புரசைவாக்கம், போரூர் கடைகளில் ஓவர்.. திநகர் சூப்பர் சரவணா ஸ்டோர்களில் 5ஆவது நாளாக தொடரும் ரெய்டு
சென்னை: சென்னை தி நகரில் உள்ள சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட ஜவுளிக் கடைகள், தங்க நகை கடைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு சொந்தமான வீடுகள் என தொடர்ந்து 5- வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது.
சென்னை தி.நகர், புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன.
இந்த கடைகள் 7 மாடிகளுக்கு மேல் இருக்கும். முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்டு எஸ்கலேட்டர், லிப்ட் வசதிகளுடன் கேன்டீன் வசதியும் இருக்கிறது. இங்கு உள்ளே சென்றுவிட்டால் அம்மா, அப்பாவை தவிர அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம்.
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் 4ஆவது நாளாக தொடரும் ரெய்டு..சல்லடை போட்டு தேடும் அதிகாரிகள்

மக்கள் கூட்டம்
இந்த கடைகள் இருக்கும் ரங்கநாதன் தெருவுக்குள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். எதை போட்டாலும் எடுக்க முடியாத அளவுக்கு வெறும் தலைகளாகவே தெரியும். இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் ஐவுளிக் கடைகள் மற்றும் தங்க நகைக் கடைகள் மற்றும் உரிமையாளர்களின் வீடு, உள்ளிட்ட இடங்களில் கடந்த புதன்கிழமை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

குரோம்பேட்டை
புரசைவாக்கம், குரோம்பேட்டை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றோடு ரெய்டு நிறைவடைந்தது. இங்கு 4 நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திநகரில் உள்ள கடைகளில் இன்று 5ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

எந்த ஊழியர்களுக்கும் அனுமதி
கடந்த 5 நாட்களாக கடைக்குள் எந்த ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அது போல் உரிமையாளர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்படுகிறது. இந்த திநகர் கடைகளில் நடத்தப்படும் சோதனை இன்றுடன் முடிவடையுமா என தெரியவில்லை. வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த வருமான வரி சோதனை நடைபெறுவதாக தெரிகிறது.

அண்ணாச்சி கடை
2019 ஆம் ஆண்டு ஏற்கெனவே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி கடைகளில் வரி ஏய்ப்பு செய்ததாக ரெய்டு நடந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான தி நகர், பாடி உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ரூ 434 கோடி மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கைப்பற்றவை கணக்கில் வராத பணம் என்றும் சொல்லப்பட்டது.