கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்..பொங்கலுக்குள் திறக்கப்படுமா? அமைச்சர் சேகர்பாபு சொன்னது இதுதான்
சென்னை: பொங்கலுக்குள் புதிய பேருந்து நிலையத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். பேருந்து நிலையத்தில் கூடுதலாக புதிய பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும் காலதாமதம் ஏற்பட காரணம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
தமிழகத்தில் இருந்தும் மற்ற மாநிலத்தில் இருந்தும் சென்னைக்கு பயணிக்கும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. இதில் பேருந்து மூலம் பயணம் செய்பவர்கள் சென்னைக்கு வருகை தந்தால் கோயம்பேட்டில் உள்ள பேருந்து முனையத்தை மட்டுமே நாடி இருக்கவேண்டிய நிலை இருந்தது. இதனால் சென்னையின் புறநகரில் வசித்து வரும் பயணிகளுக்கு பேருந்து முனையத்திற்கு பயணம் செய்வதே சவாலாக இருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சென்னையில் அடுத்த பெரிய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் மற்றும் புதிய புறநகர் ரயில் நிலையம் ஆகியவற்றை கட்டவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் ஆய்வு செய்தனர். இந்நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல பேருந்து நிலையங்கள் இருந்தால்தால் நெரிசல் குறையும்.
சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.74 கோடி மதிப்பிட்டில் பணிகள் நடந்து வருகிறது. பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவாக கிளாம்பாக்க பேருந்து நிலைய பணிகளை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு இன்னும் 2 பேருந்து நிலையங்கள் தேவைப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, பேருந்து நிலையத்தில் கூடுதலாக புதிய பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாலும் காலதாமதம் ஏற்பட காரணம் என தெரிவித்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே மெட்ரோ ரயில் விரிவுபடுத்த தேவையான ஏற்பாடுகளை அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் வண்டலூர் ரயில் நிலையம் அடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே ரயில் நிலையமும் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில் நிலையமும் அமைக்க அதற்கான துணை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அமைச்சர் சேகர்பாபு.
கிளாம்பாக்கத்தில் அமைக்கவிருக்கும் ரயில் நிலையத்திற்கும், பேருந்து முனையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைப்பதற்கான ஸ்கைவாக் திட்டத்திற்கும் ஆய்வு மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்பட்டபோது, சென்னையின் ஒரே பேருந்து முனையமாக திகழ்ந்தது. இப்போது, மாதவரம், கிளாம்பாக்கம் என்று சென்னையின் மற்ற இடங்களிலும் பேருந்து முனையங்கள் அமைக்கப்படும்போது பண்டிகை காலங்களில் கூட நெரிசல் குறைய வாய்ப்புள்ளது. 88 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்துகள் உட்பட 2,350 பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரூ.315 கோடியை சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் கட்டுமானப்பணிக்காக வழங்குகிறது.
இந்த நிலையில் சிஎம்டிஏ அமைச்சராக பொறுப்பேற்றுள்ள சேகர்பாபு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை பொங்கலுக்குள் முடிக்க முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்தின் நெரிசலைக் குறைக்க முன்மொழியப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையமானது தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு நிலையமாக அமையும் என்றும் இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுஅளவில் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications