பாஜக குழுவில் RSS ஆதிக்கம் அதிகமா? ; தமிழிசை பெயர் ஏன் இல்லை? : ராம ஸ்ரீநிவாசன் சொன்ன காரணம்
சென்னை: பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ள குழுவில் ஏன் தமிழிசை செளந்தரராஜன் பெயர் இடம்பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை ராம ஸ்ரீநிவாசன் அளித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் பற்றி படிப்பதற்காக 3 மாதக் காலம் லண்டன் பயணம் சென்றுள்ளார். ஆகவே, அவருக்குப் பதிலாக கட்சி நிர்வாகம் சார்ந்து முடிவு எடுக்க ஹெச்.ராஜா தலைமையில் ஒரு குழுவை தேசிய தலைமை அறிவித்துள்ளது. அண்ணாமலை ஊரில் இல்லாத காலங்களில் இடைக்கால மாநிலத் தலைவராக தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்படலாம் எனச் சிலர் ஊகங்களை முன்வைத்தனர். அதற்கு மாறாக இப்போது குழுவை கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் தமிழிசை ஏன் இடம்பெறவில்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகின்றது.

அந்த வாதம் முதலில் சரியானதா? ஏன் தமிழிசை இந்தக் குழுவில் இடம்பெறவில்லை? ஆகிய கேள்விகளுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் பதிலளித்துள்ளார். அவர், “கட்சியின் தேசிய தலைமை எடுத்துள்ள முடிவு இது. அதற்காக வெளியாகி உள்ள அறிக்கையில் கூட தேசிய பொதுச்செயலாளர்தான் கையெழுத்துப் போட்டுள்ளார். அண்ணாமலை 3 மாதங்கள் லண்டனில் தங்கி இருக்கப்போகிறார். அதுவரை இந்தக் குழு செயல்படும். செயல்திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குழுதான் இது.
இதில் பெண் பிரதிநிதி இல்லை. பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை என்று எல்லாம் பார்க்கக் கூடாது. இது ஏதோ சமூகநீதி குழு கிடையாது. அப்படி இருந்தால் பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றி எல்லாம் கேள்வி எழுப்பலாம். சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் அவர் தொகுதி பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் ஈடுபட வேண்டி இருக்கும். ஒருவர் அவைக்குச் சென்று, தொகுதியையும் பார்த்துக் கொண்டு, கட்சிப் பணியையும் ஆற்றவேண்டும் என்று சொன்னால் அது எப்படி சாத்தியம்?
நாளை 1 ஆம் தேதி கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். பிரதமர் மோடி தன்னை முதல் உறுப்பினராக இணைத்துக்கொள்ள இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தழுவிய மிகப்பெரிய இயக்கமாக இது நடைபெற இருக்கிறது. இந்தக் குழு அந்தக் கட்சி பணிகளைக் கவனித்துக் கொள்ளும். அரசியல் பணிகளைச் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இதில் தமிழிசையைப் போடவில்லை என்ற வாதம் தவறானது. அவர் குழுவில் போடும் அளவுக்கான தலைவர் இல்லை. ஆளுநராக இருந்தவர். மாநிலத் தலைவராக இருந்தவர். அவரை எப்படிப் பொறுப்புக் குழுவில் போட முடியும்? ஹெச்.ராஜா கடந்த 50 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார். அவர் தலைமையில் குழு செயல்படும் எனக் கட்சி முடிவு செய்து அறிவித்துள்ளது. இதில் உள்ள பொறுப்பாளர்கள் மண்டல வாரியாக கட்சிப் பணியை மேற்பார்வை செய்வார்கள். அதற்குத்தான் இந்தக் குழு. இது ஏதோ கிரீடம் வைக்கும் பதவி அல்ல. கட்சி வேலை செய்வதற்கு ஒரு குழு” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இந்தக் குழுவில் பொறுப்பு வகிப்பவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவர்கள். கட்சி ரீதியாக உள்ளவர்கள் குழுவில் இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி அவர் தொடர்ந்து பேசுகையில், “இது ஊடகங்களின் கவலை. கட்சிக்குள் அப்படியான பார்வை இல்லை. பொன்.ராதாகிருஷ்ணன் குழுவில் இல்லை. அவர் பக்கா ஆர்.எஸ்.எஸ்காரர். அதேபோல் எம்.ஆர்.காந்தி ஆர்.எஸ்.எஸ்காரர். இவர்கள் கூடத்தான் குழுவில் இல்லை. கருப்பு முருகானந்தம் ஆர்.எஸ்.எஸ் மூலம் வந்தவர் இல்லை. நேரடியாகக் கட்சியிலிருந்து வந்தவர். எஸ்.ஆர்.சேகர் எமர்ஜென்சியில் கட்சிக்காக உழைத்தவர்.
எனவே இந்தக் குழுவின் வேலை கட்சி சார்ந்தது. அரசியல் சார்ந்தது அல்ல. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது, அரசியல் ரீதியாக அறிக்கை விடுவது வேலை அல்ல. கட்சியின் செயல்திட்டம் என்று உள்ளது. அதை மட்டுமே நாங்கள் செய்வோம். அதை மீறி ஹெச்.ராஜா போன்ற மூத்தவர்கள் அரசியல் சார்ந்து கருத்துகளை சொல்லலாம். அவர் எப்போதும் அதைச் செய்துவருகிறார். இந்தப் பொறுப்புக்கு வந்ததால் அவர் அதைச் செய்யப் போவதில்லை” என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications