ஜெயலலிதா வரி பாக்கியை அரசு செலுத்துவதா? ஆம் ஆத்மி எதிர்ப்பு - ஹைகோர்ட்டில் வசீகரன் வழக்கு
சென்னை: வேதா நிலையத்தை அரசுடமையாக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரி பாக்கியான 36.9 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியதை எதிர்த்து ஆம் அத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனுவை தீபா, தீபக் தாக்கல் செய்ய வழக்குடன் இணைந்து விசாரணை நடத்தக்கோரி நீதிபதியிடம் மனுதாரர் முறையிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து, வேதா நிலையம் அரசுடமையாக்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இதற்காக ஜெயலலிதாவின் வருமான மற்றும் சொத்து வரி நிலுவை தொகை உட்பட 69 கோடி ரூபாயை வைப்பு தொகையாக சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது..
இந்த தொகையில் இருந்து, ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி 36.9 கோடி ரூபாயை எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதிக்க கோரி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஏற்கனவே ஜெயலலிதாவிற்காக 50.80 கோடி ரூபாய் செலவில் அரசு நினைவிடம் கட்டி வருவதாகவும், கொரோனா காலகட்டத்தில் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு மக்கள் வரி பணத்தை ஜெயலலிதாவின் வரி பாக்கிக்காக செலவிடுவது தவறு என தெரிவித்துள்ளார்.
லெப்ட் சிக்னல் போட்டு ரைட்டில் போகுதா.. திமுகவின் "சீக்ரெட்" திட்டம்.. கலக்கத்தில் "எதிர்" கட்சிகள்
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேதா நிலைய இல்லத்தை அரசுடைமையாக்கப்பட்டதை எதிர்த்து தீபா மற்றும் தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கோடு இந்த மனுவையும் சேர்த்து விசாரிக்க கோரி, அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியிடம் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தியதோடு விசாரணையை தள்ளி வைத்தார்.