"கருவறுப்போம்!" சர்ச்சை வீடியோ- நாமக்கல் கொமதேக வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம்! புது வேட்பாளர் யார்
சென்னை: நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் கொமதேக சார்பில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவருக்குப் பதிலாக மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் எப்போதும் லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்டத்திலேயே நடக்கும் நிலையில், இந்த முறை முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.
திமுக கூட்டணி: லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில் திமுக கூட்டணி தான் முதல் முறையாகக் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என அனைத்தையும் முடித்து வேட்பாளர்களையும் அறிவித்தது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அந்த தொகுதிக்கான வேட்பாளரைச் சமீபத்தில் அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் சூரியமூர்த்தி நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே நாமக்கல் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. விருப்ப மனு பெற்று, நேர்காணல் நடத்தி. அதன் பின்னர் ஆட்சிமன்ற குழுவினரால் வேட்பாளர் தேர்வு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.
பழைய வீடியோ: ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவைச் சேர்ந்த கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி, கடந்த 2001 மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியிலும், 2006ஆம் ஆண்டு வெள்ளக்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக எஸ்.சூரியமூர்த்தி தொடர்பான பழைய வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வந்தது.
அதில் அவர் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம் என்பது போல பேசி இருந்தார். அவரது இந்த பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அது பொய்யான வீடியோ என்றும் தான் அது போல பேசவில்லை என்றும் எஸ்.சூரியமூர்த்தி விளக்கமளித்திருந்தார்.
வேட்பாளர் மாற்றம்: இந்தச் சூழலில் தான் கொ.ம.தே.க நாமக்கல் வேட்பாளர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியமூர்த்திக்கு பதிலாக நாமக்கல் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications