கேம் ஸ்டார்ட்.. கமல்ஹாசன் குறி வைக்கும் "அந்த 2" வாக்கு வங்கி.. மக்கள் நீதி மய்யம் செம உற்சாகம்
சென்னை: தமிழகத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இரண்டு முக்கிய வாக்கு வங்கிகள் பெருகி உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அதில் ஒன்று.. தலித் சமுதாய வாக்குகள்.. இன்னொன்று முஸ்லிம் சமுதாய வாக்குகள்.
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி பார்த்தால் தமிழகத்தில் 5.85 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளனர்.

இஸ்லாமிய ஆதரவு
இஸ்லாமியர்களுக்காக தமிழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இருக்கின்றன. இருப்பினும் எல்லா இடங்களிலும் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான கட்சியாக உருவெடுக்க முடியவில்லை. திமுக அல்லது அதிமுக ஆகிய கட்சிகளுடன் இணைந்து அவை பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கேம் சேஞ்சர்கள்
தமிழகத்தில் 2000 முதல் அதிகபட்சம் 20 ஆயிரம் வரை முஸ்லிம் வாக்குகள் இருக்கக்கூடிய தொகுதிகள் நிறைய உள்ளன. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 100 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கேம் சேஞ்சர் என்று அழைக்கப்படக் கூடிய.. அதாவது தேர்தல் முடிவுகளை மாற்ற உதவும் வகையிலான குவியலாக அமைந்து உள்ளன என்கிறது புள்ளி விவரங்கள்.

முதல் தீவிரவாதி
கமல்ஹாசனை பொருத்தளவில் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்காக பேசக் கூடியவராக இருக்கிறார். கடந்த லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்கள் கணிசமாக இருக்கக்கூடிய அரவக்குறிச்சி தொகுதியில் அவர் நிகழ்த்திய உரை இந்திய அளவில் விவாத பொருளாக மாறிவிட்டது. இந்தியாவின் முதல் தீவிரவாதி என்று நாதுராம் கோட்சேவை குறிப்பிட்டு அவர் ஒரு இந்து என்றார் கமல்ஹாசன். இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால் இஸ்லாமியர்களை தொடர்ந்து தீவிரவாதிகள் என்றுகூறி விமர்சனத்துக்கு உட்படுத்துவதற்கு எதிராக இப்படி ஒரு விவாதத்தை, கமல்ஹாசன் முன்வைத்ததாக அந்த கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

கமல் மீது மரியாதை
ஜமாத் இஸ்லாமி என்ற அமைப்பைச் சேர்ந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வணிகர் அப்துல் பாசித் கான், செய்தி ஐஏஎன்எஸ் ஏஜென்சியிடம் பேசுகையில், கமல்ஹாசன் மீது எங்களுக்கு அன்பும் மரியாதையும் கண்டிப்பாக இருக்கிறது. இந்தியாவில் தீவிரவாத விதைகள் தூவப்பட்டது கோட்சே என்பவரால்தானே தவிர வேறு யாராலும் கிடையாது. மகாத்மா காந்தியை கொலை செய்தது கோட்சே தான் என்பதை வெளிப்படையாக கமல்ஹாசன் பேசியிருந்தார் என்று கூறுகிறார்.

செல்வாக்கு
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் உள்ளிட்ட விவகாரங்களில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக கமல்ஹாசன் நிலைப்பாடு எடுத்து இருந்தார் என்பது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு செல்வாக்கு பெருகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தலித் வாக்குகள்
இது ஒரு பக்கம் என்றால், தமிழகத்தில் கணிசமாக இருக்கும், தலித் வாக்கு வங்கியும், கமல்ஹாசன் கட்சிக்கு ஆதரவாக திரும்பியுள்ளது. தமிழகத்தில் சுமார் 20% தலித் வாக்குகள் இருக்கின்றன. திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலித் மக்களில் கணிசமானோர் ஆதரவு தெரிவிக்கின்றனர். திமுக, அதிமுக, காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு கூட தலித் வாக்குகள் சிதறுகின்றன.

மூன்றாவது சக்தி
கமல்ஹாசனை பொருத்தளவில் தலித் தலைவர்களை உயர்த்திப் பிடித்து சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்பு பலமுறை கருத்து கூறியுள்ளார். ஜாதி ஆணவங்களுக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுப்பது இல்லை. எனவே அந்த மக்களிடையேயும் கமலஹாசன் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. மூன்றாவது சக்தியாக உருமாறும் வாய்ப்பு கமல்ஹாசனுக்கு இருப்பதாக முஸ்லிம்கள் மற்றும் தலித் சமூகப் பிரிவினர் நம்புகிறார்கள்.

குரல் எழுப்பும் கமல்
அரக்கோணம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி வைத்தியநாதன் செய்தி ஏஜென்சியிடம் கூறுகையில், தலித் பிரச்சினைகளுக்காக குரல் எழுதக்கூடியவர் கமல்ஹாசன். எனவே, அவருக்கு வாக்களித்தால், தலித் பிரச்சினைகள் பெரிய அளவில் ஓங்கி ஒலிக்கும் நிலைமை உருவாகும். இதை உணர்ந்து தலித் மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று உறுதிபட தெரிவிக்கிறார். மக்கள் நீதி மய்யம் இந்த சட்டசபை தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளுக்கு பிற தொகுதிகளை பகிர்ந்து அளித்துள்ளார் கமல்ஹாசன்.