி குறித்தும் இதில் ஆலோசனை செய்துள்ளனர்

எப்படி
இந்த நிலையில், திருச்சியில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அ.தி.மு.க.வில் நாங்கள் மாநிலங்களவை எம்.பி. சீட் கேட்கவில்லை. எங்களுக்கு போதுமான பலம் ராஜ்யசபாவில் இருக்கிறது. அதிமுகவுடன் எங்கள் கூட்டணி சரியாகவே உள்ளது. டெல்லி சிஏஏ போராட்டங்கள்தான் வன்முறைக்கு காரணம்.

சிஏஏ
தமிழகத்தில் நடைபெற்று வரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள். தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. இதை அரசு மொத்தமாக முடக்க வேண்டும். மதத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது. தமிழக அரசு போராட்டங்களை கையாள்வதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

காங்கிரஸ் எப்படி
திமுகவும், காங்கிரசும் டெல்லி வன்முறையில் விழுந்த பிணங்களை போல தமிழகத்தில் விழவில்லையே என்று ஆதங்கப்படுகின்றனர். தமிழகத்தில் மத அரசியல் செய்ய முடியாமல் திமுக கஷ்டப்படுகிறது. மதமாற்ற தடை சட்டம் வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்தியாவை பெறுவோம் என்று கூறிய ஜின்னாவின் ஆவி அறிவாலயத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

ரஜினி கூட்டணி
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறுகிறார்கள். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவர் கட்சி தொடங்கினால் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை செய்வோம். இப்போது எதுவும் முடிவு எடுக்க முடியாது. அவரது கொள்கை முடிவுகள் பொருத்து, அவர் எப்படி அரசியலை செய்ய போகிறார் என்பதை பொருத்தும்தான் பா.ஜ.க. முடிவெடுக்கும், இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக வெற்றி
2021-ல் தமிழகத்தில் பா.ஜ.க. சிறப்பான வெற்றி பெறும். நாங்கள் மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். பாஜக கூட்டணிதான் அடுத்த வருடம் ஆட்சி அமைக்கும் . ஏனென்றால் பா.ஜ.க.வை நாங்கள் வளர்க்கிறோமோ? இல்லையோ? தி.மு.க. எங்களை நன்றாக வளர்க்கிறது. திமுக எங்களின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கிறது.












Click it and Unblock the Notifications