ஜல்லிக்கட்டு: 300 மாடுபிடி வீரர்கள்,150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி - என்னென்ன கட்டுப்பாடுகள்
ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக புகழ் பெற்றவை. வெளிநாட்டுப் பயணிகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் காண வருவார்கள். மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரை போல அவனியாபுரம், பாலமேடு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் கடந்த 1 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டன.
காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளை வளர்ப்போர் அளித்து வருகின்றனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு திடலில் காளைகள் நின்று விளையாடும். இந்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்களும் பயிற்சியை தொடங்கி விட்டனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
பொங்கல் திருநாளான ஜனவரி 14ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். இதற்காக விழாக்குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 15ஆம் தேதி பாலமேடு மஞ்சமலை ஆற்று திடல் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாடிவாசல் அமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் பணிகளும் நடைபெற்று வருகிறது. 16ஆம் தேதியன்று உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோட்டை முனியாண்டி திடலில் நடைபெறும். விழாவிற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டு அதிகாரப்பூர்வமாக பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கொரோனா வழிகாட்டு நெறிமுறை
கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வடமாடு, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டுப்போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் 150 பார்வையாளர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காளைகளுடன் காளையின் உரிமையாளர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் பங்கேற்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்
எருது விடும் நிகழ்ச்சியில் 150 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. போட்டியில் பங்கேற்பவர்களும், பார்வையாளர்களும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். போட்டி நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

கட்டுப்பாடுகள் அவசியம்
வெளிநாட்டுப்பயணிகளும் வெளியூரில் வசிக்கும் ஜல்லிக்கட்டு ரசிகர்களும் ஆன்லைன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் மேல் பரவி வருகிறது. திறந்த வெளியில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடத்தப்படுவதால் இந்த கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications