“அந்த 60 ஆயிரம் கோடி ஏன் இருக்கிறது?”... ஜெயரஞ்சன் எழுப்பிய கேள்வி
சென்னை: தேசிய பேரிடரில் 60 ஆயிரம் கோடி நிதி ஏன் சும்மா இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மாநிலத் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன்.
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளச் சேதத்திற்கு உரிய நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை முன்கூட்டியே அளித்துவிட்டோம் என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
வெள்ளச் சேதத்தால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், அதை வைத்து அரசியல் சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்திற்குப் பலியான 15 பேர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கான காசோலையை வழங்கிய பின் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 'முதலில் பேரிடரே இல்லை என்றார் நிதியமைச்சர். இப்போது வெள்ளச் சேதத்தைப் பார்வையிட வருகிறார்' என்ற ஆதங்கத்தை முன்வைத்துள்ளார்.
900 கோடியை ஒன்றிய அரசு வங்கி விட்ட பிறகு நிதி அளிக்கவில்லை என மாநில அரசு சொல்வது உண்மையா? அதில் உள்ள குழப்பங்கள் என்ன என்பது பற்றித் திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் விளக்கம் அளித்துள்ளார்.

"பொதுவாக இந்த மாதிரியான பேரிடர் நிதியை வழங்குவதில் இரண்டு நடைமுறைகள் உள்ளன. ஒன்று, கேட்டுப் பெறுவது. இரண்டு கேட்காமலே பெறுவது. இதுவரை நாட்டில் 15 நிதிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வருகின்ற வருவாயை மாநில அரசும் ஒன்றிய அரசும் எப்படிப் பிரித்துக் கொள்வது என்பது தொடர்பாக முடிவு எடுப்பதற்காகத்தான் இந்த நிதிக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.
இதற்கு முன்னால் 12வது நிதிக்குழுவரை நடைமுறை எப்படி இருந்தது என்றால், பேரிடர் நிதியை ஒதுக்குவது நிரந்தரமான வரைமுறை என்று எதுவும் இருந்ததில்லை. ஆகவே, அப்போது நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு முறையான ஒரு வரைமுறையை வகுக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி பேரிடர் நிதியை இருவகையாகப் பிரித்தார்கள். ஒன்று மாநில பேரிடர் நிதி என்றும் தேசிய பேரிடர் நிதி என்றும் பிரித்தார்கள்.
ஒரு மாநிலத்திற்கு பொதுவாக என்ன மாதிரியான பேரிடர்கள் வரும் என்பதை முன்பே உள்ள தரவுகளின் அடிப்படையில் திட்டமிட்டு நிதியை வழங்க ஒரு குழு இருக்கிறது.

அவர்கள் திட்டமிட்டுத்தான் அதற்கான நிதியை முன்கூட்டியே ஒதுக்கி வைக்கிறார்கள். இது 5 வருடங்களுக்கான மொத்த ஒரு நிதியைத் தோராயமாக ஒதுக்கிவிடும். அந்தக் குழு புதியதாக எந்த நிதியையும் தருவதில்லை.
அப்படியான மாநில பேரிடருக்கு 75% நிதியை ஒன்றிய அரசு வழங்கும். மீதமுள்ள 25% நிதியை மாநில அரசு ஏற்கும். இதுதான் நடைமுறை.
ஆனால், அப்படி ஒதுக்கப்படும் நிதியைத் தாண்டி சேதம் ஏற்படுகிறதோ அப்போது தேசிய பேரிடர் நிதியிலிருந்து கூடுதல் நிதியைக் கேட்பது மாநில அரசின் கடமை. அதைத்தான் தமிழ்நாடு அரசும் கேட்டது.

