என் தாயும் இப்படித்தான்! உலகில் வேறெங்கும் காணமுடியுமோ? பிரதமர் மோடி தாயார் பற்றி இளையராஜா உருக்கம்!
சென்னை : "பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத தாய்! இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கும் காண முடியுமோ?" என பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இளையராஜா எம்.பி தன் கைப்பட இரங்கல் கடிதம் எழுதி வெளியிட்டுள்ளார்.
ஹீராபென் மோடி மறைவுக்கு முன்னணி தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அஞ்சலி குறிப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக நியமிக்கப்பட்ட இசைஞானி இளையராஜா, பிரதமரின் தாயார் மறைவுக்கு உருக்கமான இரங்கல் குறிப்பொன்றை எழுதியுள்ளார்.

ஹீராபென் மோடி மறைவு
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இன்று குஜராத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில் குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயாரின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்று மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார்.

மோடி உருக்கம்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் குஜராத் மாநிலம் காந்திநகர் அருகே உள்ள ரேசான் கிராமத்திலேயே வசித்து வந்தார். பிரதமர் தனது குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார். தனது தாயாரின் மறைவு தொடர்பாக உருக்கமான பதிவையும் ட்விட்டரில் வெளியிட்டார் பிரதமர் மோடி. அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள்." என குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜா எம்.பி உருக்கம்
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மாநிலங்களவை நியமன எம்பியும், இசையமைப்பாளருமான இளையராஜா தன் கைப்பட உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வேறெங்கு காண முடியுமோ?
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கைப்பட எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், "நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் மறைவுற்ற செய்தியைக் கேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். பிரதமரின் தாயாக இருந்தாலும், தன் மகனிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத தாய். எனது தாயாரும் அவ்வாறே! என்னிடம் எதையும் கேட்டதில்லை. நானும் எதையும் கொடுத்ததில்லை. இப்படிப்பட்ட அன்னையர்களை உலகில் வேறெங்கு காண முடியுமோ? அவர் மறைந்தது துயரமே! நமது பிரதமர் அவர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன். அன்னை ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications