‘அங்கே’ ஆரம்பிச்சது! பிளான் டிராப்.. முக்கிய புள்ளி சிக்னல்! கோவை செல்வராஜ் முடிவுக்கு பின்னணி என்ன?
சென்னை : ஓபிஎஸ் அணியின் கோவை செல்வராஜ், சில அதிருப்திகளின் காரணமாக அங்கிருந்து விலக இருப்பதாகவும், ஆளுங்கட்சியில் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவருடன் பேசி வருவதாகவும் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி நமது 'ஒன் இந்தியா' தளத்தில் அவரது பெயரைக் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டிருந்தோம். அது அடுத்த ஒரு மாதத்தில் நிகழ்ந்துள்ளது. விரைவில் அவர் திமுகவில் இணையவிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் அணியின் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்து வந்த கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகியுள்ளார். மேலும் அவரது பேச்சு, அவர் திமுகவில் சேரவிருப்பதை உறுதி செய்துள்ளது.
ஓபிஎஸ் உடனான அவரது அதிருப்தி ஓரிரு மாதங்களாகவே தொடர்ந்து வந்துள்ளது. ஓபிஎஸ் போட்ட பிளானை டிராப் செய்ததே கோவை செல்வராஜுக்கு ஓபிஎஸ் மீது அப்செட் ஏற்பட காரணம் எனக் கூறப்படுகிறது.

கோவை செல்வராஜ்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த வெகுசில முக்கியமான நபர்களில் ஒருவர் கோவை செல்வராஜ். இந்நிலையில், அவரும் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவைவிட பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால் முடியவில்லை. ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவரும் சுயநலத்திற்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களால் அதிமுகவிற்கு எந்த பயனும் இல்லை. அதனால் அதிமுகவிலிருந்து விலகுகிறேன் என கோவை செல்வராஜ் அறிவித்துள்ளார்.

அதிருப்திக்கான முதல் விதை
சில மாதங்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோவையில் பிரமாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டது. கோவை மாநகர் மாவட்ட செயலாளராக கோவை செல்வராஜ் நியமிக்கப்பட்டதுமே அவரிடம் அதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரும் பிரஸ் மீட் எல்லாம் கொடுத்து, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடப்பதாகத் தெரிவித்தார். ஆனால், கடைசி வரை அந்தப் பொதுக்கூட்டம் நடக்கவே இல்லை.

சிக்கல்களை உணர்ந்தார்
கோவை பகுதியில் ஓபிஎஸ் அணிக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததன் காரணமாக, குறைவான தொண்டர்களோடு கூட்டம் நடத்தினால் தனக்கு சிக்கலாகும் என ஓபிஎஸ் கருதினார். சசிகலாவும் ஓபிஎஸ்ஸோடு பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு சில காய்நகர்த்தல்களைச் செய்து வந்தபோது ஓபிஎஸ்ஸுக்கு எதிராக வந்த நீதிமன்ற தீர்ப்பால் சசிகலா பின்வாங்கியதன் காரணமாகவும், கோவை பொதுக்கூட்ட பிளான் அதோடு கைவிடப்பட்டது. அப்போதே கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியின் சிக்கல்களை ஒருவாறு உணர்ந்துகொண்டார்.

எதிர்காலம் என்னாகும்?
அப்போதே லேசாக பொறி தட்டியுள்ளது. ஓபிஎஸ் அணியில் இருப்பது தனது அரசியல் எதிர்காலத்திற்கு பெரிய பலன் அளிக்காது என கோவை செல்வராஜ் கருதியுள்ளார். கோவை செல்வராஜ் நினைக்கும் விஷயம், கொங்கு மண்டல திமுக முக்கியப் புள்ளியின் காதுக்குச் செல்ல, அங்கிருந்து சில சமிக்ஞைகளும் வந்துள்ளன. கொங்கு மண்டலத்தில், திமுகவின் பலத்தைப் பெருக்குவதற்காக, அதிமுகவினரை கட்சிக்குள் கொண்டு வருவதில் திமுக தலைமை விருப்பமாக இருப்பதை அறிந்து கோவை செல்வராஜும் திமுகவுக்கு செல்லலாமா என அப்போதே யோசிக்கத் தொடங்கியுள்ளார்.