அப்படி ஒரு மாநில அரசு கூடுதல் நிதியைக் கேட்கும்போது ஒன்றிய அரசு அதனை ஆய்வு செய்ய சில அதிகாரிகளைக் கொண்ட குழுவை அனுப்பு வார்கள். அவர்கள் ஆய்வு செய்து அதன் உண்மைத்தன்மையை ஒன்றிய அரசுக்கு அறிக்கையாக அளிப்பார்கள். அப்படித்தான் இப்போது ஒன்றிய அரசின் குழு தமிழ்நாட்டிற்கு வந்தது.
அந்தக் குழு அவர்களுக்கு மேல் உள்ள ஒரு குழுவுக்கு அறிக்கை அளிக்கும். அவர்கள்தான் அரசுக்கு ஒரு நிதித் தொகையை அளிக்கலாம் என்று பரிந்துரைப்பார்கள். வந்த அதிகாரிகள் குழு ஆய்வு செய்துவிட்டு, மாநில அரசு மிகச் சிறப்பாக வெள்ள நிவாரணத்தைக் கையாண்டுள்ளது என்று கூறிவிட்டுச் சென்றுள்ளது.
இதுவரை மாநில அரசுக்கு 5 ஆண்டு காலத்திற்கு வழங்க வேண்டிய நிதி 1200 கோடி. அதில் மத்திய அரசு தரவேண்டியது 900 கோடி. மீதி தொகையைத் தமிழ்நாடு அரசு ஏற்கும்.

அந்த 2 தவணையாகத் தரவேண்டிய நிதியைத்தான் ஒன்றிய அரசு இதுவரை அளித்துள்ளது. நாங்கள் முன்கூட்டியே அளித்து விட்டோம் என்று நிதியமைச்சர் நிர்மலா சொன்னது இதைத்தான். அது வழக்கமாக அளிக்கப்படும் நிதி. அது இந்தப் பேரிடருக்குப் பற்றாது என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது.
வழக்கமாக நடக்கும் இயற்கை பேரிடர்களுக்கு இந்தத் தொகை போதுமானது. ஆனால், சுனாமி மற்றும் பெரிய பேரிடர் என வரும்போது அந்தத் தொகை போதுமானதாக இருக்காது. அதனடிப்படையில் தான் தேசிய பேரிடர் நிதியிலிருந்து பணம் கேட்டது தமிழ்நாடு அரசு.
ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் அமர்ந்து கொண்டு ஒன்று தெரியாமல் ஏதேதோ குறைகள் சொல்கிறார்.
ஒரு பேரிடர் நடக்கும்போதுதான் தேசிய நிதியிலிருந்து பணத்தை எடுத்து வழங்குகிறது. ஆகவே ஒன்றிய அரசு ஏதோ எசமான் கிடையாது. அவர்கள் சந்திரமண்டலத்திலிருந்து பணத்தைக் கொண்டுவந்து நமக்குக் கொடுக்கவில்லை.

இப்படி இமாச்சல் பிரதேசத்தில் நடந்த பேரிடருக்குத் தேசிய நிதியை அளித்துள்ளார்கள். குஜராத்திற்கு அளித்திருக்கிறார்கள். ஒருமுறை சிக்கிம் மாநிலத்திற்கும் அளித்திருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் இருக்கும்போது வெள்ளம் வந்தது. அப்போது 1000 கோடி ரூபாய் கொடுத்தார்கள்.
அதுமாதிரிதான் 2 ஆயிரம் கோடியைத் தமிழ்நாடு அரசு கோரியது. மக்கள் இங்கே செத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே, முதலில் ஒரு இடைக்கால நிதியை அளியுங்கள் என்கிறோம். ஆய்வு நடந்த பிறகுதான் தருவோம் என்றால் பொறுப்புள்ள பேச்சா அது?
தேசிய பேரிடர் நிதி என்பதற்குத் தனியே வரி போட்டு வசூல் செய்கிறது ஒன்றிய அரசு. புகையிலை, கிகரெட், மது போன்ற பொருட்கள் மூலம் அந்த வரியானது போய்ச் சேருகிறது. அதில் ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு 60 கோடி அளவுக்கு நிதி இருக்கிறது. அந்த நிதியை ஏன் வைத்திருக்கிறார்கள். இதைப் போன்ற பேரிடருக்கு உதவத்தானே வைத்திருக்கிறார்கள்?

ஒருவேளை இந்த வெள்ளமே ஏற்பட்டு இருக்கவில்லை என்றாலும் கூட நமக்கு வர வேண்டிய 900 கோடி வந்திருக்கும். அதை வெள்ளம் வரவில்லை என்பதற்காக நிறுத்த முடியாது. அதைப் போல மாநில நிதியானது எல்லா மாநிலத்திற்கும் வழங்கப்படுகிறது.
அது போதாது என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நாம் சொல்கிறோம். ஏனென்றால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மூழ்கி இருக்கின்றன. தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாநிலங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி எப்படி போதுமானதாக இருக்கும்" என்கிறார்












Click it and Unblock the Notifications