சுதந்திர தினம் பேச்சு போட்டி தமிழ் 2026: பள்ளி மாணவர்கள் மேடையில் சூப்பரா பேச சில தலைப்புகள்..!
சென்னை: நாட்டின் 80வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. பள்ளிகளில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில், குழந்தைகள் மேடையில் மிகத் தெளிவாகவும், நம்பிக்கையுடனும் பேசுவதற்கு ஏற்ற வகையில் பேச்சுப் போட்டிக்கான உரைகளை இங்கே பார்க்கலாம்.
நாட்டுப்பற்றை வெளிக்காட்டும் வகையிலான இந்த உரைகளை தயார் செய்து, பள்ளி மாணவர்கள் பேசலாம். சிறு குழந்தைகள் முதல், பத்தாம் வகுப்பு மாணவர்கள் வரை பேசுவதற்கு ஏற்ற 4 வெவ்வேறு வகையான பேச்சுப் போட்டி உரைகள் இதோ..

கிண்டர் கார்டன், 1, 2 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு
தலைப்பு: சுதந்திர தினம்
இன்று நமது நாட்டின் சுதந்திர தினம்.
இந்த நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்கள் ஏராளம். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் தியாகங்களை இன்று நாம் நினைவுகூர்வோம்.
தலைவர்களை மதிப்போம்! நாட்டை நேசிப்போம்!
அனைவருக்கும் எனது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!
ஜெய் ஹிந்த்!
3 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்க்கான பேச்சுப்போட்டி உரை
தலைப்பு: தியாகத்தைப் போற்றுவோம்!
மதிப்பிற்குரிய தலைமையாசிரியர் அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் காலை வணக்கம்! இன்று நம் தாய்நாடு சுதந்திரம் அடைந்த திருநாள்!
ஆங்கிலேயரின் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த நம் பாரத தேசத்தை மீட்க, எண்ணற்ற தியாகிகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடினார்கள். மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடினார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீரத்துடன் போராடினார். வ.உ.சிதம்பரனார், திருப்பூர் குமரன், வேலு நாச்சியார் போன்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகளும் நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தார்கள்.
அவர்கள் தந்த இந்தச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதும், தாய்நாட்டை நேசிப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை. நாம் அனைவரும் நன்றாகப் படித்து, நாட்டின் பெருமையை உலகறியச் செய்வோம்!
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!
6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உரை
தலைப்பு: மாணவர்களின் கடமை
அவையில் உள்ள பெரியோர்களுக்கும், மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கும், என் அருமை நண்பர்களுக்கும் என் முதற்கண் வணக்கம்.
"ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று"
என்று மகாகவி பாரதியார் பாடிய பொன்னான நாளை நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நள்ளிரவில் பிறந்த இந்தச் சுதந்திரம், சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான வீரர்களின் உதிரத்தில் உதித்தது. அண்ணல் காந்தியடிகளின் சத்தியாகிரகம், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம், பகத் சிங்கின் உயிர்த்தியாகம் என அவர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் கிடைத்தது. வ.உ.சிதம்பரனாரின் தியாகமும், வேலு நாச்சியாரின் வீரமும், திருப்பூர் குமரனின் கொடி காத்த உணர்வும் நம் நரம்புகளில் ஓட வேண்டும்.
சுதந்திரம் என்பது நாம் பெற்ற உரிமை மட்டுமல்ல, அது நாம் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பும் கூட. மாணவர்களாகிய நாம், நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்கி நாட்டின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டும்.
நன்றி, வணக்கம்! ஜெய் ஹிந்த்!
9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி உரை
தலைப்பு: இளைஞர்களே நாட்டின் பலம்
அவையில் இருக்கும் சான்றோர் பெருமக்களுக்கும், ஆசிரியர்களுக்கும், வருங்கால இந்தியாவின் தூண்களான என் தோழர்களுக்கும் அன்பான வணக்கம்.
வியாபாரம் செய்ய வந்த கிழக்கிந்தியக் கம்பெனி, படிப்படியாக நமது மண்ணையும் மக்களையும் அடிமைப்படுத்தியபோது, அதை எதிர்த்து வீறுகொண்டு எழுந்த பூமி நம் பாரத பூமி. 1857 ஆம் ஆண்டு வெடித்த முதல் இந்திய சுதந்திரப் போர் தொடங்கி, 1947 வரை தொடர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் விளைவே இன்று நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம். பாரத மண்ணின் விடுதலையை அமுதமாக நமக்கு அளித்த தியாகச் செம்மல்களை நெஞ்சில் ஏந்தி நிற்கும் திருநாள் இது.
அகிம்சை எனும் ஆயுதத்தால் உலகையே வியக்க வைத்த காந்தியடிகள், 'எனக்கு இரத்தம் கொடுங்கள், உங்களுக்குச் சுதந்திரம் தருகிறேன்' என்று முழங்கிய நேதாஜி, தூக்குமேடையைப் புன்னகையோடு எதிர்கொண்ட பகத் சிங் போன்ற தலைவர்களுடன் சேர்ந்து, தமிழகத்தின் வீரமங்கை வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியார், திருப்பூர் குமரன் ஆகியோரின் பங்களிப்பும் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
சுதந்திரம் பெற்று 70-க்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், நம் தேசம் அறிவியல், விண்வெளி, தொழில்நுட்பம் என பல துறைகளில் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டுள்ளது. அன்று தியாகிகள் நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். இன்று நாம் நாட்டின் முன்னேற்றத்திற்காகப் போராட வேண்டிய சூழலில் இருக்கிறோம்.
வறுமை மற்றும் எழுத்தறிவின்மையை ஒழித்தல்
தொழில்நுட்ப மற்றும் அறிவியல் வளர்ச்சிக்கு உதவுதல்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களைப் பேணுதல்
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து இந்தியனாக ஒன்றுபடுதல்
இவையே இன்று நம் நாட்டின் முன்னேற்றத்திற்கான வழிகள். "இளைஞர்களே நாட்டின் பலம்" என்றார் விவேகானந்தர். இளைஞர்களின் கைகளில்தான் நாட்டின் எதிர்காலம் உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு மாணவர்களாகிய நாம் நம் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்துவோம் என இந்த நாளில் உறுதி ஏற்போம்.
"வாழ்க இந்திய தேசம்.. வெல்க இத்திருநாடு!"
நன்றி! வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!


Click it and Unblock the Notifications
