நாடு முழுவதும் தீவிரமடைந்த பருவமழை...மிதக்கும் வட மாநிலங்கள் - தமிழகத்தில் தூறல்தான்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மகாராஷ்டிரா, மும்பை, கோவா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஹிமாச்சலபிரதேசம்,ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழ் நாட்டில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதால் தென்மேற்கு பருவகாற்று காரணமாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வடக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது.
வட மாநிலங்களில் பல பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியதில் ஆறுகளில் பெருவெள்ளம் சாலைகளை மூழ்கடித்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதில் பல உயிர்கள் பறிபோயுள்ளன. இமாச்சல பிரதேசத்தில் மணாலியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு மழையால் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொல்கத்தா மழை வெள்ளம்
மேற்கு வங்க மாநிலத்தில் விடாமல் பெய்து வரும் கனமழையால் கொல்கத்தாவில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வாகனங்களை மூழ்கடித்துக்கொண்டு வெள்ளநீர் செல்வதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளநீரில் மூழ்கிய கார்கள்
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் சாலைகள் மினி கால்வாய்களாக மாறிவிட்டன, ஆறுகள் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் அனைத்து மூழ்கியுள்ளன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

தலைநகரில் பள்ளம்
நாட்டின் தலைநகர் டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியது. பருவமழை தாமதமாகத் தொடங்கினாலும் அதீத அளவில் பெய்து சாலைகள் ஆறுகளாக மாறியுள்ளன. ஆங்காங்கே மரண பள்ளங்கள் உருவாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது. யமுனை ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.

தமிழகத்தில் மழை
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இடி மின்னல் மழை
ஆகஸ்ட் 2ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் 3ஆம் தேதி மற்றும் 4ஆம் தேதி அந்த இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று வீசும்
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications