தேர்தல் ஜுரம்: மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு- ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு 'பறக்கும்' மோடி!
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரே நாளில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
லோக்சபா தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. தற்போதைய லோக்சபாவின் இறுதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31-ந் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

தற்போது அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் கோவில்களுக்கு பிரதமர் மோடி சென்று தரிசனம் செய்து வருகிறார். அத்துடன் தாம் செல்லும் மாநிலங்களில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைத்து தேர்தல் பிரசாரங்களையும் முன்னெடுக்கிறார் பிரதமர் மோடி.
கேரளா மாநிலத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாளை ஜனவரி 19-ந் தேதி மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என ஒரே நாளில் 3 மாநிலங்களுக்கு பறக்க உள்ளார். பிரதமர் மோடி நாளை காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கர்நாடகா மாநிலம் கலபுர்கி விமான நிலையத்துக்கு காலை 9.35 மணிக்கு சென்றடைவார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் செல்கிறார் மோடி. சோலாப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் கலபுர்கி திரும்புகிறார்.
கலபுர்கி விமான நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் புறப்பட்டு பெங்களூர் சர்வதேச விமான நிலையத்துக்கு பிற்பகல் 2.10 மணியை சென்றடைவார். பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக பயணித்து மாரனஹள்ளி போயிங் விண்வெளி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு நாளை மாலை 4 மணிக்கு பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் தமிழ்நாட்டின் சென்னைக்கு வருகை தருகிறார். தமிழ்நாட்டில் கேலோ விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பது, ஶ்ரீரங்கம்- ராமேஸ்வரம் கோவில்களில் வழிபாடு நடத்துவது உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்கள். பிரதமர் மோடியின் சூறாவளி பயணத்தை முன்னிட்டு 3 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications