ஜனநாயகன் படம் இணையத்தில் கசியவிட்டது யார்? 6 பேரை தூக்கிய சைபர் கிரைம் போலீஸ்! தீவிர விசாரணை
சென்னை: ஜனநாயகன் படம் லீக் விவகாரத்தில் 6 பேரை கைது செய்தது தமிழக சைபர் கிரைம் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட இணையதளங்களையும் போலீசார் முடக்கி உள்ளனர். விஜய்யின் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதான 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடித்த 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தை தணிக்கை செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் தற்போது வரை வெளியாகவில்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு மே மாதம் 2 ஆம் வாரத்தில் ஜனநாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் கண்டனம்
இந்த நிலையில் ஜனநாயகன் படம் சமீபத்தில் இணையதளத்தில் வெளியானது. முதலில் சில நிமிட காட்சிகளும் பின்னரும் 3 மணி நேர முழு படமும் ஹெச்.டி தரத்தில் இணையதளத்தில் வெளியானது. இதனால் படத்தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். ஜனநாயகன் படம் இணையதளத்தில் வெளியானதற்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
மேலும் ஜனநாயகன் படக் காட்சிகளை பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழுவும் தெரிவித்து இருந்தது. மேலும், ஜனநாயகன் படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க கோரி சைபர் குற்றப்பிரிவு போலீசில் படக்குழுவினர் புகார் அளித்து இருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
6 பேரை கைது செய்த போலீஸ்
இந்த நிலையில் தான், ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக வெளியிட்ட இணையதளங்களை முடக்கி தமிழக சைபர் குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் படத்தை பதிவிட்டுள்ள இணையதளங்கள், டெலிகிராம் பக்கங்கள் ஆகியவையும் முடக்கப்பட்டன. படத்தை பகிர்ந்த சமூக வலைதள பக்கங்களும் முடக்கப்பட்டன. தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக ஐபி முகவரியை வைத்து 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைதான 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
படம் வெளியானது எப்படி?
முன்னதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் ரிலீல் ஆனதில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்தார். குறிப்பாக பாஜகவின் எல் முருகன் என கூறியிருந்தார். அதற்கு பாஜகவினரும் பதிலடி கொடுத்து வந்தனர். அண்ணாமலை கூறுகையில், விஜய்யின் படத்தை நானும் தியேட்டரில் தான் சென்று பார்ப்பேன்.. யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். எல் முருகன் பெயரை சொல்வது நியாயமற்றது. யார் வெளியிட்டார்களே அவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தணிக்கை வாரியம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கையில், "திரைப்பட சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்படும் அனைத்து படங்களுக்கும் பாதுகாப்பான KDM (Key Delivery Message) முறையை தணிக்கை வாரியம் பின்பற்றி வருகிறது. சமர்பிக்கப்படும் படங்களுக்கு தனிப்பட்ட பாஸ்வேர்டு பாதுகாப்புடன் இருக்கும். இந்த கேடிஎம் பாஸ்வேர்டு முழுமையாக தயாரிப்பாளர் / இயக்குநரிடமே இருக்கும். ஜனநாயகன் படத்தின் டிஜிட்டல் சினிமா பேக்கேஜ் மார்ச் 17 ஆம் தேதி உரிய ஒப்புதலுக்காக விண்ணப்பதாரரால் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அவர்களிடமே உள்ளது" என்று கூறி இருந்தது.












Click it and Unblock the Notifications