ஆறுமுகசாமி அறிக்கை - அப்போதே சொன்னார்
இதையடுத்து, ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது. அதில் சசிகலா உள்ளிட்டோர் நேரடியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வுகளைக் கிளப்பியது. ஆனாலும், ஓபிஎஸ் தரப்பு சசிகலாவோடு சேரும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்ததை கோவை செல்வராஜ் ரசிக்கவில்லை. இதை அப்போதே அவர் வெளிப்படுத்தியும் இருந்தார்.

அமைச்சர்கள் தான் பொறுப்பு
ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், ஜெயலலிதா மரணத்திற்கு, எடப்பாடி பழனிசாமியும், அப்போது அமைச்சர்களாக இருந்தவர்களும் தான் பொறுப்பு எனக் கூறியிருந்தார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி பெயரே குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால் ஓபிஎஸ் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்தன. அப்படியான சூழலில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை முன்வைத்து கோவை செல்வராஜ் பேசியது ஓபிஎஸ் அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது.

முற்றிய மோதல்
கோவை செல்வராஜ் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றி பேச வேண்டாம் என ஓபிஎஸ் அவருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், மோதல் வலுப்பெற்றது. இதன் காரணமாகவே, தற்போது ஜெயலலிதா இறந்ததற்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்பட அப்போது பொறுப்பில் இருந்த அனைவருமே குற்றவாளிகள் எனக் கூறி ஓபிஎஸ் அணியில் இருந்தும் அதிமுகவில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார் கோவை செல்வராஜ்.

திமுகவுக்கு
நாம் அக்டோபர் இறுதியில் வெளியிட்ட செய்தியிலேயே, கோவை செல்வராஜ், திமுகவுக்கு தாவ அடிபோட்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தோம். திமுக தலைமைக்கு நம்பிக்கையான முக்கியமான பிரமுகரிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், திமுக தலைமையிடமிருந்து எப்போது கண்ணசைவு கிடைத்தாலும் உடனே அவர் ஐக்கியமாகக் கூடும் எனக் குறிப்பிட்டிருந்தோம். அந்தவகையில், தற்பொது கோவைக்கு வலு சேர்ப்பதற்கான நேரம் இதுதான் எனக் கணக்கிட்டே திமுக தலைமை ஓகே சொல்லியுள்ளது, அதன்படியே கோவை செல்வராஜ் அதிமுகவுக்கு கல்தா கொடுத்துவிட்டார் என்கிறார்கள்.

கண்ணைக் காட்ட.. டாட்டா காட்டிய செல்வராஜ்
கோவை பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அமைத்து வருகிறார். திமுகவினரின் வியூகங்களை அறிந்தே எஸ்பி வேலுமணியும் வேகத்தைக் கூட்டி வருகிறார், எடப்பாடியை அழைத்து பெரிய அளவில் போராட்டத்தையும் நடத்தி இருக்கிறார். இந்நிலையில் கோவை செல்வராஜை நம் பக்கம் கொண்டு வந்தால், கோவை அதிமுகவை உடைக்கலாம் என கணக்குப் போட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. அதன்படியே, கோவை செல்வராஜுக்கு கண்ணைக் காட்ட, அவரும் அதிமுகவுக்கு டாட்டா காட்டியிருக்கிறார்.

திராவிட பாரம்பரியம்
இந்த விலகல் அறிவிப்பு பற்றி பேசியுள்ள கோவை செல்வராஜ், இவர்களிடமிருந்தும், அதிமுகவில் இருந்தும் விலகுகிறேன். ஆனால், நான் திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன். திராவிட பாரம்பரியம் எனது உடலில் ஓடுகிற ரத்தம். விரைவில் நல்ல முடிவு எடுப்பேன். ஒரு நாளும் அரசியலைவிட்டு விலகமாட்டேன். துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்பது உறுதி. அதிமுகவில் இருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

பலப்படுத்தும் திட்டம்
ஏற்கனவே தேசியக் கட்சியான காங்கிரஸில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த கோவை செல்வராஜ், தற்போது திராவிட பாரம்பரியத்தை விட்டு விலக மாட்டேன் எனக் கூறியிருப்பதன் மூலம், நிச்சயமாக அவர் திமுகவுக்குச் செல்வது உறுதியாகியுள்ளது. கோவை செல்வராஜை வைத்து கோவையில் திமுகவை இன்னும் பலப்படுத்தும் திட்டங்களை திமுக மேற்கொள்ள இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications