சதுரங்க வேட்டை படம் பார்த்தீங்கல்ல?.. அதே மாதிரி மோசடி.. 10 லட்சம் வரை சம்பாதித்த காதல் ஜோடி
சென்னை: சென்னையில் ஃபேஸ்புக் மூலம் விலை உயர்ந்த செல்போன்களை பாதி விலைக்கு விற்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட நபர்களை ஏமாற்றியதாக இளம் காதல் ஜோடி கைது செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை பயன்படுத்தி கொண்ட மோசடி கும்பல் பல்வேறு வகைகளில் மோசடி செய்து பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.
குறிப்பாக ஓ.எல்.எக்ஸ் மோசடி, ஓடிபி மோசடி, ஆன்லைன் மோசடி என்று புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் தற்போது சதுரங்க வேட்டை பட பாணியில் பொதுமக்களின் ஆசையை தூண்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக காதலர்கள் இருவரை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரியர்
கடந்த ஜனவரி மாதம் 2ஆம் தேதி கிண்டியை சேர்ந்த சூர்யகுமார் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விலையுயர்ந்த செல்போனை குறைந்த விலையில் வழங்குவதாக விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். அதனை நம்பி விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசிய போது உடனடியாக கொரியர் மூலமாக செல்போன் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

12 ஆயிரம் ரூபாய்
மேலும் போனுக்கு பாதி விலையாக ரூ 12 ஆயிரத்தை கூகுள்பே அல்லது போன் பே மூலம் அனுப்புமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதை நம்பிய சூர்யகுமார் 12 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த எண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நீண்ட காலமாக செல்போன் வராமல் இருந்தது.

துண்டிப்பு
இதனால் சந்தேகமடைந்த சூர்யகுமார் அந்த எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய போது இணைப்பு துண்டிக்கப்பட்டு இவருடைய எண்ணே பிளாக் செய்யப்பட்டுவிட்டது. இதையடுத்து சூர்யகுமார் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வங்கிக் கணக்கு
புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் பொதுமக்கள் பலர் இதே போல் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தது தெரியவந்தது. இதனையடுத்து சைபர் கிரைம் போலீஸா மோசடி கும்பல் பயன்படுத்திய வங்கிக் கணக்கு மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை வைத்து மோசடிகாரர்களை தேடியுள்ளனர்.

மோசடி
அப்போது குரோம்பேட்டை நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (23) குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் இவரது காதலியான பம்மல் பகுதியை சேர்ந்த நளினி என்பவருடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததால் நளினியையும் போலீசார் கைது செய்தனர்.

பணம் சம்பாதிக்க..
விசாரணையில் அரவிந்த் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் தவித்து வந்ததாகவும், பின்னர் எளிதாக பணம் சம்பாதிக்க இந்த மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். முகநூலில் குறைந்த விலையில் செல்போன் தருவதாக கூறி பொதுமக்களின் ஆசையை தூண்டும் வகையில் விளம்பரம் பதிவிட்டதாகவும், அதனை நம்பிய பல நபர்கள் தன்னை தொடர்பு கொண்டு செல்போன் கேட்ட போது பாதி பணத்தை செலுத்தினால் கொரியர் மூலமாக செல்போன் அனுப்புவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

மோசடி
இது மட்டுமில்லாமல் வெளியூரில் தான் இருப்பதாக கூறி விமான நிலையத்திற்கு வந்து செல்போன் பெற்று கொள்ளுங்கள் எனவும் மோசடி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு அரவிந்தை இதே போல் மோசடி செய்த குற்றத்திற்காக கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மோசடி
பின்னர் காதலி நளினி உதவியுடன் பிணையில் வெளியே வந்துள்ளார். ஆனால் சிறையிலிருந்து வந்த பின்பும் மீண்டும் இதே மோசடியில் காதலியுடன் ஈடுபட்டு வருவதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். போலீசார் கைது செய்த போது அரவிந்தின் வங்கி கணக்கை முடக்கியதால் காதலி நளினியின் வங்கி கணக்கை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரூ 10 லட்சம்
இவர்கள் இணைந்து கடந்த 1 வருடத்தில் பல நபர்களை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் இருவரிடமிருந்து செல்போன்கள், ஏடி.எம் கார்டுகள், இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.