முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு குட் நியூஸ்.. இன்று, நாளை வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்
சென்னை: முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய சிரமம் இனிமேல்இல்லை. அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் மாதந்தோறும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று (நவம்பர் 4), நாளை (நவம்பர் 5) ஆகிய 2 நாட்களில் இல்லம் தேடி வழங்கப்பட உள்ளன.
வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் சிரமங்களை போக்கும் வகையில், அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யும் சிறப்புத் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு, இப்போது தவெக ஆட்சிளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இல்லம் தேடி வரும் ரேஷன்
பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று வரிசையில் நிற்பதைத் தவிர்க்கும் நோக்கில் அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட இந்த மக்கள் நலத் திட்டம், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள இலக்கு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டமாக இருந்து வருகிறது.
குறிப்பாக, உடல் நலம் சரியில்லாதவர்கள், நடமாட இயலாத முதியோர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதுடன், அரசின் சேவைகள் நேரடியாக மக்களின் வீடுகளுக்கே சென்று சேர்வதை உறுதி செய்யும் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஏழை எளிய முதியோர்கள் எந்தவிதமான அலைச்சலும் இல்லாமல், தங்களுக்குரிய உணவுப் பொருட்களை தங்களது வீடுகளிலேயே பெற்றுப் பயனடைந்து வருகின்றனர்.
இன்றும் நாளையும்
அந்த வகையில், நடப்பு மாதமான நவம்பர் 2026-க்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் இன்று நவம்பர் 4 மற்றும் நாளை நவம்பர் 5 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யப்பட உள்ளன. இதற்கான உத்தரவு கூட்டுறவுத் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் ஆவடி, அம்பத்தூர், அண்ணாநகர், சிதம்பரனார், கொளத்தூர், பெரம்பூர், ஆர்.கே.நகர், இராயபுரம், திருவொற்றியூர், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, தி.நகர், சோழிங்கநல்லூர், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் இந்த விநியோகம் நடைபெற உள்ளது.
இதற்காக கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்த திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைபாடு காரணமாக நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாதவர்களுக்கு இந்த ஏற்பாடு உதவியாக இருக்கும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இன்று மற்றும் நாளை தங்கள் இல்லங்களுக்கே வரும் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.. இந்த திட்டத்தை எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல், அனைத்துத் தகுதியான பயனாளிகளையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் முடக்கிவிட்டுள்ளது


Click it and Unblock the Notifications
