நான் ஒன்றும் வீட்டில் சும்மா உட்காரவில்லை! நள்ளிரவு 1 மணி வரை ரவுண்ட்ஸ்! கடுகடுத்த அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: தாம் ஒன்றும் வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கவில்லை என்றும் பணியாளர்களையும், அதிகாரிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஆய்வுக்கு செல்வதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
ஊரகப் பகுதிகளில் ஒரு வாரத்தில் முடிக்கக்கூடிய பணிகளை நகர்ப்புறங்களில் முடிக்க பல்வேறு இடையூறு காரணமாக மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
சென்னையில் நேற்றிரவு 9.30 மணிக்கு இரவு நேர ஆய்வுக்கு புறப்பட்ட அமைச்சர் எ.வ.வேலு, நள்ளிரவு 1 மணிக்கு தான் வீடு திரும்பினார்.

மழைநீர் வடிகால்
சென்னையின் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஆய்வு நடத்தச் சென்ற அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் தீபாவளிக்குள் மழைநீர் வடிகால் பணிகளை முழுமையாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் பணியாளர்களையும், அதிகாரிகளையும் ஊக்கப்படுத்துவதற்காக தான் இரவு நேரத்திலும் தாம் ஆய்வு நடத்தி வருவதாக தெரிவித்தார்.

ஊரகப்பகுதி
ஊரகப்பகுதிகளில் ஒரு வாரத்தில் முடிக்கக்கூடிய பணிகளை சென்னை போன்ற நகர்ப்புறங்களில் முடிக்க மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாக கூறினார். இதற்கு காரணம் வாகனப் போக்குவரத்து உட்பட பல்வேறு இடையூறுகள் எனத் தெரிவித்தார். அதேபோல் ஊரகப்பகுதிகளை போல் நகர்ப்புறங்களில் பகலில் ஒப்பந்தப் பணிகளை செய்ய முடியாது என்றும் இதனால் இரவு நேரங்களில் தான் நகரங்களில் ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

9.30 டூ 1 மணி
தாம் வீட்டிலிருந்து 9.30 மணிக்கு புறப்பட்டதாகவும் மணி நள்ளிரவு 1 மணியை நெருங்கும் நிலையில் ஆய்வு நடத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஏதோ கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் நாங்கள் ஒன்றும் சும்மா வீட்டில் உட்கார்ந்திருக்கவில்லை என கடுகடுத்தார். மழைநீர் வடிகாலுக்கு பள்ளம் தோண்டும் போது குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள் பாதிக்கப்படுவதால் அதனை சரிசெய்ய கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.

முதல் முறை
அமைச்சர் ஒருவர் பாதி இரவு வரை அரசு ஒப்பந்தப் பணிகளை ஆய்வு செய்திருப்பது இதுவே முதல்முறையாகும். மழைக்காலம் தொடங்கிவிட்டதால் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, ஆகியோர் பரபரப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications