சென்னையில் இருந்து இன்று விமானத்தில் போக முடியாது.. டிக்கெட் விலையை பாருங்க.. தலைசுற்றுதே
சென்னை: பண்டிகை கால விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் கிடுகிடுவென அதிகரித்துள்ளன.
வரும் 19ம் தேதி (ஆயுத பூஜை), 20ம் தேதி தசரா கொண்டாடப்பட உள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையையொட்டி சென்னையில் இருக்கும் மக்கள் இன்றே தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி விட்டனர்.

இதனால் சென்னையில் இருந்து இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணமும் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்கத்தை விட பலமடங்கு வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த விமான கட்டணம் அவர்களின் தலையை சுற்ற வைக்கும் வகையில் இருக்கிறது.
அதன்படி சாதாரண நாட்களில் சென்னை - தூத்துக்குடி இடையேயான விமான கட்டணம் ரூ.7,20 ஆக இருக்கும் நிலையில் இன்று விமான கட்டணம் ரூ.17,363 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை - மதுரை இடையே சாதாரண நாட்களில் ரூ.5,459 ஆக இருக்கும் விமான கட்டணம் இன்று ரூ.8,537 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை - திருச்சி இடையே சாதாரண நாட்களில் ரூ.5,066 ஆக இருக்கும் விமான கட்டணம் இன்று ரூ.9,896 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் இன்று சென்னை - கோவை இடையேயான விமான கட்டணம் ரூ.16,601 ஆகவும், சென்னை திருவனந்தபுரம் விமான கட்டணம் ரூ.20,448 ஆகவும், சென்னை - கொச்சி கட்டணம் ரூ.18,255 ஆகவும், சென்னை - பெங்களூர் கட்டணம் ரூ.18,041 ஆகவும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
