மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நிறுத்தப்படுகிறதா? தவெக அரசின் ரூ.2,500 எங்கே? இப்போது ஆயிரமும் வரலையா?
சென்னை: மாதம் ரூ.2,500 கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு இன்னும் அந்த பணம் வரவில்லை.. அப்படியிருக்கும்போது, தற்போது வந்து கொண்டிருக்கும் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகையையும் தவெக அரசு படிப்படியாக நிறுத்தி வருவதாக, புது தகவல் ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அப்படியானால், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் என்னதான் நடக்கிறது என்ற அதிர்ச்சி கேள்வி எழுந்துள்ளது...!!
கடந்த 2023 செப்டம்பர் 15-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது.

மகளிர் உரிமைத்தொகை 1000 ரூபாய்
ஆரம்பத்தில் சுமார் 1 கோடி பெண்கள் இந்த பணத்தை பெற்றனர். 2025 டிசம்பரில் மேலும் பல பெண்கள் சேர்க்கப்பட்டதால், பயனாளிகளின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்தது. ஆனாலும், தகுதியுள்ள ஏழைப் பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றும், தகுதி இல்லாத சிலர் இந்த பணத்தை பெற்றதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தவெக தலைவர் விஜய் வாக்குறுதி அளித்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 பணத்தைத் தொடர்ந்து வழங்க உத்தரவிட்டார்.
இதையடுதது, திட்டத்தின் பெயரை மாற்றுவது, பயனாளிகள் விவரங்களை சரிபார்ப்பது, வங்கிக் கணக்குகளில் உள்ள IFSC குறியீடு உள்ளிட்ட தவறுகளை சரிசெய்வது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததுமே ரூ.2,500 வழங்கப்படும் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
3 மாதமாக பணம் வரவில்லையா?
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக ஒரு பிரபல நாளிதழில் இன்று வெளியாகியுள்ள செய்தி பெண்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.. இரண்டாம் கட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட பல பெண்களுக்கு கடந்த 3 மாதங்களாக ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக அரசு, தற்போது வழங்கி வரும் ரூ.1,000 உரிமைத்தொகையையும் படிப்படியாக நிறுத்தி வருவதாக அந்த நாளிதழ் குற்றம் சாட்டியுள்ளது. அரசின் இந்தச் செயலால் பெண்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரூ.2500-ம் இல்லை.. ரூ.1000-மும் இல்லையா?
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், ஏற்கனவே அறிவித்த ரூ.2,500 வரவில்லை. இப்போது கிடைத்து வந்த ரூ.1,000-மும் நின்றுவிட்டதா என்ற கேள்வி பெண்களிடம் எழுந்துள்ளது. மாதந்தோறும் கிடைக்கும் இந்த பணத்தை நம்பி வீட்டு செலவுகளை சமாளிக்கும் பெண்களுக்கு இது கவலையை ஏற்படுத்தி வருகிறது.
தேர்தல் நேரத்தில் தவெக அரசுக்கு சிக்கலா?
அதேநேரத்தில், தவெக அரசு உண்மையிலேயே மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முடிவு செய்திருக்குமா என்பதும் கேள்வியாக உள்ளது. ஏனென்றால் விரைவில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவுள்ளன. இப்படிப்பட்ட நேரத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் பணத்தை நிறுத்தினால், அது அரசுக்கு தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தும்.
ரூ.2,500 தருவதாக சொல்லிவிட்டு, ஏற்கனவே கொடுத்து வந்த ரூ.1,000-யும் நிறுத்திவிட்டதாக பெண்கள் நினைத்தால், அவர்கள் மத்தியில் அரசுக்கு எதிரான அதிருப்தி ஏற்படலாம். இது வரக்கூடிய தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அரசு என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை, வங்கி கணக்கில் உள்ள தவறுகள் அல்லது தகுதி சரிபார்ப்பு காரணமாகத்தான் சில பெண்களுக்கு பணம் வரவில்லையென்றால், அதை தமிழக அரசு தெளிவாக சொல்ல வேண்டும்.
யாருக்கு பணம் நிறுத்தப்பட்டுள்ளது, ஏன் நிறுத்தப்பட்டுள்ளது, மீண்டும் எப்போது கிடைக்கும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், இந்த பணத்தை நம்பிதான் எத்தனையோ பெண்கள், தங்களுடைய அன்றாட செலவை திட்டமிட்டு வருகிறார்கள்.
அப்படியிருக்கும்போது, இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண்களுக்கு கடந்த 3 மாதங்களாக உரிமைத்தொகை வழங்கப்படாததற்கான காரணம் என்ன, இனி தொடர்ந்து தொகை வழங்கப்படுமா என்பது குறித்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...!!


Click it and Unblock the Notifications
